title


உரையாடும் காந்தி


உரையாடும் காந்தி
சில வருடங்களுக்கு முன் நண்பனின் அறையில் பேசிக்கொண்டிருந்தபோது, பேச்சு சுதந்திரத்தைப் பற்றி திரும்பியது. அறையில் இருந்த நண்பர்களில் பெரும்பாலானவர்களால் தூற்றப்பட்டவர் காந்தி. காந்தியின் மீதான அவர்களது விமர்சனம் எல்லை தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. அதீத கோபத்துடன் அவர்கள் முன்பாக சில வார்த்தைகளைச் சொல்லி அவற்றைப் பற்றி அவர்கள் அறிந்ததுண்டா எனக் கேட்டேன். உதாரணத்துக்கு, சபர்மதி, நவகாளி. காந்தியின் மீது பெரும் வசைகளை கொட்டிய ஒருவருக்கு கூட, நான் சொன்ன வார்த்தைகளைப் பற்றி எதுவும் தெரியாது. இதுதான் இன்றைய காந்தியின் நிலை.

நம் காலத்தில், குறைந்தபட்ச அறிதல் கூட இன்றி பெரும்பாலானவர்களால் வசைபாடப்படுபவர் என காந்தியைச் சொல்லலாம். அத்தனை வசவுகளுக்கும் பின்னால் இருப்பவை பெரும்பாலும் செவிவழிக் கதைகள் அல்லது ”பாதி” உண்மைகள். ஒரு தர்க்கத்துக்கான அடிப்படைத் தகவல்கள் கூட இல்லாமல், வசைச் சொற்கள் வாரிக் குவிக்கப்படுகின்றன.
**
நாம் யாரை வேண்டுமானும் ஆதரிக்கலாம் அல்லது வெறுக்கலாம். எந்தக் கருத்தியலுடனும் ஒத்துப்போகலாம் அல்லது முரண்படலாம். அது நம் உரிமை மற்றும் சுதந்திரம். ஆனால், ஆதரிப்பதையும் எதிர்ப்பதையும் அடிப்படைப் புரிதலின்றி செய்வதைப் போல அறிவீனம் பிறிதில்லை.

அவ்வகையில், காந்தியைப் பற்றி புரிந்து கொள்வதுக்கு உதவும் நூல் “உரையாடும் காந்தி”. காந்தியைப் பற்றியை தன்னுடையை வாசகர்களின் கேள்விக்கு திரு.ஜெயமோகன் அவர்களின் விரிவான பதில்கள் கொண்ட தொகுப்பு இது. ஒவ்வொரு பதிலும் காந்தியத்தின் பல பரிமாணங்களை நாம் அறிந்துகொள்ள உதவுகின்றது (அவ்வகையில், இதற்கு முன்னோடி நூல் திரு.ஜெயமோகன் எழுதிய “இன்றைய காந்தி”).
*
திறந்த மனதுடன் காந்தியை அணுக வேண்டியதன் தேவை, மைய நீரோட்டத்தின் மீது ஒவ்வாமை கொண்டவர்களையும் மெல்ல மெல்ல அதனுடன் கலக்க வைக்கும் அணுகுமுறை, எதிரிகளை, பிழைகளைக் கனிவின் வழி கடந்து சொல்லுதல், எந்தப் பிரச்சனையிலும் மனசாட்சி மற்றும் அறத்தின் தேவை, மாற்றங்கள் நிலைத்து நிற்க வேண்டுமானால் அவை ஒருநாள் புரட்சியாக இல்லாது, சமூக மாற்றமாக இருக்க வேண்டியதன் அவசியம், முக்கியமாக தற்சார்பு பொருளாதாரத்தின் வலிமை என காந்தியத்தின் பல முகங்களை விளக்கமான பதில்களின் மூலமாக இந்நூலில் இருந்து நாம் அறிந்துகொள்ள முடிகிறது. காந்தியைப் பற்றிய பெரும்பாலான அடிப்படை சந்தேகங்களுக்கு இந்தப் புத்தகம் விடை தருகிறது. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நூல்.
உரையாடும் காந்தி – ஜெயமோகன் – தன்னறம் பதிப்பகம்
*
தன் காலடியின் மலர்கள் சமர்ப்பிப்பவர்கள், தன் மீது கல்லெறிபவர்கள் என இருவரும் எளிதில் அணுகுமிடத்தில், எப்போதும் காந்தி நின்றுகொண்டிருக்கிறார். நீங்கள் எந்த எல்லையைச் சேர்ந்தவராக இருப்பினும், உங்களுக்கான கனித்த பொக்கை வாய்ச்சிரிப்பு காந்தியிடம் எப்போதும் உள்ளது.
*
மாமனிதர் போற்றுவோம் !

#உரையாடும்_காந்தி
#படித்ததில்_பிடித்தது

No comments: