எனில், தொழிற்சாலை உண்டானபின் அந்த நிலங்களின் விளைச்சல் முற்றிலுமாய் நின்று போய்விட்டதே... அதை நம்பியிருந்த குடும்பங்களின் கதி என்னவாயிருக்கும் ? நிலத்தை நம்பியிருந்த குடும்பங்களிலாவது மூன்றாம் தலைமுறையினர் எவராவது அந்த தொழிற்சாலையின் கடைநிலை உழியராகும் பேறு பெற்றிருக்கலாம். ஆனால் அந்த நிலத்தின் விளைச்சல் முற்றிலுமாக நின்றுவிட்டதே, அப்படியானால் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு உணவுப்பொருள் குறைந்திருக்குமே அதை, அந்த நின்றுபோன விளைச்சலை சரி செய்யவழி என்ன?
இப்படியெல்லாம் நாம் சிந்தித்து இருக்கலாம்... மாறாக இவற்றை கண்டும் காணாமலும் இருந்திருக்கலாம். “சா.கந்தசாமி” அவர்கள் எழுதியுள்ள “சாயாவனம்” என்னும் நாவல் ஒரு வனம் அழிக்கப்பட்டு அதில் ஒரு சர்க்கரை ஆலை கட்டப்படும் நிகழ்வை விவரிக்கின்றது.
பலநூறு வகையான மரங்கள் அடர்ந்திருந்து, பல வகைகளில் மக்களுக்கு பயன்பட்ட அவ்வனத்தை இளமையின் வேகமும், முதுமையின் அனுபவமும் கூட்டணி அமைத்துக் கொண்டு அழித்துமுடிப்பதும் அதன்பின் ஒரு கட்டத்தில் வனத்தையே நெருப்புவைத்து பொசுக்குவதுமாக அழிவின் கோரமுகங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. வாரக்கணக்கில் நெருப்பு அந்த வனத்தை உண்டுமுடித்து சாம்பலாகி உமிழ்ந்த காட்சி மிக்க மனவருத்தம் உண்டாக்கியது.
இறுதியாக தொழிற்சாலை உண்டானது. அதுநாள் வரை இலவசமாகவே வனத்திலிருந்து பெற்று வந்த புளியை அவ்வூர் மக்கள் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் நிலையுடன் நாவல் முற்றுப் பெறுகின்றது. மிக மிக தேர்ந்த நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் அவசியம் வாசிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
நாவல் : சாயாவனம் (நாவல்)
எழுத்தாளர் : சா. கந்தசாமி
பதிப்பகம் : காலச்சுவடு (கிளாசிக் வரிசை நாவல்)
பக்கங்கள் : 199
விலை : ரூபாய் 150.00