அவ்வாறே, மாப்பிள்ளையானவருக்கு பெண்வீட்டில் ஏகதடபுடல் மரியாதைகள், கவனிப்புகள் நடக்கும்; ஆனால் மருமகளுக்கு தன் புகுந்தவீட்டில் அப்படி இருப்பதில்லை. எல்லாவற்றைப் போலவே இதற்கும் விதிவிலக்குகள் உண்டு. “தலைகீழ் விகிதமாக” மருமகளை மகளுக்கு இணையாக தாங்கும் குடும்பமும், மாப்பிள்ளை என்றபோதும் அவன் உணர்வுகளை ஒரு பொருட்டாகவே என்னாத குடும்பங்களும் இருப்பதையும் ம்றுக்க இயலாது.
திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய “தலைகீழ் விகிதங்கள்” அப்படிப்பட்ட ஒரு விதிவிலக்கின் கதை. மிகவும் வறுமையான குடும்பத்தில், தம்பி, தங்கைகள் என பொறுப்புகள் மிகுந்த இளைஞன், அக்குடும்பத்தின் மூத்தமகன் “சிவதாணு”. படித்தவர்கள் மிக மிகக் குறைவான ஒரு சாதியில் பிறந்து பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு மனுப்போட்டு முயன்றுகொண்டிருக்கும் எளிய, சாதாரணமான, தன்மானமிக்க இளைஞன் சிவதாணு.

நல்ல செல்வச் செழிப்பான குடும்பத்தில், இரு பெண்களில் மூத்தவள் “பார்வதி”. உடன்பிறந்த ஆண்மக்கள் என்று எவருமில்லை. தகப்பனாரோ நன்கு வியாபாரம் நடக்கும் காப்பிக்கடை முதலாளி. பெரும் தனக்காரர் ஆகையால் மூத்தமகளுக்கு நன்கு படித்த வரன் வேண்டுமென விரும்புகின்றார். பெரும்பாலும் யாரும் படித்திராத அவரது சாதியில், எளிய குடும்பத்தில் பிறந்து, வேலையே இல்லாதபோதும் நன்கு படித்த சிவதாணு பற்றி கேள்விப்படுகின்றார்.
பின்னர் நடப்பதெல்லாம் விதிவசம். தன்மான உணர்வுமிக்கவன் என்றபோதும் தன்னுடைய பெற்றோர், தம்பி, தங்கை, குடும்ப சூழல் என பல காரணங்களால் தனக்கு சம்மதமில்லை என்றபோதும் திருமணத்திற்கு சம்மதிக்கின்றான். இந்தத் திருமணம் நிச்சயமானதும் அதைக்கலைக்க சிலர் செய்யும் சூழ்ச்சிகளும், எல்லாவற்றையும் கடந்து மணமுடித்தபின்பும் விடாமல் துரத்தும் கேலிகளும் என மிக மிக தத்ரூபமாக கிராமத்தை கண்முன்னே நிறுத்தியுள்ளார் திரு. நாஞ்சில் நாடன்.
திருமணத்திற்கு பின்னர் தானும், தன் சுற்றத்தாரும் கேலிப்பொருளாக ஆக்கப்படுவதை சகிக்கமாட்டாமல், சிவதாணு பொருமலடைகின்றான். அதேசமயம் தன் தாய் செய்யும் தவறுகளை கண்டும் காணாமலும் இருக்கும் பார்வதி, சிவதாணு பணிந்து போகவேண்டுமென்று எதிர்பார்க்கின்றாள். கணவனின் உணர்வைப் புரிந்து கொள்ளாமல் மனைவியும், மனைவியைப் புரிந்து கொண்டும் ஏதும் செய்யவியலா கணவனுமாக இருவரும் எதிரெதிர் திசைகளில் பயணிக்கத் துவங்குகின்றனர். இவ்வாறாக விரிசலடையும் உறவு மெல்ல மெல்ல சிதிலமடைவதும், அதைத் தொடர்ந்து கூடுவதும் என சிறப்பான ஓட்டத்தில் செல்கின்றது கதை.
இது திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய முதல் நாவல். தான் ஒரு மிகச்சிறந்த கதை சொல்லி என்பதை தன்னுடைய முதல் நாவலின் எல்லா இடங்களிலும் உறுதிப்படுத்துகின்றார். ஆகச்சிறந்த பாத்திரப்படைப்பு கிராமத்தையே கண்முன்பு நிறுத்தும் சொல்லாடல்கள், நல்ல மக்களையும் மாறிவிடச்செய்யும் சம்பவங்கள் என எல்லாவற்றிலும் ஆசிரியரின் கதைசொல்லும் திறன் பளிச்சிடுகிறது.
இந்நாவல் “சொல்ல மறந்த கதை” என திரைப்படமாகவும் வந்துள்ளது. நான் முதலில் திரைப்படம் பார்த்துவிட்டேன். பின்னர்தான் இந்த நாவலை வாசித்தேன். என் பார்வையில் திரைக்காட்சிகள் வாயிலாக அறிந்த / அடைந்த உணர்வுகளைவிட இந்த நாவலில் மூலம் மனக்காட்சிகள் உண்டாக்கிய அதிர்வுகள் மிக அதிகம்.
மிக மிகச் சிறப்பானதொரு நாவல்.
நூல் : தலைகீழ் விகிதங்கள் (நாவல்)
எழுத்தாளர் : திரு. நாஞ்சில் நாடன் அவர்கள்
பதிப்பகம் : விஜயா பதிப்பகம்
விலை : 130 ரூபாய்