title


பெசன்ட் நகரில் ஒரு அதிகாலை – 2

நாங்கள் பெசன்ட் நகர் கடற்கரையை அடையும்போது மணி 5:45 இருக்கும். திட்டுதிட்டாய் இருட்டு கொட்டிக்கிடந்தது. கடலலைகளின் இரைச்சல் மட்டுமே எங்கோ தொலைவில் ஒலிப்பது போல் கேட்டது. வண்டிகளை நிறுத்திவிட்டு ஒரு சிறு நடைபயிற்சிக்கு ஆயத்தமாகும் போதுதான் கவனித்தேன், அந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கூட ஏராளமான மக்கள் “வாக்கிங்” சென்றுகொண்டிருப்பதை. அதிலும் பெரும்பான்மை அளவு இருந்தவர்கள் முதியவர்கள் என்பது நிஜமாகவே ஆச்சர்யம் தந்தது. இளைய வயதினர் கூட எழுவதற்கு சிரமப்படும் அந்த அதிகாலை வேளையில் எதையும் பொருட்படுத்தாமல் நடக்கும் அவர்களைப் பார்க்கப் பார்க்க ஆனந்தமாய் இருந்தது.

அதிலும் வயதான தாத்தா ஒருவர் ஒரு கையில் ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு மறுகையில் மிக மிக ஆதரவுடன் தன் மனைவியை அழைத்துச் சென்ற காட்சி எனக்கு வாழ்வின் உன்னதமான தருணங்கள் ஏராளமிருப்பதை உணர்த்தியது.

மெல்ல நடக்கத்துவங்கினோம். வெயில் கொளுத்தும் சென்னையின் அதிகாலைக் காற்று மிக மென்மையாக இருந்தது. முதன்முதலாய் மென்காற்று ஆடைக்குள் ஊடுருவியதும் எடுத்த நடுக்கம் உடல் முழுவதும் பரவலானது. துவக்கத்தில் சற்றே கலக்கமூட்டிய மென்குளிர்காற்று பழகியதும் நல்ல சுகம் தந்தது.

திரும்பிய பக்கமெல்லாம் மெல்லியதாய் இருள் சூழ்ந்திருந்தது. மூச்சை நன்றாக இழுக்கும் போதெல்லாம் அதிகாலைக் காற்று நுரையீரலை சுத்தப்படுத்துவதாய் ஒரு பிரேமை உண்டாவதை என்னால் உணரமுடிந்தது. ஒரு நீளமான கோட்டைப் போல் அமைந்திருக்கும் பெசன்ட் நகர் பீச்சின் நடைபாதையில் நாங்கள் நான்கு பேரும் நடக்கத்துவங்கி இருந்தோம். அந்த நடைபாதை ஏறக்குறைய 1 – 1.5 கி.மீ தூரம் கொண்டது. பேசிக்கொண்டே நடந்ததில் தூரம் பெரிய விசயமாகப் படவில்லை. என்னதான் பேச்சில் லயித்திருந்தாலும் நாங்கள் நால்வருமே இயற்கையின் அழகையும் காணத்தவறவில்லை.

குடும்ப விசயங்கள், பணி மற்றும் தொழில் நிமித்தமான பகிர்தல்கள், வருங்காலம் பற்றிய கனவுகள் இப்படியாக துவக்கமும் முடிவும் ஒரே புள்ளியாக இல்லாமல் ஒரு அமீபாவின் உடலைப் போல நீண்டுகொண்டிருந்தது பேச்சு. பேச்சினூடேதான் நால்வரும் கவனித்தோம், நடக்கத்துவங்கின இடத்துக்கே மீண்டும் வந்துவிட்டதை. அதுமட்டுமின்றி விடியலுக்கான நேரம் நெருங்கி விட்டதைப் போன்ற அறிகுறிகளும் தென்படத்துவங்கின. தரையில் நீண்ட நடையை முடித்துக்கொண்டு, மணலில் கால் புதையப் புதைய கடல் நோக்கி நடக்கலானோம்.

- தொடரும்

No comments: