title


மீஸான் கற்கள்

மாற்று மதத்தினரால் கொல்லப்பட்ட, தன் குழந்தையின் நினைவால் வாடும் தகப்பனுக்கு, “எந்த மதத்தினரால் உன் குழந்தை கொல்லப்பட்டதோ அதே மதத்தைச் சேர்ந்த குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பதன் மூலம் மட்டுமே நீ உன் துயரைக் கடக்கமுடியும்” என காந்தி மகான் போதித்த கதை ஒன்றுண்டு. சமூகம் தனக்கு தந்த வலியை, தன் மீது காட்டப்பட்ட வெறுப்பை, கருணையின் மூலமாக மட்டுமே கடக்கவியலும் என்பதை உணர்த்தியதால்தான் அவர் மகாத்மா.
*
பட்டாளம் இபுறாகிக்கு காலம் அப்படியொரு நல்வாய்ப்பை வழங்கியது. “எப்படியோ வளர்ந்து, எப்படியோ படித்தான்” என ஓரிரு வார்த்தைகளுக்குள் சொல்லப்பட்டாலும் இபுறாகி தாண்டி வந்திருக்கும் வலிகள் சாதாரணமானவையல்ல. அந்த வலியை “குஞ்ஞாலி” மீதான தன் கருணையின் மூலம் அவனால் கடந்திருக்க முடியும். ஆனால், வலிக்கு ஈடு செய்ய இபுறாகி வெறுப்பின் பாதையைத் தேர்கிறான். தன் அன்னைக்கு தங்ஙள் குடும்பத்தால் நேர்ந்த அவலத்தை, பூக்குஞ்ஞி பீவியின் வாழ்க்கையை அழிப்பதன் மூலம் இபுறாகி கடக்க முயல்கிறான்.

காலையில் குதிரையேற்றம், கண்பட்ட குடிசைக்குள் நுழைவது என கட்டற்ற விழைவால் திளைக்கும் தங்ஙள், வேறெந்த குற்றமும் சொல்லமுடியாதவர். தகப்பன் யாரென்று தெரியாத, அன்னையும் இறந்துபோன குஞ்ஞாலியை தன் சொந்த மகன் போல வளர்த்தவர் அவர். பொதுக்காரியங்கள், ரமலான் விருந்து, சக்காத்து கொடுப்பது என மரபின் தொடர்ச்சியும், அதே சமயம் அனைத்துப் பெண்களுக்கும் மார்பை மூடிக்கொள்ளும் உரிமையை (கட்டாயப்படுத்தியாவது) தந்த நவீன “சிங்கப்பூர்” மனதும் கலந்தவர்.

எரமுள்ளான், அடிப்படையிலேயே அழுத்தமான ஆள். தன்னுடைய சகல ரோக நிவாரணியாக அவனே கண்டடைந்த மருந்து மசூதி தொட்டியில் நீர் நிரப்புவது. தன் காதல் மனைவி “பாத்து”வின் இரண்டாம் திருமணத்தையும் அந்த மருந்தின் மூலமாகவே கடக்கிறார். பாங்கு எழுப்புவதையே தன் பிறவிக்கடனாக எண்ணிய எரமுள்ளான், “பாங்கு” ஓதும்போது மறையவேண்டும் என்னும் ஆசை உள்ளவர். ஆனால், நோயுற்று நலிந்தபின்னர், தன்னுடைய மசூதியில் இன்னொருவரது  பாங்கு ஓசை கேட்டு எழுந்துவந்து மரணிப்பது மட்டுமே அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நாவலில் வரும் இரண்டு குதிரைக்காரர்களுக்கும் உலகமே அவர்களது குதிரைதான். தன் வாழ்வில் பெருந்துன்பம் எதற்க்குமே கலங்காத அத்துராமன், அவனது குதிரையின் வலியில் கலங்கி அழுகிறான். திருமணத்திற்க்கு பின்னரும் தன்னுடைய குதிரை வாசம் இல்லாமல் அவனால் தூங்கமுடிவதில்லை. சூழலின் பொருட்டு தன் குதிரையை துரத்திவிட்டு பின்னர் அதனாலேயே பிறழ்வடைகிறான். இரண்டாவது குதிரைக்காரனின் பணி, தங்ஙளின் காலை நேர குதிரைப் பயணத்துக்கு குதிரையை தயார் செய்வது மட்டுமே. தங்ஙளின் மறைவுக்குப் பின், அவனது குதிரையின் தேவை ஒருவகையில் முடியும்போது அவனும் தன் குதிரை மீதேறிப்போய் மறைகிறான்.

வளையல் விற்பனைக்கு வரும் குழந்தையில்லாத மாதவி, தங்ஙள் மூலமாக கருவுறுகிறாள். அடுத்த வருடம் அவள் கணவன் குழந்தைக்கான தன் வேண்டுதல் நிறைவேறியதற்காக பெரிய தங்ஙள் கல்லறையில் பத்தி கொளுத்துவதும் ஒருவகையில் சரியானதே.

பாங்கு சத்தம், மசூதி என தன் வாழ்வை வகுத்துக்கொண்ட எரமுள்ளான் மோதினாருக்கு மரணம் பாங்கு ஓசை மூலமாகவே வருவது, வாழ்வு முழுவதும் குதிரையை மட்டுமே முதன்மையாக் கருதிய அத்துராமன், தன் வாழ்வை தான் துரத்திவிட்ட குதிரைக்கென பணயம் வைத்து பிறழ்வது, தங்ஙளுக்கோ அத்துமீறிய காமத்தின் பொருட்டே மரணம் நேர்வது, சிறுவயது முதலே ஆர்வமாய் கேட்ட ஜின் கதைகளின் நீட்சியாகவே பூக்குஞ்ஞி பீவியின் மரணம் சம்பவிப்பது என மானுடர்களின் செயல்களும், அவற்றின் மறுபக்கமான முடிவுகளும் காட்டப்படுகின்றன. 

கல்லறையின் ஒவ்வொரு மீஸான் கற்களுக்கும் ஒவ்வொரு வரலாறு இருக்கக்கூடும். பெரிய தங்ஙள் போன்று எல்லாவகையிலும் பொருட்படுத்தத்தக்க வாழ்வாங்கு வாழ்ந்தவர்களுக்கும், தன் ”மனைவி”யாலேயே மறக்கப்பட்ட எரமுள்ளானுக்கும் ஒரே இடத்திலேயே மீஸான் கற்கள் அமையவும்கூடும். ஆனால், மரணத்துக்குப் பின் கிடைக்கும் மரியாதை அனைத்தும் இருக்கையில் வாழ்ந்த வாழ்வின் பொருட்டே அமையும்.

No comments: