title


எனது இந்தியா

எந்தப் புனைவுக்கும் சற்றும் சளைத்ததல்ல வரலாற்றின் பக்கங்கள். நாம் எண்ணி எண்ணி பெருமிதம் கொள்ளும் அதே மூதாதையர்கள் நிரையில்தான் நம்பவே முடியாத கீழ்மைமிக்க மனிதர்களும் இருந்திருக்கிறார்கள். நாம் நம்பியிருப்பதும், நாம் நம்ப விரும்புவதும் மட்டுமல்ல, உண்மை வரலாறு நாம் விழுங்க முடியாத கசப்பையும் தன்னுள்ளே அடக்கியதுதான் அது. கடந்து வந்த பாதையின் மேடு பள்ளங்களை சரிவரத் தெரிந்துகொள்வதுதான் நாம் இனி மேற்கொள்ளவிருக்கும் பயணத்துக்கான சரியான திட்டமிடலுக்கு உதவி செய்யும். அதுவே நம் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டியதற்கான தேவையும் கூட. ஆயிரமாயிரம் சுவாரசியங்களை உள்ளடக்கிய வரலாற்றை வெறுமனே வருட, மாத, தேதி வாரியான சம்பவங்களின் தொகுப்பாகப் படிக்க நேர்வது ஒரு வகை ஆவண வாசிப்பு மட்டுமே. புனைவின் வசீகர மொழியைக் கைக்கொள்ளும் ஒருவனால் எழுதப்படும் வரலாறு பெரும் வாசிப்பின்பம் தருவது மட்டுமல்ல, வரலாற்றில் ஒளிந்திருக்கும் பல கதைகளை நாம் கண்டுகொள்ளவும் வழிவகுக்கும். அப்படி ஒரு நிறைவு திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்ட “எனது இந்தியா” புத்தகத்தைப் படித்ததும் ஏற்பட்டது.
*
பெரும்பாலும் ஆங்கிலேயர் காலகட்ட ஆட்சியைக் குறித்தும், மன்னர்களைக் குறித்தும் பேசப்பட்டிருந்தாலும், சாமானிய மக்களின் வாழ்க்கைக்கு வரலாற்றில் இருக்கும் பங்கையும் உணர்த்தும் நூலாக “எனது இந்தியா” அமைந்துள்ளது.
 
ராதா நாத் சிக்தார் என்ற வங்காளி இளைஞனின் திறமையால் துல்லியமாக அளவு கண்டறியப்பட்ட இந்தியாவின் மிக உயர்ந்த சிகரத்துக்கு, ஆங்கிலேய சர்வேயரின் நினைவாக எவரெஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள வரலாற்றைக் கூறும் கட்டுரை, காலனியாதிக்கத்துக்கு ஆட்பட்ட ஒரு தேசத்தின் மனிதர்களுக்கு மட்டுமல்ல மலைச்சிகரங்களுக்குக் கூட அடையாளமழிப்பு நிகழ்ந்திருப்பதற்கான சான்றாக அமைந்துள்ளது. மாமனிதர்களின் எழுச்சியில் சில தலைவர்கள் மங்கிப்போவதுண்டு. அதை உறுதி செய்கின்றன இந்திய விடுதலைப் போரில் நேதாஜி வழியில் அவருக்கு முன்னே சென்ற செண்பக ராமன் பிள்ளை மற்றும் ராஷ் பீகாரி போஸ் இவர்களைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகள்.
 
பெரும் கோவில்களும், மாளிகைகளும், அணைக்கட்டுகளும் கட்டப்பட்ட அதே காலகட்டம்தான் இன்னொருவகையில் மக்களின் அன்றாட வாழ்க்கையின் இன்னல்கள் எவ்விதத்திலும் அரண்மனைச் சுவர்களைக் கூட தொந்தரவு செய்யாதிருந்த நிதர்சனத்தையும் உள்ளடக்கி இருந்திருக்கிறது. அதற்கு ஒரு சோற்றுப் பதமாக அமைந்துள்ளன மகாராஜா ஜெய்சிங் பற்றிய கட்டுரைகள். பெரும் நாகரீகம் கொண்ட சமூகம் என நம்மை நாமே எண்ணிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்திலேயே பழங்குடியினரின் இயற்கையுடன் இயைந்த வாழ்வுக்கு பெரும் தடைகள் இருக்கும்போது, சாதாரண மனிதர்களையே லட்சியம் செய்யாத காலனி நாடுகள் ஆட்சிபுரிந்த காலகட்டம் பழங்குடியினருக்கு இன்னும் கொடுமையாக இருந்திருக்கும். அப்பிண்ணனியில் ஏற்பட்ட ”சந்தால் எழுச்சி” மற்றும் அதிலிருந்து எழுந்து வந்த “பிர்சா முண்டா” எனும் தலைவன், அவனது மர்மச்சாவு குறித்து விவரிக்கும் “காட்டுக்குள் புகுந்த ராணுவம்”, இத்தொகுப்பின் முக்கிய கட்டுரைகளுல் ஒன்று.
 
மகாத்மா காந்தி செய்த உப்பு சத்யாகிரகம் வெளியே தெரிந்த அளவுக்கு, இந்தியாவின் ஏன் உலகத்தின் மிகப்பெரிய தடுப்புவேலிகளுல் ஒன்றாக அமைந்த உப்புவேலியைப் பற்றியும் அதனூடாக கட்டுப்படுத்தப்பட்ட உப்பு வணிகம் ஆங்கில அரசுக்குத் தந்த நன்மைகளைப் பற்றிய அறிமுகக் கட்டுரையும் இந்நூலில் உண்டு (உப்புவேலி எனும் நூல் இதைக் குறித்து விரிவாகப் பேசுகிறது). பொதுவாக அனைத்து அதிகாரிகளும் இந்தியாவிலிருந்தும், இந்தியர்களிடமிருந்தும் கூடுமானவரை சுரண்டித்தின்ன முற்பட்டாலும் விதிவிலக்காய் நம் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நினைத்த, செய்த அதிகாரிகள் நிரையில் வருபவர் ஆர்தர் காட்டன். இந்திய நதி நீர் மேலாண்மை குறித்தும் அணைக்கட்டுகள் குறித்தும் அவர் காட்டிய அக்கறையும் உழைப்பும் அவரை இந்தியாவின் நீர்ப்பாசன தந்தை என அழைக்க வைத்தன.
 
துவக்க அத்தியாங்களில் வரும் நைநியாப் பிள்ளையின் கதையும், ஊழல் நாயகன் கிளைவ் மற்றும் அதைத் தொடர்ந்த கட்டுரைகளும் புதுச்சேரி மாநிலத்தைக் குறித்தவை. தவிக்கவே இயலாதபடி திரு. பிரபஞ்சனின் “வானம் வசப்படும்” மற்றும் “மானுடம் வெல்லும்” படைப்புகள் நினைவுக்கு வந்தன.
*
ஒருபோதும் நாம் தவிர்க்கவே கூடாத வரலாற்றின் பக்கங்களை, புனைவுக்கிணையான வசீகர மொழியில் “எனது இந்தியா” கூறுகிறது.
*
 எனது இந்தியா - எஸ்.ராமகிருஷ்ணன் – தேசாந்திரி பதிப்பகம்.

No comments: