title


பெசன்ட் நகரில் ஒரு அதிகாலை - 1

” என்ன சகல, நாளைக்கு காலைல நேரத்துல சூரியோதயம் பார்க்க பெசன்ட் நகர் போலாமா ?“ என கேட்டபடி என்னைப் பார்த்தார் என்னுடைய சகலை ( சகலை - மனைவியின் அக்கா அல்லது தங்கையின் கணவர்).

2009 நவம்பர் மாதத்தின் கடைசி சனிக்கிழமை சென்னை TTK சாலை, ”Sachin Ka Dhabha” வில் அமர்ந்து தந்தூரி சிக்கனுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தவன் கலக்கமாய் பார்த்தேன். பொதுவில் எனக்கும் இந்த மாதிரியான விசயங்களில் ஆர்வமிருந்தாலும் விடுமுறை தினங்களில் அதிகாலை என்பதே 9 மணிக்கு மேல் தான் என்பது என் மற்றும் என் மனைவியின் அரிய கண்டுபிடிப்பு. நிலைமை இப்படி இருக்க ”ஞாயிறு அதிகாலை சூரியோதயமா...” என அரண்டாலும் குலசாமியை வேண்டிக்கொண்டு “அதுக்கென்ன சகல, தாராளமா போலாமே” என பலியாடு ரேஞ்சுக்கு தலையாட்டி வைத்தேன்.

அன்றிரவு வீடு திரும்பினதும், “மும்பை எக்ஸ்பிரஸ்” படம் மற்றும் பேச்சு இப்படியாக இரவு உறங்குவதற்கு மணி 1 (அதிகாலை ?!) ஆகியிருந்தது.

சரி, ஆன நேரம் ஆயிடுச்சு.. இன்னும் சித்த நேரம் பேசிட்டே இருந்தா விடியக்காத்தால ஆயிடும்...பீச்சுக்கு போய் SUNRISE இல்லாட்டி BRU பாத்துட்டு வந்திடலாம்னு யோசனை பண்ணி திரும்பிப் பார்த்தா எல்லாரும் பாயை விரிச்சு போட்டு படுத்து தூங்க ஆரம்பிச்சுட்டாங்க.

இவ்வளவு தூரம் ஆனதுக்கப்புறம் நாம சும்மா இருந்தா சரிப்படாதுன்னு நானும் படுத்து தூங்கிட்டேன். ஆனா பாருங்க 5 மணிக்கு நான் அலறி அடிச்சு எழுந்து பாத்தா அம்புட்டு பேரும் ரெடியா நின்னாங்க.

பீச்சுக்கு போறதால குளிக்கிற தொந்தரவு இப்பத்திக்கு இல்லைன்னு சந்தோசப்பட்டுட்டு பாத்ரூமுக்குள்ளார போறப்பவே சீக்கிரம், சீக்கிரமுன்னு அவசரப்படுத்தினா என் தர்மபத்தினி. சரி சரி “சிங்கம் தூக்கத்துல சிக்கினா சிட்டுக்குருவி கூட தொட்டு விளையாடச் சொல்லும்” னு நெனச்சுகிட்டு அவசர அவசரமா பல்லு விளக்கி, மூஞ்சி கழுவி, துணியெல்லாம் மாட்டி கிளம்பும்போதே கெடியாரம் மணி 5:30 ன்னு காட்டுச்சு.

வீட்ட பூட்டிட்டு, சகலையும் அவரு வீட்டுக்காரம்மாவும் ஒரு வண்டியிலயும், நானும் என் வீட்டுக்காரம்மாவும் இன்னொரு வண்டிலயும் “பெசன்ட் நகர்” கிளம்பினோம்.

- தொடரும்

No comments: