title


டர்க்கி டவல் - II


முதல் பாகம் இங்கே => டர்க்கி டவல் - I

என் கண்ணில் பட்ட அது ஒரு “டர்க்கி டவல்”. நீண்ட நாட்களாகவே ஒரு டர்க்கி டவல் வாங்கவேண்டுமென்ற ஆசை எனக்கு. எனவே கால்கள் தானாக நகரத்துவங்கின.

”வீட்ல ஊருப்பட்ட துண்டு கெடக்குது இதுல இது வேறயா?” என்ற அப்பாவை சமாதானப்படுத்த காரணங்களை (கட்டுக்கதைகளை !?) அடுக்கத்துவங்கினேன்.

அப்பா, மத்த துண்டு மாதிரி இல்லீங்கப்பா இது டர்க்கி டவல். நெறையா ஈரத்த உறிஞ்சும். சீக்கிரமா துவட்டிடலாம். அது மட்டுமில்லீங்கப்பா இது சீக்கிரமா காஞ்சிடும் (ஓ அப்படியா ?). மழக்காலம் வேற… என என்னமோ டர்க்கி டவல் ஒரு உயிர் காக்கும் மருந்து ரேஞ்சுக்கு (அளவேயில்லாமல்) அளந்துவிட்டுக் கொண்டிருந்தேன். அப்பா சமாதானமடைந்தாரோ இல்லையோ நான் சொல்லும் நான் லீனியர் கதைகளை கேட்க முடியாமல் ஒரு வழியாக துண்டுகளைப் பார்க்க ஆரம்பித்தார். அலசி ஆராய்ந்து ஒரு டர்க்கி டவலையும் பில்லில் சேர்த்த பின்தான் மூச்சே வந்தது.

சேலை, துண்டு மற்றும் லுங்கிகளுடன் (கூடவே கலர் கலர் குளியல் கனவுகளுடனும்) வீடு வந்தேன். அம்மா, அத்தை இவர்களுடன் என் தர்மபத்தினியும் புடவை, லுங்கிகளை பார்க்கலானாள். எதேச்சையாக “டர்க்கி டவலை” பார்த்தவள் அதிர்ச்சியாகி (என்னவோ வெடிகுண்டை பார்த்தமாதிரி) என் அப்பாவிடம் கேட்டாள் ( நம்மள கேட்டா உருப்படியா ஒண்ணும் சொல்ல தேறாதுன்னு அவளுக்கு தெரியும்)

“இத எதுக்குங்க மாமா வாங்கினீங்க ?”

“இல்லமா இது ஏதோ நல்லா ஈரம் உறிஞ்சும், சீக்கிரம் காயும்.. அப்படி இப்படின்னு ஏதேதோ சொன்னான்; அதான்” அப்பா போட்டு உடைத்துவிட்டார். இனி என் முறை

கோடீஸ்வரன் போட்டியில் பதினாலாவது கேள்விக்கு பதில் சொல்லும் பாவனையில் படுவேகமாய் யோசித்துக்கொண்டிருந்தேன். அதற்கு அவசியமேயில்லாமல் உண்மையைக் கண்டறிந்து அதை எல்லோர் முன்னிலையிலும் போட்டு உடைத்துவிட்டாள் என் மனைவி.

“அதெல்லாம் சும்மாங்க மாமா. கணேஷ் (என் நண்பன்” வச்சிருப்பாரு, ஒடனெ இவருக்கும் வாங்கணும்னு தோணிருக்கும் அவ்வளவுதான்.”

“என்ன கொடுமை சார் இது ?”

No comments: