title


பெசன்ட் நகரில் ஒரு அதிகாலை – 3

ஏறத்தாழ 6 மணி இருக்கும், நாங்கள் நால்வரும் கடலின் முன்பு நின்றிருந்தோம். இன்னும் விடியாத, வைகறை முடியாத கலக்கமான வானம் சாம்பல் நிறத்தில் இருந்தது. கடல் தண்ணீர் சற்றே வெளுத்துப் போன சாம்பல் நிறத்தில் இருந்தாலும் அலைகள் மட்டும் சற்றே வெண்ணிறமாக இருந்தது. சீற்றத்துடன் வந்து பாதம் தடவிப் போகும் அலைகள் குதூகலமாய் ஒலியெழுப்பியபடி விளையாடும் சிறுவர்களை நினைவூட்டியன.

அக்கம் பக்கத்தில் பெரிய அளவு கூட்டம் இல்லாததால் நன்கு அமைதி நிலவியது. ஈர மணலில் புதையப் புதையப் பாதங்கள் அமிழ்ந்திருந்தன. அடிவானத்தின் வர்ணம் மெல்ல மெல்ல மாறத்துவங்கி விடியலின் வரவினைக் கட்டியம் கூறி உரைத்தது. கடலும் வானத்துக்கு நிகராக விடியலை வழிமொழிந்தது. கடல் கொஞ்சமே கொஞ்சம் வெளுத்துப் போன தன் சாம்பல் நிறத்துக்கும் விடை கொடுக்கத் துவங்கியது. கடலலைகளின் வெண்ணிறம் நேரத்தைப் போலவே அதிகமாக ஆரம்பித்தது.

கண்கள் எல்லைகளைக் கடக்க விரும்பி விரியத்துவங்கின. ஒரு உன்னத அனுபவத்தை போதுமான அளவு அள்ளிப் பருகத் தயாராகின. விடியல் இன்னும் சில நொடிகளில் வந்துவிடும் என உள்மனம் சொன்னது. அதை ஆமோதிப்பது போலவே வானில் ஆங்காங்கே பரவிக் கிடந்த கருமையும் காணாமல் போகத்துவங்கியது. அதைப் போலவே சுற்றுப்புறங்களும் விடியலுக்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டன. நகரம் தன் அமைதியை இழப்பதற்கான எல்லா முன்னேற்பாடுகளும் கனகச்சிதமாக செயல்படலாயின. நகரம் அதுவரை தான் அணிந்துவந்த அமைதியையும் அழகையும் கைவிடத்தயாராகிக் கொண்டிருந்தது. எந்த நேரத்தில் விடியல் சட்டென்று புலப்படுமென்ற ஆர்வம் மிகுதியாகிக் கொண்டேயிருந்தது.

ஆனால் இயற்கை மனிதனை விடவும் எவ்வளவோ மேலானது. இதை தன் எல்லா அசைவிலும் காலந்தோறும் காட்டிக்கொண்டேயுள்ளது. அதைத் தான் அன்றும் நிலைநாட்டியது. என்னதான் விழியசைக்க மறந்து காத்துக்கிடந்தாலும் முற்றிலும் விடியல் வந்த தருணத்தை என்னால் வரையறுக்க முடியவில்லை. யாரால் தான் முடியும்? வானம் நன்கு வெளுத்திருந்தது. கடல் நீலம் பாரித்திருந்தது பால் பொங்குவது போல கடலலைகள் பொங்கி வந்தன. காற்றும் சென்னைக்கென வைத்திருக்கும் சிறப்பு முகத்தைக் காட்டத்துவங்கியது (வேறொன்னுமில்ல வெய்யில் அடிச்சதுப்பா..). வழக்கம்போல் தன் இயல்புக்கு கடற்கரையும் நகரமும் வந்திருந்தன. சிறிது நேரம் கடலலைகளில் விளையாடிவிட்டு வீடு திரும்பினோம்.

வரும் வழியில் ஒரு சின்னக் கடையில் குடித்த சூடான தேநீர் தந்த சுகத்தை சொல்லிப் புரியவைக்க என்னால் முடியவில்லை. வெற்றிகரமான எங்கள் பயணம் காலை 7: 30 மணிக்கு நாங்கள் வீடடைந்ததும் முற்றுப்பெற்றது.

----------முற்றும்----------

2 comments:

Anonymous said...

i read all three parts of ur. Besant nagar experience..you can narrate it as a good writer..

wat is ur. mail id

காளீஸ்வரன் said...

Hi my mail id is
kaleeswaran.tk@gmail.com