title


டமார் - I


டமார்……”

நேற்றிரவு 10:50 மணிக்கு கோவை காந்திபுரத்திலிருந்து அவினாசி வழியாக திருப்பூர் செல்லும் அரசுப் பேருந்திலிருந்து அந்த சத்தம் வந்தது 11 மணிக்கு. பேருந்தின் பின்புற சக்கரங்களின்ரீப்பர்உடைந்ததால் வந்த சத்தம். விளைவாக பின்புற சக்கரங்கள் கட்டுப்பாட்டை இழந்தன. மொத்தத்தில் அந்த பேருந்து இப்போதைக்கு கிளம்பாது. இந்தப் பேருந்தை விட்டால் திருப்பூர் புது Bus Stand செல்லவும் அவினாசி – திருப்பூர் வழியாக உள்ள ஊர்களுக்கு செல்லவும் கடைப்பேருந்து இரவு 11:35 அளவில் மட்டுமே உண்டு. பேருந்தில் ஏறத்தாழ 20 பேர் இருந்தோம் அதில் 3 பெண்கள். நடத்துனரிடம் சென்று வாக்குவாதத்தை துவங்கினார்கள் சிலர்.

“சார், இப்ப என்ன சார் பண்ணுவீங்க?”

“இருங்க சார், ஏதாவது சரி செய்ய முடியுமான்னு பாக்கலாம்” நம்பிக்கையாகச் சொன்னார் நடத்துனர்.

“இதெல்லாம் வேலைக்காவாது; மெக்கானிக் வரணும்; இல்லாட்டி நாமதான் டிப்போவுக்கு போகணும்” என உண்மையைப் போட்டுடைத்தார் ஓட்டுனர்.

“இல்லாட்டி டிப்போவுக்கு போன்போட்டு வேற பஸ்ஸாவது வர சொல்லுங்க சார்” இப்போது குரல்களின் எண்ணிக்கை அதிகமாகி இருந்தது.

”ஹலோ.. சார் நான் “ராஜ்” பேசறங்க…. 7286(பஸ் நம்பர்) திருப்பூர் பஸ் கண்டக்டர்; இங்க பஸ்ல பேக் வீல் ரீப்பர் கட்டாயிடுச்சு; பஸ் ஓட்டறதுக்கு கண்ட்ரோல் இல்லீங்க..ஒரு 20 பேர் இருக்காங்க டிக்கட் வேற அடிச்சாச்சு; அதான் வேற பஸ் அனுப்ப சொல்லலாம்னு…….
………………………………….
.செரிங்க…
………………………..
.செரிங்க… சீக்கிரம் கூப்பிடுங்க” என போனை கட் செய்தவர் எங்களிடம் சொன்னார்.

“சார், அவினாசி, கருமத்தம்பட்டி போறவங்க எல்லாரையும் ஈரோட்டு பஸ்ல அனுப்பிடலாம்; திருப்பூர் போறவங்க கொஞ்சம் Wait பண்ணுங்க”.
தொடர்ந்து வந்த ஈரோடு பஸ்ஸில் ஒரு 6 பேர் கிளம்பிவிட இப்போது இருப்பது 14 பேர் மட்டுமே. ஒரு 15 நிமிடங்களான பின்னரும் எந்த ஒரு போனும் வரவில்லை. இப்போது நாங்கள் நடத்துனரைப் பார்க்க புரிந்துகொண்ட அவர் போனை எடுத்தார். உடனே புத்திசாலி பயணி ஒருவர் (இந்தமாதிரி அனுபவம் நிறைய உள்ளவர் போல) சொன்னார்.
“சார் பஸ் எதுவும் டிப்போல இல்ல… அப்படி இப்படின்னு நிறைய சாக்கு சொன்னாங்கன்னா அவினாசி வழியாப்போற கடைசி பஸ்ஸையாவது இதே வழியில வரச்சொல்லுங்க.

பேசத்துவங்கினார் நடத்துனர்

“சார் அதான் பஸ் கண்ட்ரோல் இல்லைன்னு போன் பண்ணியிருந்தேனே 7286 கண்டக்டர்; பேசஞ்சர்ஸ் எப்ப பஸ் வரும்னு கேட்கிறாங்க சார்.
…….
சார் இல்லீங்க அப்படின்னா அந்த கடைசி பஸ்சையாவது “Womens Polytechnic” வழியா வரசொல்லுங்க. கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க சார்” சலித்துக்கொண்ட நடத்துனர் எங்களிடம் சொன்னார்

“டிப்போல எந்த பஸ்ஸும் இல்லயாமாங்க…கடைசிபஸ் கண்டக்டர் நம்பர் தரோன்னாங்க. பாப்போம்”. ஒரு 5 நிமிடம் தாண்டியும் எந்த Callம் வரவில்லை. இப்போது நாங்கள் சொல்லவேண்டிய தேவை ஏற்படவில்லை அவரே போன் செய்து கண்டக்டர் நம்பரையும் வாங்கிவிட்டார்….."



No comments: