பெரும்பாலும் பொழப்புக்காக சொந்த ஊரை விட்டு தூர தேசங்களிலும்
வெளியூர்களிலும் சென்று அவஸ்த்தைப்படுபவர்கள் பெருகிவிட்ட காலகட்டம் இது. அவர்கள் எல்லாருடைய
மனதிலும் சொந்த ஊர் குறித்த ஒருவித பெருமை, ஏக்கம் நிறைந்திருக்கும். இன்னும் சொல்லப்போனால்
கணிணித்துறையில் கைநிறைய(?) சம்பாதித்தாலும் “ஒனக்கென்ன மாப்ள ஊரோட செட்டிலாயிட்ட”
என மளிகைக்கடை நண்பனிடம் பொறாமை பேசுபவர்கள் நாம். நல்ல சம்பாதித்யத்துடன் வசதியான
வாழ்க்கை வாழும் மக்களுக்கே சொந்தஊர் மீதான மோகம் மிகுந்திருந்தால், கிராமங்களில் கெளரவமாக
வாழ்ந்துவிட்டு, நகரத்தின் நெரிசலில் மானம் மரியாதையை நசுங்கவிட்டவர்கள் மனம் எவ்வளவுதூரம்
புழுங்கும்? கையளவு நிலமாக இருந்தாலும் சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்துவிட்டு, வளமும்
வானமும் பொய்த்துப்போய், மேஸ்த்திரியின் வசவுக்கு மத்தியில் செங்கல் சுமக்கும் முன்னாள்
முதலாளியின் கண்ணீர் மட்டும்தான் அதை அறியும். இதையெல்லாவற்றையும் விட மோசமானது, சொந்த
ஊர் மட்டுமின்றி, சுற்றியுள்ள பல ஊரிலும் ஒரு நாயகனாக வாழ்ந்துவிட்டு, பிழைப்புக்காக
அவமரியாதையை சகித்துக்கொண்டு வாழ்வது.
அந்த மனவலியை பதிவு செய்திருக்கும் அற்புதமான ஒரு கதை
“ஏழுமலை ஜமா”. திரு. பவா செல்லத்துரை அவர்களின் “நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை”
எனும் தொகுப்பில் (வம்சி பதிப்பக வெளியீடு) இடம் பெற்றுள்ள கதை இது.

தமிழகத்தின் திருவிழா இரவுகளை கூத்துக்கலை அலங்கரித்த
காலகட்டத்தில், சுத்துப்பட்டு ஊர்களில் கொடிகட்டிப் பறந்த கூத்து வாத்தியார் ஏழுமலை.
சென்ற ஊர்களிலெல்லாம் விடிய விடிய கூத்து நடத்தி மக்கள் மனதில் ஒரு நாயகன் அந்தஸ்த்தில்
வாழ்ந்த ஏழுமலை, கால மாற்றத்தால் கூத்தின் மவுசு குறைந்துபோனதால், பெங்களூரில் மூட்டை சுமப்பவனாக இருந்துவிட்டு, அவமானம் சகிக்காமல் மீண்டும்
சொந்த ஊர் திரும்பும் இடத்தில் துவங்குகிறது கதை. மொத்தமே ஏழு பக்கங்களுக்குள் அடங்கிவிடும்
கதையில் ஏழுமலையின் மார்க்கெட் வாழ்க்கை குறித்தோ அங்கு அவன் சந்தித்த அவமானம் குறித்தோ
பெரும் விவரணைகள் ஏதுமில்லை. தன் மகன் வயதொத்த ஒருவனால் ஒருமையில் ஏழுமலை அழைக்கப்பட்ட
ஒரு நிகழ்வும் தொடர்ந்து சில குறிப்புகளும் மட்டுமே உண்டு. ஆனால், ஏழுமலையின் மனவலி
உணர்த்த அவையே போதுமானதாக உள்ளது. அதேபோலவே ”கூத்து” நடத்திக்கொண்டிருந்த ஏழுமலையின்
சுகவாழ்க்கையும் சில பத்திகளில் விளக்கிவிடுகிறார் திரு.பவா செல்லத்துரை.
சொந்த ஊருக்குத் திரும்பி வந்து தன் பழைய சகாக்களை
சந்திக்கிறார் ஏழுமலை. கதாபாத்திரங்கள் எல்லாரும் கூலிகளாகவும், தரகர்களாகவும் மாறிவிட்டதால்,
மனம் நொந்துபோய் குடித்துவிட்டு திருப்பிவரும் வழியில் ஏழுமலைக்கு தொலைவில் நடக்கும்
கூத்துப்பயிற்சியின் சத்தம் கேட்கிறது. உடம்பெல்லாம் காதுகளாகி, காதே உடம்பாகி சைக்கிளுடன்
பயிற்சி நடக்கும் இடத்தை அடைகிறார் ஏழுமலை. அங்கு தப்பும் தவறுமாக நடக்கும் பயிற்சி
கண்டு கொதித்து, ஆடி களைத்துவிழும் ஏழுமலையை அவர்கள் அணைத்துக்கொள்வதாக முடிகிறது கதை.
திரு. பவா செல்லத்துரையின் வார்த்தைகளில் நீங்கள் ஏழுமலையின் கதையை வாசித்து…. அல்ல
அல்ல வாழ்ந்து பாருங்கள்.
“மாப்ள எங்கூர்ல என்னப்பத்தி கேட்டுப்பாத்தா தெரியும், ராசா மாதிரி இருந்தேன்,
என் போறாத காலம் இவங்கிட்டெல்லாம் ஏச்சுப்பேச்சு வாங்க வேண்டியிருக்கு” எனச்சொல்லும்
எல்லாருக்குள்ளும் ஒரு ஏழுமலை இருக்கக்கூடும்.