title


டர்க்கி டவல் - I



அம்மா..வீட்ல ஒரு லுங்கி கூட நல்லா இல்ல; புதுசா வாங்கோணும்சலித்தவாறே கத்திக்கொண்டிருந்தேன்.

“இப்ப கூட அவநாசில புதுசா ஜவுளிக்கடை ஆரம்பிச்சிருக்காங்க; நாலஞ்சு நாளா நல்ல கூட்டம், வெல யெல்லாம் கூட ரொம்ப கம்மியாம்; அங்க போயி வாங்கலாம்என ஐடியா கொடுத்தார் அப்பா. பெரிய அளவில் எந்த எதிர்ப்புமில்லாமல் ஒரு மனதாக லுங்கி வாங்கும் மசோதா தாக்கலானது. இரவு ஒரு 9 மணியளவில் நானும் அப்பாவும் அவிநாசி தேனு சில்க்ஸுக்கு சென்றோம். இந்த நேரத்துக்கு போனாதான் கூட்டம் கம்மியா இருக்கும் என ஐடியா மணி ரேஞ்சுக்கு திட்டமிட்டிருந்தோம். நினைத்தபடியே கடையில் கூட்டம் கம்மிதான் ஆனால் எதிர்பாராத வகையில், வாடிக்கையாளர் கூட்டம் மட்டுமின்றி நேரமாகி விட்டதால் கடையில் பணியாளர்களின் கூட்டமும் நெம்பக் கம்மிதான். போனவுடனே நேராக லுங்கி செக்‌ஷனுக்கு போனோம். எங்களுக்கு உதவ அவசர அவசரமாக ஓடி வந்தார் ஒரு நல்ல பணியாளர் (சரி.. அவரு வாங்கிவந்த வரம் அப்படி.... தானா தேடிப்போய் பிரச்சனைல சிக்கவங்கள நாம என்ன செய்யமுடியும் சொல்லுங்க).

நானும் அப்பாவும் லுங்கி வகைகளை அலசி ஆராய்ந்தோம். சும்மா சொல்லக்கூடாது கடை சிப்பந்தியும் நிறைய ரகங்களை ஆர்வமாக எடுத்துக்காட்டினார் (ஆரம்பத்தில்). நேரம் போவதே தெரியாமல் நானும் அப்பாவும் கருமமே கண்ணாயினோம். சின்ன கட்டம், பெரிய கட்டம், டார்க் கலரு, பொடிக்கலரு, வரிவரியா வந்தது, ப்ரிண்டட் என மாற்றி மாற்றி நாங்கள் தேடிக்கொண்டிருந்ததை “லுங்கில என்னங்க டிசைன் வேண்டிக்கிடக்கு ? என சலித்தவாறே சொன்னபடி பார்த்துக்கொண்டிருந்தார் கடை சிப்பந்தி. அவரின் குரலைப் புறக்கணித்து தேடித் தேடி ஒருவழியாக மூணு லுங்கிகள் எடுத்தோம். (அப்படியும் ஒரே மாறி லுங்கிகளாக அமைந்துவிட்டதென்று அம்மாவுக்கு வருத்தம்). சரி இனி கிளம்பவேண்டியதுதான் என எண்ணிய போது அப்பா கைகாட்டினார் புடவைகள் வரிசையை.

”எப்படிப்பாத்தாலும் மத்த கடைகள விட அம்பது நூறாவது கம்மியா இருக்கும். வா சும்மா பாக்கலாம்” என புடவைகளை நோக்கி நகர்ந்தார். ”லுங்கிக்கே டிசைன் பாத்தவங்க பொடவைய எப்ப எடுத்து முடிப்பாங்களோ?” என்றெண்ணியோ என்னவோ யாரும் பக்கத்தில் கூட வரவில்லை. என்றாலும் மனம் தளராமல் சும்மா பார்த்த வகையில் நாலு சேலைகளை எடுத்தோம். சட்ட பேண்டெல்லாம் கூட நல்லாதான் இருக்கும் இன்னொரு நாளக்கி எடுத்துக்கல்லாம் என சொன்னபடியே (இந்த சமயத்தில் கடைச்சிப்பந்தியின் முகத்தில் தென்பட்ட சந்தோசத்தை விவரிக்க தமிழில் வார்த்தைகளில்லை. தமிழ் தவிர வேறு மொழிகளில் விவரிக்கும் எண்ணமுமில்லை. பொழச்சுபோங்க…) நடக்கத்துவங்கும்போதுதான் அது என் கண்ணில்பட்டது. (தொடரும்)

No comments: