title


பைக் சுற்றிப் புராணம் 1 - ஸ்டார்ட், க்ளட்ச், கியர் புஸ்

என் வாழ்க்கையில் நான் ஓட்டிய முதல் டூ வீலர் என் மாமாவின் “HERO HONDA CD 100”, அது என் பள்ளிப்பருவத்தில். அவிநாசி அருகில் உள்ள ராயன்கோவிலில் என் தாய்மாமாக்கள் லீசுக்கு ரைஸ்மில் எடுத்து ஓட்டிவந்தார்கள். அப்போதெல்லாம் வார இறுதிகளில் நான் பெரும்பாலும் ராயன்கோவிலுக்கோ அல்லது காங்கேயம்பாளையத்துக்கோ செல்வது வழக்கம். ராயன்கோவில் செல்லும்போதெல்லாம் சனிக்கிழமை பகல் முழுவதும் சாப்பிட்டு தூங்கிவிட்டு இரவுகளில் நெல் வேக்காடு போடும் ஈஸ்வரண்ணன், ராஜா அண்ணனுடன் நானும் அமர்ந்து, (நெல் வேகவைக்கும் பெரிய அடுப்பில் எரியும் நெருப்புக்கு) உமித்தள்ளுவது வாடிக்கை. (பெரும்பாலும், எல்லா அரிசி ஆலைகளும் ”மாடர்ன் ரைஸ் மில்” ஆகிவிட்ட இக்காலகட்டத்தில் இந்த வேக்காட்டு முறை கிட்டத்தட்ட மறந்துபோன ஒன்று).

அப்போதெல்லாம் பின்னிரவுகளிலும், அதிகாலையிலும் அப்பச்சி வைத்துத்தரும் வரக்காப்பியை நடுக்களத்தில் அமர்ந்துகொண்டு குடிப்போம். ராயன் கோவில் கொஞ்சம் மேடான பகுதி, ஆகவே இயல்பாகவே அங்கு குளிரும் அதிகம். அடிக்கும் குளிருக்கு அதுவரை உமிஅடுப்பின் கதகதப்பில் இருந்துவிட்டு, அடுப்பை விட்டு கீழிறங்கி களம் வந்து சேரும்வரையிலான கொஞ்ச நேரம் கடும் குளிரை அனுபவித்துவிட்டு, பின்னர் அருந்தும் வரக்காப்பி தரும் இதம் சொல்லில் அடங்காதது. அப்படிப்பட்ட ஒரு நடுஇரவில்தான், முதன் முதலில் அசட்டுத்துணிச்சலுடன் மாமாவின் வண்டியை ஓட்டினேன்.

இந்த இடத்தில் மாமாவின் வண்டியைப் பற்றி கொஞ்சம் சொல்லித்தான் ஆகவேண்டும். வார வசூலுக்கு புளியம்பட்டிக்கு செல்லும் மாமா மாலையில் திரும்பி வரும்போது மில் கேட்டருகே வந்ததும் இஞ்சினை அணைத்துவிடுவார். படிப்படியாக வேகம் குறைந்து சரியாக வண்டி நிறுத்தும் இடமருகே வந்து நிறுத்துவார். இந்த Calculation ஒருமுறைகூட நானறிந்து தவறியதில்லை. ஒருமுறை சென்னிமலைக்கு “சேகர்” மாமாவும் ”பிரகாஷ்” அண்ணனும் வரும்போது ”எவ்வளவு வேகந்தான் போகும்?” என ஆர்வக்கோளாறில் வண்டியை செம விரட்டு விரட்டி “Speedo Meter” குளறுபடியாகிப்போன சோகக்கதையை கிருஷ்ண மாமா பலமுறை சொல்லியிருக்கிறார். ”பாருங்க மாப்ள, இவ்வளவுதான் 60 கி.மீ வேகங்கறது” சாமிநாத மாமா வண்டியை ஓட்டிக்கொண்டே அப்பாவிடம் சொன்னதை நான் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தது, கோபியிலிருந்து அவிநாசிக்கு ட்ரிபிள்ஸ் வந்தபோது. இப்படி சொல்லித்தீராத கதைகள் ஏராளம் உண்டு.

மில் என்பதாலும் பெரும்பாலும் எல்லா இரவுகளிலும் ஆட்கள் இருப்பதாலும் வண்டியில் எப்போதும் சாவி இருப்பது எனக்கு வசதியாகப் போய்விட்டது. துவக்கத்தில் வண்டியை ”ஸ்டார்ட்” செய்வது முதல் கியர் போடுவது சடக்கென கிளட்சை ரிலீஸ் செய்து வண்டியை ஆஃப் செய்து விடுவது என மிகச் சரியாக தவறிழைத்தேன். அப்போதெல்லாம், இந்த பெரியவண்டி பொமெட் மாதிரி முறுக்கினவுடன் பறந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்” என்கிற ரீதியிலான மெக்கானிக்கல் ஐடியாவும் தோன்றும்.

என்றாலும், ஆட்கள் யாரும் இல்லா இரவுகளில் இழைத்த தவறுகள் அவமானமாயில்லை மாறாக ஒரு அனுபவமாக இருந்தன. கூடவே, ஆனவரைக்கும் ஓட்டுடா, பாத்துக்கலாம் என்கிற ரீதியில் ஈஸ்வரண்ணன், ராஜா அண்ணன் அவர்களது ஆறுதல் வார்த்தைகளும் சேர்ந்துகொள்ள, ஓரிரு வாரங்களில் கியர் வண்டி ஓட்டும் சூட்சுமம் கொஞ்சம் கைகூடி, முதல் கியரில் வெற்றிகரமாக வண்டியை சில அடிகள் நகர்த்திய அதிகாலையில்தான் தம்பி மாமாவிடம் கையும் வண்டியுமாக சிக்கினேன்.  


ஆக, இப்படியாக ஒரு முடிவுக்கு வந்தது என் முதல் இரு சக்கர வாகன சாகசம்.

No comments: