title


கொற்றவை

சொல்லில் உறையும் தீ தன் சிறை மீறுதலே காப்பியம் என்றனர் கற்றோர்.

*

சிலப்பதிகாரம் என்றவுடனே நமக்கு பொதுவாக நினைவுக்கு வரும் விசயங்கள் என்னென்ன ? கண்ணகி, கோவலன், மாதவி, நெறி பிறழ்ந்த பாண்டிய மன்னன், எரிக்கிரையான மதுரை, இளங்கோ, சேரமான். பின்பு, இவர்களின் வாழ்வினூடே தமிழர் பெருமையை, கற்பை, மாண்பை கூடவே அறம் கூற்றாகும் உண்மையை சொல்லிச்செல்லும் கதை. உண்மையில் கொற்றவை நாவலை துவங்கும் போது எனக்கும் அப்படியொரு எண்ணம்தான். கூடவே, மேற்சொன்ன களத்தை ஆசான் திரு.ஜெயமோகன் எப்படி எழுதியிருப்பார் எனும் ஆவலும். ஒரு வாசகனாக என்னுடைய எதிர்பார்ப்பை நாவல் கடந்து சென்றுவிட்டது. நாவல் அல்ல. இது புதுக்காப்பியம். வெறுமனே பெயரளவில் காப்பியம் என்றல்ல. உண்மையில் கையாண்ட மொழியில் கூடி வந்திருக்கிறது அக்காப்பியத்தன்மை.

காப்பியம் பஞ்சபூதங்களான நீர், காற்று, நிலம், எரி, வான் என ஐம்பகுதிகளாகப் பஞ்சபூதங்களை நினைவுறுத்தும்படி பகுக்கப்பட்டுள்ளது. இப்பகுப்பு வெறுமனே பாகம் பிரிப்பதாயன்றி, காப்பியத்தின் நடைக்கு வலுசேக்கும் படி அமைந்திருக்கிறது.

1.   நீர்

”புன்னகைக்கும் கருமையே நீலம்” முதல் பத்தியில் வரும் இவ்வரிகளில் துவங்கிய மொழியில் வசீகரத்தில் ஆழ்ந்த என்னுடைய திளைப்பு நாவல் முழுவதுமே தொடந்து வந்தது. ஆதியில் புழங்கி வந்த பல மனிதர்கள், அவர்தம் நகரங்கள், காவல் தெய்வமாயமைந்த முக்கண்ணன் மற்றும் அன்னையர். கடல்கோள் நிகழ்ந்து ஆழத்தில் அவர்கள் உறைதல் என இப்பகுதி பேசுவது பண்டைய காலம். கூடவே ஒவ்வொரு தெய்வத்துக்கும் அவர்தம் பெயர் துலங்கி வந்த காரணம். இவை பேசும் பொருளைத் தாண்டி குறிப்பிடத்தக்க அம்சம் அது சொல்லப்பட்ட விதம். உதாரணமாக சொல்வதென்றால், சீவங்களின் தலைவன் சிவனென்றாதல், மதுரை என்றான மதில் நிரை, எல்லை மீது கடல் அலை பரவும் அலைவாய், பழையோனும் பண்டையோனும் மருவி பாண்டியனாதல், அகத்திலிருந்து வந்த அகத்தவன், அதுவும் மருவி அகத்தியனாதல் என சொல்லிக் கொண்டே போகலாம். இந்த விவரணைகளின் உட்சமாக எனக்குத் தோன்றியது “தன்னை இமிழும் மொழியானாதால் அது தமிழானது”. தமிழில் புழங்கிவரும் சொற்கள்/பெயர்கள் உருவான விதம் அழகு என்றால், மொழிக்கு தமிழ் எனப்பெயர் வந்த இடம் பேரழகு.

2.   காற்று

கண்ணகி பிறப்பு, கோவலனுடனான திருமணம், கோவலனுக்கு மாதவியுடன் காதல், பின் ஊடல், கண்ணகியுடன் மதுரை செல்லுதல். போலவே, மோகூர்ப் பழையன் குட்டுவன் மகள், தென்னவன் பாண்டியனின் கோப்பெருந்தேவியாதல் என நானறிந்த சிலப்பதிகாரத்தின் துவக்கப்பகுதிகள் அனைத்தும் நிகழ்வது “காற்று” எனும் இப்பிரிவில். கண்ணை அன்னையில் வடிவமென கண்ணகியும், கொற்றவையின் வடிவமென கோப்பெருந்தேவியும் அவரவர் குலங்களால் சீராட்டப்படுகின்றன. அவ்வன்னைகளின் காற்சிலம்புகளின் ஒரு நகலே இவர்களிடமும் இருக்கிறது. வணிகக்குடியில் பிறந்த கோவலனின் யாழ் இசை ஆர்வம் வரும் பகுதிகள் அவன் தடம் மாறியதற்கான காரணத்தை சுட்டுகின்றன. இப்பகுதிகளும், போலவே ஒரு நள்ளிரவில் வணிகம் மறந்து மூடப்பட்ட தன் கடைமுன் நின்று கோவலன் வருந்துமிடமும், உணர்வுப்பூர்வமானவை. இத்தகைய விவரிப்புகள் எப்பாத்திரத்தையும் ஒற்றைத்தன்மையுடன் அணுகாமல் அவர்தம் நிலையையும் உணர வழிவகுக்கின்றன.

3.   நிலம்

மாதவியுடனான ஊடலுக்குப் பின்னர், கண்ணகியும் கோவலனும் மதுரை செல்கிறார்கள். ஐவகை நிலங்களைக் கடந்து மதுரையை அவர்கள் அடைவது வரை நிலம் என பகுக்கப்பட்டுள்ளது. கவுந்தி அடிகளாக மதுரை வரை துணைவரும் நீலிக்கும் கண்ணகிக்குமான உரையாடல்கள் இப்பகுதியின் அற்புதங்கள். கட்டற்ற நீலியை அஞ்சும் கண்ணகி, ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு விதமாக அன்னை வெளிப்படும் தருணங்கள், நீலியுடனான கண்ணகியின் உரையாடல்கள், அவ்வுரையாடல்களினூடே, பயணம் நீள நீள அதற்கேற்ப கண்ணகி அடையும் மாற்றங்கள், ஒவ்வொரு வகை நிலத்தின் சிறப்பியல்புகளையும் அந்நிலத்துக்குரிய கண்களைக் கொண்டு கண்ணகியை (நம்மையும்) காணவைக்கும் நீலி என இப்பகுதியில் என்னைக் கவர்ந்த அம்சங்கள் பல. ”வருபவர்களுக்கும் நீங்குபவர்களுக்கும் நடுவே துலாக்கோலென அசைகிறது இந்நகர்” என சுட்டப்படும் மதுரையின் துணைவாயிலில் வழியே கண்ணகியும் கோவனும் நுழைகிறார்கள்.

4.   எரி

மதுரையில் கண்ணகி-கோவலன் வாழ்வும், சிலம்பு விற்கச்சென்ற கோவலன் அநீதியால் கொல்லப்படுவதும், சினந்தெழுந்த கண்ணகியால் மதுரை எரிக்கப்படுவது என எரி பகுதி பகுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்படி சுருக்கிச் சொல்லி விட முடியாத வண்ணம் இருக்கிறது கதை நகர்வு. மனைவிக்கு அஞ்சியோ அல்லது அவள் மீதான காதலாலோ மதுரையை அவள் பிறந்த மறவர் குலம் மறைமுகமாக ஆள, கண்டும் காணாமலும் இருக்கிறான் மன்னன், அதனாலேயே அறம் பிழைத்தது பலமுறை நிகழ்ந்திருக்கிறது. அத்தனை பிழைக்குமான மொத்தப் பிழையீடாக தன் உயிரை நிகர் செய்கிறான் பாண்டியன். மன்னவன் கொஞ்சம் சிந்திக்கும் தருணத்திலும் “மறவர் இட்டதே மண்ணில் அறம்” என அல்லவை சொன்ன கோப்பெருந்தேவிக்கும் மெய்யறமே கூற்றாகிறது. ஒவ்வொரு முறையும் மறவர் குடித் தலைவன் பழையன் குட்டுவனின் அடாத பேச்சுக்களால் சினம் கொள்ளும் எண் குடித்தலைவர்களின், அம்மக்களின் உள நெருப்பும் மதுரையை எரித்த பெரு நெருப்பினுள் சிறு துகள்களாகவேனும் அமைந்திருக்கக்கூடும்.    

5.   வான்

விண்ணேகிய கண்ணகியின் தடங்கள், மலைமக்கள் மூலம் அதை அறியவரும் சேரன் செங்குட்டுவன், இளங்கோவடிகளான ஐய்யப்பனின் கதை, மலையேறிச்சென்று அன்னையில் அடிகளை பார்க்கும் தருணம், சேரமான் செல்லும் வழியில் சந்திக்கும் பல்வேறு மக்கள், அவர்தம் சடங்குகள், எங்கும் மாறாத ஒன்றாய் தொடர்ந்து வரும் பேரன்னை, கண்ணகி சென்ற வழியில் தானும் செல்லும் பெருந்தோழி, இளங்கோ என இப்பகுதி பகுக்கப்பட்டுள்ளபடியே உச்சம். பல இடங்கள் மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தன. மாந்தர் தம் மெய்மையின் மூன்று நிலைகளை அரசவையில், படிவர் தாமரையைக் கொண்டு விளக்கும் (முகிழ்த்தாமரை, ஓரிதழ் விரிந்தது, முற்றிலும் விரிந்தது) இடமும், கொடுங்கோளூர் (கோள் ஓயா ஊர் ) பெயர் வந்திருக்கக்கூடிய விதமும், அறிவுக்கும் அறியாமைக்குமான ஒப்பீடும் (உதாரணம் : அறிவு என்பது அறியவொண்ணாமையின் வான் முன் எழுந்த குன்று) மிகவும் அற்புதமான விவரிப்புகள்.  

*

அன்னையர் மறைய, அன்னையர் பிறக்க, தாய்மை மட்டும் அழியாமல் இம்மண்ணில் வாழ்கிறதென்று கொள்க – என இக்காப்பியத்தில் ஒரு வரி வருகிறது. நான் எண்ணியிருந்தது போல, இக்காப்பியம் கண்ணகியின் கதையல்ல, மண்ணில் யுக யுகமாய் வாழ்ந்து வரும் அன்னைகளின் கதை, அன்னைகளுக்கெல்லாம் அன்னையாய் அமைந்த பேரன்னையின் கதை.

*

”உண்ணும் அனைத்தையும் விண்ணுக்குக் கொண்டு செல்லும் ஓயாப்பெருநடனமே காப்பியம் என்க” இது காப்பியம் குறிந்து இந்நூலில் கூறப்பட்டுள்ளது; இவ்வரிக்கு மிகச்சிறந்த உதாரணமாக “கொற்றவை” எனும் புதுக்காப்பியம் அமைகிறது.

பின்குறிப்பு :

நாவலின் இறுதிப்பகுதியில் வருகின்றன ஆசிரியரின் கன்னியாகுமரி பயண நினைவுகள். அதுவரை பஞ்சபூதங்கள், ஐவகை நிலங்கள் ஊடே வரலாற்றில் முன்னும் பின்னுமாக இந்நாவலில் திளைத்த நமக்கு கொஞ்சம் ஆசுவாசம் தரும் பகுதி அது. எப்போதுமே அபுனைவுகள் என்றாலும் கூட, ஆசிரியர் திரு. ஜெயமோகனுக்குள்ளிருந்து ஒரு வசீகர கதைசொல்லி வெளிப்பட்டுக்கொண்டே இருப்பார். இப்பகுதி அதற்கான சரியான உதாரணம். இப்பகுதியை வாசிக்கும்போதே என்னுள் தோன்றிய இன்னொரு புத்தகம் “ஜெ சைதன்யாவின் சிந்தனைமரபுகள்”. அதன் ஒரு (அல்லது முதல் ?) கட்டுரையில் இதே அனுபவம் வேறொரு கோணத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

இறுதிப்பகுதியில் வரும் இன்னொரு சம்பவம் – வெறியாட்டு கொண்டெழுந்து ஆடும் பெண்ணின் கணவனை (மாணிக்கம்) அவளின் பார்வையிலிருந்து வெளியேறும்படி அனைவரும் சொல்லுமிடம். கிட்டத்தட்ட இதே சம்பவத்தை பின்புலமாகக் கொண்டு, திரு.ஜெயமோகனால் எழுதப்பட்ட ஒரு அற்புதமான சிறுகதை நினைவுக்கு வருகிறது. (சிறுகதையின் தலைப்போ, சுட்டியோ கிடைத்தால் பகிர்கிறேன்).

No comments: