title


சங்கிலிப் பூதத்தான்

மனதில் கவலையோ வெறுமையோ கவிழும் தருணங்களில் நீங்கள் நாஞ்சில் நாடனைப் படிக்கவேண்டும். நாஞ்சில் நாடனை என்றால் வாழ்வின் வலிகளைப் பேசும் அவரது கதைகளையல்ல. அது நிலைமையை இன்னும் சிக்கலாக்கிவிடும். அவரது பகடிக்கதைகளை. குறிப்பிட்டுச் சொல்வதானால் அவரது கும்பமுனி கதைகளை. அதற்கினையாகவே மாடன், ஏக்கி, ஏவல் கதைகளும்.
*
நம் மண்ணின் தெய்வங்கள் பேசுவதை நாஞ்சில் நாடனின் சொற்களில் படிப்பது பெரும் பேறு. தெய்வங்கள் என்றால் கோட்டை மதில் கொண்டு, குறித்த வேளை பூஜை கண்டு, நெய்வேத்திய அனுசரனைகள் அனுபவிக்கும் தெய்வங்களல்ல. வீட்டில் ஒருவனைப் போல் இருந்து ஏச்சும் பேச்சும் கேட்டாலும், ”போட்டும், நம்ம மக்கதான” என எதார்த்தமாய் எடுத்துக் கொள்ளும் சிறு தெய்வங்கள் எனப்பட்ட தேவதைகள். தெய்வங்களே ஆனாலும், அவர்களுக்கும் நமக்குண்டான , பசி, பட்டினி, கோப தாபம் எல்லாம் உண்டு தானே. போலவே, என்னை இப்படி அலைய வுட்டுட்டானே படைச்சவன் என்னும் பொருமல்களுக்கும் குறைவில்லை.

முதலாளி சொற்படி அம்மனைக் கடத்தும் பூனைக்கண்ணன் தன்னுள் ஒலித்த குரலுக்கு இணங்கி கிழக்குப் பக்கம் போகாமல் மேற்கே செல்வதில் துவங்குகிறது அவனுக்கும் விலைமதிக்க முடியாத அம்மன் சிலைக்குமான உறவு. கதையிலே சொல்லப்படுவதுவைப் போல தாய் - மகனோ அன்றி தகப்பன் - மகளோ என்றுமட்டுமில்லாது சிநேகிதத்தை விவரிக்கும் உரையாடல்கள் கொஞ்சம் என்றாலும் நிறைவு. சிலைக் கடத்தல் பூனைக்கண்ணன் சாமியாராக்கப்படுவதும், நல்லவன் கெட்டவன் பேதமறியா அம்மனை "போட்டீ, புத்தி கெட்டவளே" என திட்டுவதாகவும் முடியும் கதை "பூனைக்கண்ணன் ". அன்னைக்கு அவள் குழந்தைகள் அத்தனையும் முத்துக்கள் என்பதாகவும் எனக்குத் தோன்றியது.

சொத்துபத்துகளை சரிசமமாகப் பிரித்துக்கொண்ட அண்ணன் தம்பிகள், காத்தவரைக்கும் போதும் என புலைமாடன், மாடத்தியை கைவிடுகிறார்கள். உண்ட வீட்டுக்கு ரண்டகம் நினைக்க மனசாட்சி இடம்கொடாததால் கோபத்தை சுவற்றின்மீது காட்டி வேறு இடம் தேடி அலைகிறார்கள் மாடனும் மாடத்தியும். இருப்பதற்கு கிடைத்த ஒரு இடத்தையும் அதற்கென கேட்கப்பட்ட திருஷ்டாத்தை நிறைவேற்ற முடியாமல் அதே பரிதாப உணர்ச்சியால் இழக்கிறார்கள். மனிதர்களைப் போலவே அலையும் மாடனும் மாடத்தியும் “அன்றும் கொல்லாது நின்றும் கொல்லாது” தலைப்புக்கேற்ற சரியான தெய்வங்கள்!

சாதுவாய் இருக்கும் போது எவரும் கண்டுகொள்ளாததால் எம்எல்ஏ வைப்பின் மீதிறங்கி கொடை கேட்டுச் செல்லும் சுடுகாட்டு மாடனின் கதை உண்மையில் மாடனுக்கு மட்டுமேயானதா எனும் சந்தேகம் எழாமலில்லை. சுடுகாட்டு சுடலைமாடன் சமூகத்தையும், சுடலைமாடனுக்கு வழிகாட்டும் கழுமாடனையும் ஒப்பிட்டுப் பார்க்கவல்ல சங்கதிகள் இங்கும் ஓராயிரம் உண்டு (கறங்கு).

கடாரம் நிறைய கருப்பட்டி கருப்பட்டியாய் தங்கம் இருந்தாலும் அதைச் சுமந்தலையும் விதி சங்கிலிப் பூதத்தானுக்கு. நல்லவன் என எவனையாவது தேடிப்பிடித்து கைமாற்றி விடலாம் என்றாலும் கொள்வாரில்லை. அதை வைத்துக்கொண்டு யாதொரு பயனுமில்லாமல், எங்கு சென்றாலும் (கடாரத்தை பிணைத்த) சங்கிலியை இழுத்துக்கொண்டே செல்லும் வரமே சாபமான பூதத்தான் கைலாயம் திரும்பும் முடிவையே ஓர் அகப்பை அரிசிப் பாயாசமே தீர்மானிக்கிறது.

இந்தக் கதைகள் மட்டுமில்லாது வாழ்வின் அவலத்தைப் பேசும் சிறந்த சிறுகதைகள் (தன்ராம் சிங், தெரிவை, கான் சாகிப், கொங்கு தேர் வாழ்க்கை, தாலிச்சரண்) கொண்ட தொகுப்பு “சங்கிலிப் பூதத்தான்”. நாஞ்சில் நாடனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பான இந்நூலில் அத்தனை கதைகளும் அற்புத வாசிப்பனுபவம் தரும் சிறுகதைகள்.

பொதுவாகவே நாஞ்சில் நாடனின் கதாப்பாத்திரங்களுக்கிடையேயான உரையாடலில் அவரது பாண்டித்யம் வெளிப்படும். கதையையும் தாண்டி அந்த உரையாடல்களின் வசீகரமே மனதை ஆட்கொள்ளும் சாத்தியக்கூறுகளும் உண்டு. இத்தொகுப்பின் கதைகளும் அதற்கு விதிவிலக்கல்ல.

சங்கிலிப் பூதத்தான் – நாஞ்சில் நாடன்
விஜயா பதிப்பகம்

No comments: