title


சுதந்திரத்தின் நிறம்


சில வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை அது. வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, பில் போடுவதற்காக அவிநாசி கண்ணன் டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்ஸில் நின்று கொண்டிருந்தேன். பில்லிங் கவுண்டருக்கு பக்கமிருந்த ஒரு புத்தக அலமாரியில்தான் முதன்முதல் அந்தப்புத்தகத்தைப் பார்த்தேன். அட்டை கொஞ்சம் சேதமடைந்திருந்தாலும் பக்கங்கள் பழுதின்றி இருந்தன. அந்தப் புத்தகத்தை மட்டுமல்ல, அப்புத்தகத்தில் பேசப்பட்டிருந்தவர்களின் பெயர்களையும் நான் அப்போதுதான் முதன்முதல் கேள்விப்படுகிறேன். ஓரிரு மாதங்கள் கழித்து வீட்டுக்கு வந்த நண்பன், படித்துவிட்டு தருகிறேன் என்று அப்புத்தகத்தை வாங்கிக்கொண்டு சென்றவன் இன்னும் தந்துகொண்டே இருப்பதால், அப்புத்தகத்தை இன்னும் நான் வாசிக்கவில்லை. அதன்பின்னர், அப்புத்தகத்தின் நாயகர்களைப் பற்றி சில செய்திகளிலும் கட்டுரைகளிலும் (குறிப்பாக ஆசிரியர் திரு.ஜெயமோகன் அவர்களின் தளம் வாயிலாக) அடிக்கடி வாசிக்கலானேன். அந்தப் புத்தகம் விகடன் பிரசுர வெளியீடாக வந்திருந்த லாரா கோப்பாவால் எழுதப்பட்ட, “கத்தியின்றி ரத்தமின்றி”.
*
அந்தப் புத்தகத்தை படிக்காத குறைசுதந்திரத்தின் நிறம்புத்தகத்தைப் படித்ததன் வாயிலாக தீர்ந்தது. இந்தப் புத்தகமேகூட கத்தியின்றி ரத்தமின்றி புத்தகத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் என்று நினைக்கிறேன். இப்புத்தகம் காந்தியர்கள் திரு. ஜெகந்நாதன், திருமதி. கிருஷ்ணம்மாள் அவர்களின் வாழ்க்கை வரலாறு. இத்தாலியைச் சார்ந்த லாரா கோப்பா அவர்கள் திரு. ஜெகந்நாதன், திருமதி. கிருஷ்ணம்மாள் இருவரையும் பேட்டி கண்டு, அதை புத்தகமாக இத்தாலி மொழியில் வெளியிட அப்புத்தகம் பின்னர் ஆங்கிலத்தில் “The Color of freedom” எனும் பெயரில் வெளியானது. அதன் தமிழாக்கமேசுதந்திரத்தின் நிறம்”.  
.
காந்தியவாதிகளின் வாழ்க்கை வரலாறு நமக்கு ஒரு காலகட்டத்தின் வரலாற்றையே சொல்லும். குறிப்பாக காந்திய வழிமுறைகளை அதன் சாத்தியக்கூறுகளை, சாதனைகள் மற்றும் எல்லைகளை. இந்தப் புத்தகத்திலும் அத்தகைய வரலாறு உண்டு. என்றாலும் இதில் நான் அறிந்தது இதுவரை வெறுமனே ஒரு பெயராக மட்டுமே தெரிந்துவைத்திருந்தபூதான இயக்கம்பற்றி. கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதன் இருவருமே இந்திய அளவிலான பூதான இயக்கத்தின் களப்பணியாளர்கள் என்பதும் தமிழக அளவில் பூதான இயக்கத்தை முன்னெடுத்தவர்கள் என்பதும் அவ்வியக்கத்தை நாம் தெளிவாக அறிந்துகொள்ள உதவுகின்றன. உண்மையில் பூதான இயக்கத்தின் வெற்றி என்பது பெரும் நிலக்கிழார்களாக இருந்தவர்களின் மனசாட்சியுடன் நேரடியாக அன்பின் மொழியில் உரையாடியதுதான். அப்பெரும்பணியை வினோபா பாவே போன்ற ஆன்மபலம் மிக்க தலைவர் எப்படி செய்தார் என்பதை நாம் அறிந்துகொள்ளும் அதே வேளையில், நடைமுறை சார்ந்த திட்டமிடல்களில் உள்ள போதாமையே அவ்வியக்கத்தின் குறைபாடாகவும் மாறிவிடும் தகவலும் இப்புத்தகத்தில் நேர்மையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நடைமுறை சார்ந்த அணுகுமுறையையே காந்தி கைக்கொண்டிருப்பார் என்பதும் தெரியவருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் தானாக முன்வந்து நிலங்களை தானம் தந்த சம்பவங்களை கண்கலங்காமல் என்னால் கடக்க முடியவில்லை. குறிப்பாக ராமகிருஷ்ண ரெட்டி எனும் மாமனிதனை. உண்மையான ஒரு காந்தியவாதியால் மட்டுமே செய்யமுடிந்த செயல்கள் அவருடையது.
.
நம் வரலாற்றில் மறக்கப்பட முடியாத பெயர் கீழ்வெண்மணி. அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டு போராடத்துவங்கி, 44 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மனிதத்தின் மீதான தீராக்கறை. சில ஆண்டுகள் கழித்து அதே கிராமத்தில் 74 குடும்பங்களுக்கு சொந்த நிலம் பெற்றுத் தந்தது காந்தியத்தின் மூலம் சாத்தியமானதையும், வைக்கம் சத்யாகிரகம் போலவே நிகழ்ந்த ”வலிவலம் சத்யாகிரகத்தை”யும் இப்புத்தகத்தில்தான் நான் முதன்முதலில் கேள்விப்படுகிறேன்.
.
இப்புத்தகம் கவனப்படுத்தும் இன்னொரு முக்கிய பிரச்சனை சூழியல் சார்ந்தது. வளமிக்க நிலத்தை அழித்து உருவாக்கப்படும் இறால் பண்ணைகளால் விளையும் சூழியல் கேடுகள், அதனால் விவசாயக் கூலிகளின் வாழ்வாதாரம் அழிதல், ஒருமுறை இறால் பண்ணையாக்கப்பட்ட நிலம் மீண்டும் விவசாயத்துக்கு திரும்பமுடியாத சிக்கல், கடல் வாழ் உயிரினங்கள் சந்திக்கும் ஆபத்து என இத்தனை பாதகங்கள் இருந்தும் அதிகாரத்தின் துணையோடு நடந்துவந்த இறால் பண்ணைகளை, பன்னாட்டு நிறுவனங்களை, ஒரு சாமானிய காந்தியவாதி எதிர்த்து நின்ற நம் சமகால வரலாறும் இப்புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
*
திருமதி.கிருஷ்ணம்மாள் மற்றும் திரு.ஜெகந்நாதன் இருவரின் வாழ்க்கை வரலாற்றில் நம்முடைய சமூகம் சார்ந்த பிரச்சனைகளும், அதன் தீர்வுகளுமே பெருமளவில் பதிவாகியுள்ளது. படிக்க மிக சுவாரசியமான நடையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இப்புத்தகத்தை வாசித்து முடிக்கையில், ஒரு உண்மை காந்தியவாதிக்கு தனிப்பட்ட வாழ்க்கை என ஒன்று இருப்பதற்கான சாத்தியமே இல்லை எனும் என் எண்ணம் மேலும் வலுப்பெறுகிறது.
*
ஒடுக்கப்படும் மக்களின் பக்கமே எப்போதும் நின்ற, வெறுப்புக்கும் பதிலாக அன்பையே கைக்கொண்ட, வெறும் பெயராகக் கூட நாம் அறிந்துகொள்ளாத ஆயிரமாயிரம் காந்தியவாதிகளையும், அத்தகைய பெருமனிதர்கள் நெஞ்சில் காந்தியம் என்னும் விளக்கை ஏற்றிச்சென்ற அந்த மாமனிதனையும் மீண்டும் மீண்டும் நன்றியுடன் நினைக்க வைத்தது இப்புத்தகம்.
**
சுதந்திரத்தின் நிறம் – லாரா கோப்பா
தமிழில் : B.R.மகாதேவன்
தன்னறம் பதிப்பகம்.

No comments: