title


சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்

எவ்வளவுதான் செல்வச்செழிப்புடன் இருந்தாலும், மிகப்பெரிய மன உறுதி கொண்டிருந்தாலும், தேர்ந்த கல்வி ஞானமும் கேள்வி ஞானமும் வாய்க்கப்பெற்றாலும், வாழ்க்கையின் மாயச்சுழலில் கட்டுண்டுதான் தீரவேண்டும். நாம் மண்ணில் பிறந்த கணத்திலேயே நமக்கான சிக்கல்களையும் காலம் சூல் கொண்டுவிடுகிறது. பிறக்கும் காலமும் வாழ்நாளும் மட்டுமே மாறுபடும். மற்றபடி, மண்ணில் பிறந்த எவருக்கும் அவருக்கான கசப்பு, அவருக்கான வலி, அவர் பங்கு துயரம் நிச்சயம் உண்டு. என்றபோதும் அவற்றையும் தாங்கவும், தாண்டவும் ஒரு பரிகாரம் - இல்லை இல்லை வாழ்க்கைமுறை இருக்கிறது. அது வேறொன்றுமில்லை “அன்பு செய்தல்”. சக உயிரின் வலியை, வேதனையை, பசியை உணர்தலும், அதைப்போக்க தன்னாலான துரும்பை நகர்த்தலும் கூட போதுமானது.

என்னைப்பொறுத்தமட்டில் அப்படி அடுத்தவர் வலியை தன்வலியாக உணரவைப்பது கலை. சக உயிரின் துயரன்றி, வேறு சரியான பேசுபொருள் எந்தக்கலைக்கும் கிடையாது. அப்படி அடுத்த மனிதனின் வாழ்வின் அவலத்தை, அவன் அன்றாடம் விழுக்கும் கசப்பின் ஒரு துளியை நமக்கும் படையலிட்டிருக்கிறார் திரு. நாஞ்சில் நாடன் அவர்கள். சூடிய பூ சூடற்க எனும் நாஞ்சில் நாடனின் சிறுகதைத் தொகுப்பை சமீபத்தில்தான் படித்தேன். தொகுப்பின் பெரும்பாலான கதைகள் வாழ்வின் இருளை, அடுத்த வயிற்றின் பசியை பதிவுசெய்பவை. நாஞ்சில் நாடன், தன் தேர்ந்த கதை சொல்லும் உத்தியால், அவரது அற்புத விவரணைகள், மிரட்டாத மொழி வாயிலாக கதைக்களனில் நம்மையும் ஒரு மெளனசாட்சியாக்கி விடுகிறார். இடையிடையே வரும் கும்பமுனியின் கதைகள்தான் நம்மைக்கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகின்றன.

என்னுடைய வீட்டிலிருந்து பணிக்கு செல்ல நான் ஒரு மணி நேரம் பேருந்தில் பயணிக்க வேண்டும் (சென்று வர மொத்தம் இரண்டு மணி நேரங்கள்). நான் இந்த தொகுப்பின் பெரும்பாலான கதைகளை அப்படியான பேருந்துப்பயணங்களில்தான் வாசித்தேன். காலை நேரப்பயணங்களை நான் கும்பமுனியுடன்தான் செலவழித்தேன். கும்பமுனியின் நகைக்கவைக்கும் செய்கைகளால் என்னுடைய முழு நாளுக்குமான புத்துணர்ச்சியை நான் அடைந்தேன். ஆனால் அதுவல்ல சிறப்பு, இத்தொகுப்பின் மற்ற கதைகளை நான் வாசித்தது இரவு வேளைகளில், இருவரோ மூவரோ அமரவேண்டிய இருக்கையில் நான் மட்டும் அமர்ந்துகொண்டு, கோவையிலிருந்து அவினாசி வரும்வரையில். இரவுகளில், அடுத்தவன் பார்ப்பான் எனும் வெட்கமின்றி, துயர், பசி உரைக்கும் கதைகள் அனைத்தையுமே கலங்கிய விழிகளுடன் படித்தேன். இந்தொகுப்பின் கதைகள் நமக்குச்சொல்ல விரும்புவது, நம்மிடமிருந்து யாசிப்பது மனிதத்தை மட்டுமே.

சக மனிதனின் துயரை உணர்ந்துகொள்ளும் பக்குவத்தை இலக்கியம் நமக்கு நிச்சயம் தரும். அடுத்தவன் வலியை, கசப்பை தனதென எண்ணி கலங்குபவன் நிச்சயம் தன்னுடைய வலியை, கசப்பை கடக்கிறான்.

அப்படிக்கடக்க உதவும் மிக முக்கியமான தொகுப்பு திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய “சூடிய பூ சூடற்க” – தமிழினி வெளியீடு.

No comments: