title


FLASHBACK


அது 2010ஆம் வருடம் ஆகஸ்டு 17 ஆம் தேதி, இரவு ஏறத்தாழ 8 மணி. நான் சென்னையிலிருந்து கோவைசெல்லும் “Intercity Express”-ன் unreserved compartment-ல் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தேன். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நான் “ஈரோடு” செல்லவேண்டும். வண்டி இப்போதுதான் சேலத்தை விட்டு கிளம்பியிருந்தது. அப்போதுதான் அடுத்தடுத்து எல்லோரும் என்னுடன் செல்போனில் பேசியிருந்தார்கள். இருந்தாலும் 5 வினாடிகளுக்கொருமுறை செல்போன் திரையையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன். பதற்றம் கூடிக்கொண்டேயிருந்தது.

பொதுவாகவே நான் பயணத்தை ரசிப்பவன். வாரம் ஒருமுறை சாதாரண அரசுப்பேருந்தில் சென்னையிலிருந்து திருப்பூருக்கு வந்துபோன போதும் அதை நான் மிகவும் “Enjoy” பண்ணியவன்தான். ஆனால் அன்றைய பயணம் அப்படிப்பட்டதல்ல. ஏன், எப்போதுமே எந்த பயணமும் எனக்கு அன்றளவுக்கு சிரமத்தை தந்ததில்லை. நான் அறிவேன்.. அந்த அசதி, வருத்தம், சிரமம் எதுவும் உடல் சம்பத்தப்பட்டதல்ல; மாறாக மனம் சம்பந்தப்பட்டது.

ஏறத்தாழ 4 ஆண்டுகளாக நான் சென்னைவாசி. ஆனால் அந்த 4 வருடங்களில் அன்றைக்கு மட்டும்தான் சென்னை என் சொந்த ஊரிலிருந்து ரொம்பத்தொலைவு என்பது புத்திக்கு உறைத்தது. இத்தனைக்கும் இப்படி ஒரு திடீர் பயணம் வரக்கூடுமென நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் நான் அடைந்த கலவையான உணர்வுகள் என்னுடைய எதிர்பார்ப்புகளைவிட பலமடங்கு வீரியமானவை.

ஒருவழியாக 8:03க்கு அப்பாவிடமிருந்து போன் வந்தது. நடுங்கும் குரலுடன் (உண்மையாகவேதான்!) ”ஹலோ” என்றேன். அடுத்து ஒருவார்த்தை கூட பேசவிடாமல் உற்சாகத்துடன் அப்பா சொன்னார்...

“உனக்கு பையன் பொறந்திருக்கான். சிசேரியன்தான், அருணா, பையன் ரெண்டு பேரும் நல்லாயிருக்காங்க. பொறுமையா வா…”

அந்த நொடியை என்னால் இப்பவும் உணரமுடிகிறது. தொலைவிலிருந்த மலைமீதிருந்து தெரிந்த தீப ஓளியை வணங்கும்போது (அநேகமாக அது திருச்செங்கோடு மலையாக இருக்கலாம்) வழிந்த கண்ணீரின் சூடு இன்னும் இதமளிக்கிறது. இந்த உணர்வை, அனுபவத்தை எல்லோரும் புரிந்துகொள்ளமுடியாது. பணி நிமித்தம் தூரத்தில் குடும்பத்தை விட்டு ஆயிரம் நண்பர்களுக்கு மத்தியிலும் தனித்திருப்பவர்களுக்கு மட்டுமே இது விளங்கும்.

ஈரோடு நிஷாந்த் மருத்துவமனையில் “கார்த்திக்” பிறந்து இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இவன்தான் என்னை என் சொந்த ஊருக்கு கூட்டிவந்தவன். கொஞ்சமாவது என் பொறுப்புகளை உணர்த்தியவன். ஒற்றைச் சொல்லாலே உயிரை உருக்கலாம் என்பதைக்காட்டியவன். இந்த இரண்டு வருடங்களில் ஒர் தகப்பனாக நான் அவனுக்கு கற்றுத்தந்ததைவிட அவனிடமிருந்து நான் கற்றுக்கொண்டதே அதிகம்.

இந்த இரண்டு வருடங்களில் கார்த்திக் எனக்கு உணர்த்திய முக்கியமான ஒரு விசயம்…

“வாழ்க்கை அழகானது” 

1 comment:

Arunamece said...

solla mudiyatha vaarthaikal
happadi ippavavathu life la poruppu vanthirukkkae en kanavarukku :) thanks to God and Karthik