(இது 2008 ல் ஒரு மழை நாளின் அனுபவம்) ஏறத்தாழ 3 நாட்கள், 72 மணி நேரங்கள் சென்னை முழுவதும் மழை பெய்துகொண்டேயிருந்தது. அதன் எதிரொலியாக அலுவலகத்திலிருந்து 2 மணிக்கே வீட்டுக்கு வந்தாகிவிட்டது. பொதுவாக விடுமுறை நாட்களிலும் நான் மதியம் உறங்குவதில்லை. மதியம் உறங்கினால் குண்டாகி விடுவேனென்பதே காரணம். (இப்ப மட்டும் என்ன ஒல்லியாவா இருக்கோம்....போங்கப்பு).
சரி நீண்ட நாள் தவணையாக இருக்கும் “உபபாண்டவம்”
(எஸ். ராமகிருஷ்ணன்) நாவலை இன்று படித்து முடித்துவிடவேண்டுமென எண்ணி அமர்ந்தேன். ஒரு பக்கம் “SCJP” புத்தகம் கண்ணடித்து அழைத்தது, என்றாலும் மதிய உறக்கத்தை தவிர்க்கவேண்டி SCJP யை தள்ளி வைத்தாகிவிட்டது. நான் மட்டும் மருத்துவராக இருந்திருந்தால் தூக்கம் வராத அனைவரையும் SCJP மற்றும் INS புத்தகங்கள் படிக்கவைத்திருப்பேன். (என்னமா தூக்கம் வருது.... யப்பா).
உபபாண்டவம் முழுதாய் ஒரு பக்கம் தான் படித்திருப்பேன், மித்து வந்தாள். ( மித்து – பக்கத்து வீட்டில் வசிக்கும் வட இந்தியத் தம்பதியின் 6 வயது செல்ல மகள்). பொதுவாக நான் ஆசையாக அழைக்கும் போதெல்லாம் “ஐயோ .. பூச்சாண்டி” எனும்படி பயந்து ஓடும் மித்து இன்று தானாக அறைக்கு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. வந்தவள் நேரே என் செல்போனை எடுத்தாள். அதன் முகப்பிலிருந்த என் பெற்றோர் புகைப்படம் பார்த்தவள் கேட்டாள்....
“இவங்க யாரு ?”
சரி ஹிந்திகார குழந்தையிடம் ஹிந்தியில் பேசுவோமே (குழந்தையிடம் மட்டுமே பேசுமளவுதான் எனக்கு ஹிந்தி தெரியும்...) என்றெண்ணி சொன்னேன்....
“ஹமாரா மாதாஜி, பிதாஜி”
“அய்யே... உனக்கு தமிழ் தெரியாதா ? ” என்றவள், பதிலை எதிர்பாராமல் என் கையிலிருந்து கையிலிருந்து “உபபாண்டவம்” பிடுங்கிக் கொண்டாள்.
“பொம்மை பாக்குறியா?’ என்றவள், பின் அட்டையில் எஸ்.ரா வைப் பார்த்தாள்.... என்னைப் பார்த்தாள்.... சற்றுப் பொறுத்து கேட்டாள்
“இது யாரு உன் மாமாவா?”
எஸ்.ரா வுக்கு தலையில் கொஞ்சம்தான் முடியிருக்கும், எனக்கும் அப்படியே. ஒரு வேளை அதைவைத்து கேட்கிறாளோ.... என்றெண்ணிக் கொண்டு முடியை தொட்டுப் பார்த்தேன். நல்ல வேளை நேற்று இருந்த அளவு குறையாமல் இருந்தது. இடைப்பட்ட நேரத்தில் மித்து கையில் அகப்பட்டது ”ஜுனியர் விகடன்”. அட்டையில் சிரித்துக் கொண்டிருந்தார் மு.க.அழகிரி.
“மாமா, இது யாரு ?”
“அழகிரி” என்றேன்.
அடுத்த நிமிடம் ஜு.வி-ஐ கிழித்துவிட்டு கேட்டாள்...
“அழகாய் கிழிச்சேனா?”
அழகிரி எப்படி ”அழகாய் கிழி” ஆனதென்று தமிழன்னை மீது சத்தியமாய் எனக்கு விளங்கவே இல்லை....ஆடிப் போய் அமர்ந்திருந்தேன்.
வழக்கம் போல் என்னை புறக்கணித்த மித்து பார்வையில் பட்டது, என் அறை நண்பன் ஒட்டி வைத்திருந்த “காதலில் விழுந்தேன்” நடிகை சுனேனா புகைப்படம். (அந்தப் படத்தில் 70% காட்சியில் சுனேனா பிணமாக வருவார்... அந்த நடிப்பில் என் அறை நண்பன் மணி தொப்புகடீர் என்று மயங்கி விழுந்து சுனேனாவின் ரசிகனானதும்... தினசரி எழுந்தவுடன் அந்த புகைப்படத்தில் விழிப்பதும்.... அந்த ராசியோ என்னவோ இப்போது அமெரிக்காவில் இருப்பதும் தனிக்கதை…. மீண்டும் மித்துவுக்கு வருவோம்). சுனேனா படத்தைப் பார்த்த மித்து கேட்டாள்...
“இது யாரு உங்க அக்காவா?”
“சீ.. சீ... இல்ல இல்ல.. இது மணியோட (அறை நண்பன்) அக்கா” என்றேன். பதிலை எதிர்பார்க்காததால் மித்துவிடமிருந்து மீண்டும் வந்தது ஒரு அணுகுண்டு...
“உங்க தாத்தாவா?” என்றபடி மித்து காட்டிய நக்கீரனில் சிரித்துக் கொண்டிருந்தவர் (என்னைப் பார்த்து !) கலைஞர். இதென்னடா சத்திய சோதனை என்று மீண்டும் முடியின் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டேன்.
“இது யாரு? உங்க........” மித்து முடிக்குமுன் அவள் வாயைப் பொத்திக் கொண்டு சொன்னேன்.... “MY FAMILY TOTAL DEMAGE” .
”சரி விடு மாமா... நான் போறேன், எனக்கு நெறைய வேலையிருக்கு” சலித்தபடியே சென்ற மித்துவைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன நினைத்தாளோ திரும்பி வந்து சொன்னாள்..
“நீ இந்த புக்கெல்லாம் படி, நான் அப்புறமா வந்து TEST வைக்கிறேன்.... டாடா”.
அய்யய்யோ எற்கன்வே SCJP, INS என்று என் TEST வரிசை நீண்டு கொண்டேயிருக்க...இதில் ”ஜீனியர் விகடன்”, “நக்கீரன்” லகூட TEST ஆ என்றெண்ணி 4 மணிக்கு அயர்ந்து படுக்கையில் விழுந்தேன். கனவெல்லாம் மித்துவின் ”இது யாரு? உங்க ....” துரத்த அலறி அடித்து எழுந்து பார்த்தேன்.
மணி 7 ஆகியிருந்தது.... “உபபாண்டவம்” அட்டையில் எஸ்.ரா என்னை பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.