title


கொடுங்கோளூர் கண்ணகி

“ரொம்ப முக்கியமான புக் கிடைச்சதுடா. இப்ப ப்ரிண்ட்ல இல்ல. ஜெராக்ஸ் எடுத்துட்டு கொடுக்கணும். நீ ப்ரீயா இருந்தா சொல்லு, போலாம்” அழைத்தது நரேன். அவருடன் சென்று அப்புத்தகத்தின் ஒரு நகலை நானும் எடுத்துவந்தேன். கிட்டத்தட்ட 2 அல்லது 3 வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வு இது. இடைப்பட்ட தருணங்களில் அப்புத்தகத்தைப் பற்றி நான் மறந்தே போனேன். சமீபத்தில் திரு.ஜெயமோகன் அவர்கள் எழுதிய புதுக்காப்பியமான கொற்றவையின் முன்னுரையில், கொற்றவையுடன் இணைத்துப் படிக்க வேண்டிய முக்கிய நூல் என அப்புத்தகத்தை குறிப்பிட்டிருந்த பின்னர்தான், அப்புத்தகம் என்னிடம் இருக்கும் நினைவே வந்தது. கொற்றவை படித்து முடித்த பின்னர் அப்புத்தகத்தையும் படித்தேன். ஒவ்வொரு புத்தகத்துக்கும் அதை வாசிக்கவேண்டிய ஒரு தருணம் அமையும் என நான் நம்புவதுண்டு. முனைவர். திரு. வி.ஆர்.சந்திரன் அவர்களால் எழுதப்பட்டு, ஆசான் திரு.ஜெயமோகன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட “கொடுங்கோளூர் கண்ணகி” எனும் ஆய்வு நூலை அப்படி அமைந்த ஒரு சரியான தருணத்தில்தான் நான் வாசித்திருக்கிறேன். . ஏறத்தாழ 110 பக்கங்கள் கொண்ட இந்தச் சிறிய ஆய்வு நூல், ஆலய வரலாறு, பதிட்டைகள், திருவிழாக்கள், மீனபரணி திருவிழா என நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர ஐதீகங்கள், விளக்கக் குறிப்புகள், திருவஞ்சிக் குள கோவில் வரலாறு ஆகிய பகுதிகள் பிற்சேர்க்கைகளாகவும் இணைப்புகளாகவும் தரப்பட்டுள்ளன. பொதுவாக, கேரள வரலாற்றின் தவிர்க்கமுடியாத தமிழ்ப் பின்புலமும், போலவே தமிழ் ஆய்வுகள் கேரளப் பண்பாட்டை கணக்கில் கொள்ள வேண்டியதன் அவசியமும் முன்னுரையில் விளக்கப்பட்டுள்ளன. . கேரள கோவில்களில் பகவதி வழிபாடு, கொடுக்கோளூர் கோவிலின் புராதனத்தன்மை, கொடுங்கோளூர் கோவில் உருவாக்கம் சம்பந்தமான ஐதீகங்கள், யூகங்கள் ஆகியவை மிகச்சுருக்கமான வகையில் ”ஆலய வரலாறு” பகுதியில் கூறப்பட்டுள்ளன. கூடவே, இவ்வாலயத்தின் பழங்கால நாட்டார் வழிபாடு, திராவிடர்கள் மீதான ஆரிய ஆதிக்கம் நிகழந்தபோது, படிப்படியாக ஆரியமயமாக்கப்பட்டிருக்கலாம் என்பதும், அந்த மேலாதிக்கத்தினால், பூஜை முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் இப்பகுதியில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. . கோவில் அமைப்புகள், பல்வேறு பதிட்டைகள், பலமுறை மாற்றப்பட்ட மூலச்சிலை, அப்படி இருந்தும் தொடர்ந்துவரும் சிலம்பு, மரத்தாலான மூலச்சிலை கெடாமலிருக்கும் பொருட்டு செய்யப்படும் சாந்தாடுதல் ஆகியவை ”பதிட்டைகள்” பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் விவரிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க விசயங்கள், கோவிலில் மனோதரி எனும் நாட்டார் தெய்வம் வசூரிமாலாவாக மாறிய நிகழ்வும், கோவில்களில் நரபலி இருந்ததற்கான ஆதாரங்களும், அதன் தற்போதைய குறியீட்டு / மாற்றப்பட்ட வடிவமும் ஆகும். மேலும் இப்பகுதியில் கோவில் அமைப்பு விவரிக்கப்பட்டுள்ள விதமும், கோவிலைச் சுற்றிலும் காணப்படும் பல்வேறு பதிட்டைகள் பற்றிய தகவல்களும், கற்பனையில் கோவிலைக் காண வழிவகுக்கின்றன. . திருவிழாக்கள் பகுதியில் நவராத்திரி திருவிழா, தாலப்பொலித் திருவிழா என விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாக்கள் விவரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சடங்குகள், ஒவ்வொரு சடங்கிலும் ஒவ்வொரு சாதியினருக்கும் இருக்கும் உரிமைகள், அதனூடாக இன்று தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படும் சாதியினர் பண்டைய காலத்தில் அரசாண்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் (உதாரணம் : புலையர்), கோவில் பூசாரியாய் இருந்தபோதும் (பூசாரிக்கு) தேவி மீது எள்ளல் நிலவியிருக்கக்கூடிய நகைமுரண், தேவதாசி முறை மற்றும் அதன் மாற்றங்கள் என திருவிழாக்களை விவரிப்பதனூடே பல வரலாற்று சம்பவங்களை நாம் அறியவருகிறோம். . நான்காவதும், மிகவும் முக்கியமானதுமானதுமான பகுதி “மீனபரணி திருவிழா”. கொடுங்கோளூர் கண்ணகி கோவிலின் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருவிழா மீன மாதத்தின் பரணி விழா. இத்திருவிழாவின் கொடியேற்றலில் துவங்கி ஒவ்வொரு சடங்கும் இப்பகுதியில் விரிவாக கூறப்பட்டுள்ளன. சடங்குகளின் நோக்கம், அச்சடங்கைச் செய்ய உரிமையுள்ள சமூகங்கள், கூடவே அவ்வுரிமை கிடைக்கப்பெற்றதன் வரலாற்றுப் பின்புலம் என ஒரு முழுமையான சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. இவ்விவரிப்புகளினூடே, கோவிலுக்கும் சிலப்பதிகாரத்துக்கும் இடைப்பட்ட தொடர்பும் நமக்கு விளங்குகிறது. சிலப்பதிகாரத்தின் முக்கிய சம்பவங்களின் தொடர்ச்சியாகவோ அல்லது மாறுபட்ட வடிவங்களாகவோ இச்சடங்குகளை நாம் புரிந்துகொள்ள முடிகிறது (உதாரணம் : வெளிச்சப்பாடு). போலவே, தமிழகத்துக்கும் கேரளத்துக்குமான பண்பாட்டுத் தொடர்பை விளக்கும் பல குறிப்புகள் (இப்பகுதியில் மட்டுமல்ல, நூல் முழுவதிலுமே) காணக்கிடைக்கின்றன. கேரள மண்ணில் நிகழும் “வேலனும் வெறியாட்டும்” நிகழ்வு, கொடுங்கோளூர் கோவிலில் பூசை செய்பவர்கள் “அடிகள்” என்று தமிழ்ப்பெயரால் அழைக்கப்படுதல் என பல சான்றுகளை இந்நூல் நமக்குச் சுட்டுகிறது. * பொதுவாகவே ஆய்வுநூல்கள்கள் ஒரு இறுக்கமான எழுத்து நடையைக் கொண்டிருக்கும். அதனாலேயே, ஒரு வாசகனாக நாம் செலவளிக்கும் உழைப்பு இருமடங்காகிவிடும். ஆனால், இந்நூலினை வாசிப்பு சார்ந்து எவ்வித தடையுமின்றி இலகுவாக அணுகமுடிகிறது. ஆசான் திரு.ஜெயமோகனின் மொழிபெயர்ப்பு அதற்கொரு முக்கியமான காரணம். அதைப் போலவே, மூல நூலில் இல்லாத / தவற விட்ட மேலதிக விசயங்களை மொழிபெயர்ப்பாளரின் குறிப்புகளாக தந்திருப்பதும் மிகச்சிறப்பு. தமிழர் பண்பாடு மற்றும் வரலாற்றின் மீதும் குறிப்பாக சிலப்பதிகாரத்தின் மீது ஆவல் கொண்டவர்கள் அவசியம் படிக்கவேண்டிய நூல் இது. * கொடுங்கோளூர் கண்ணகி (முனைவர். வி.ஆர்.சந்திரன் – தமிழில் ஜெயமோகன்). #வாசிப்பு_2020 #பிடித்த_புத்தகங்கள்

No comments: