title


CKK அறக்கட்டளை - இலக்கிய விருது வழங்கும் விழா 2012


நேற்று (29-07-2012) ஈரோட்டில் “CKK அறக்கட்டளை”யின் இலக்கிய விருது வழங்கும் விழா “வடிவு சுப்பிரமணியன் திருமண மண்டபத்தில்” நடந்தது. இவ்வருடம் விருது வழங்கப்பட்டது எழுத்தாளர் திரு. ”ஜெயமோகன்” அவர்களுக்கு. காலை முதல் மதியம் வரை “கவியரங்கம்” பின்னர் மாலையில் விருது வழங்கும் விழாவும் தொடர்ந்து கருத்தரங்கமும் என்பது நிகழ்ச்சி நிரல்.

என்னுடைய வாசிப்பு அனுபவத்தில், நான் வாசித்ததிலேயே ஆகச்சிறந்த படைப்பாளிகளின் பட்டியலில் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு சிறப்பிடம் உண்டு. ஆன்மீகம் துவங்கி அட்டகாசமான நகைச்சுவை வரை இந்த மனிதன் எழுத்தாத துறைகளே இல்லை எனலாம். எந்தப் பொருளைப்பற்றி (Subject) எழுதினாலும், அந்தத் தலைப்பில் தவிர்க்கவே முடியாத முக்கியமான ஒரு எழுத்தாக இவரின் எழுத்துக்கள் இருக்கும். இதுநாள் வரை நான் திரு.ஜெயமோகன் அவர்களின் எழுத்தை வாசித்துள்ளேன். ஒரிரு முறை அவரது பேச்சை “Youtube”ல் கேட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை அவரை நேரில் பார்த்ததேயில்லை என்பது எனக்கு ஒரு வருத்தமாக இருந்தது. அந்தக் குறை நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

மாலை 5 மணியளவில் துவங்கிய விழாவுக்கு நானும் சென்றிருந்தேன். ஒரு சிம்மாசனம் போன்ற நாற்காலியில் அமர்ந்திருந்தார் திரு. ஜெயமோகன். சம்பிரதாயமான வரவேற்புரைகளுக்கு பின்னர் விருது வழங்கப்பட்டது. பின்னர் ஏற்புரை நிகழ்த்தினார் திரு. ஜெயமோகன். மிகச் சிறிய பேச்சுதான் ஆனால் சிறப்பான பேச்சு. தான் துறவியாக திருவண்ணாமலை மற்றும் காசியில் அலைந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை சொன்னார். ஒரு கதையின் வலிமையை, கதை சொல்லியின் பெருமையை ”காசி”யில் தன் கண்முன்னே நடந்த சம்பவத்தின் வாயிலாக விளக்கினார். அற்புதமான ஒரு பேச்சு. எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. தொடந்து கருத்தரங்கம். திரு.ஆறுமுகத்தமிழன், திருமதி.வெண்ணிலா, திரு.இறையன்பு, திரு.பிரபஞ்சன் என அற்புதமான பேச்சாளர்கள் சிறந்த உரையாற்ற விழா 9 மணியளவில் நிறைவுற்றது.

இந்த நாள் இனிய நாள்….

No comments: