title


Showing posts with label தகப்பன்சாமி. Show all posts
Showing posts with label தகப்பன்சாமி. Show all posts

அதெச் செய்யுங்க மொதல்ல...

 

அதெச் செய்யுங்க மொதல்ல...

கடும்கோபத்துடன் தாத்தா எங்களை நோக்கித் திட்டியது, பழனி மலையில் தங்கத்தேர் பவனி வந்துகொண்டிருக்கும் நிலைகளுல் ஒன்றில். எங்களை என்றால் என்னை, அப்பாவை மற்றும் சித்தப்பாவை. இது ஏறத்தாழ 25 வருடங்களுக்கு முந்தைய கதை.

எப்போதும் போல் அவ்வருடமும், ஆடிமாத வளர்பிறை சஷ்டி அன்று மதியமே பழனி வந்து, மடம் ஒன்றில் அறை வாடகைக்கு எடுத்துவிட்டோம். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மலையேறி சாமி தரிசனம் முடித்து தங்கத்தேர் உலாவையும் பார்த்தாயிற்று. இனி அறைக்கு சென்று உறங்குவதும், பின்னர் காலையில் மீண்டும் ஒருமுறை மலையேறி சாமி தரிசனம் செய்த பின்னர் வீடு திரும்புதலும் மட்டுமே பாக்கி. ஆனால், ஒவ்வொரு வருடமும் தவறாமல், எங்களுக்குள் நிகழும் விவாதம் அன்றும் நிகழ்ந்தது. அதுவே தாத்தாவின் கோபத்துக்கு காரணம். விவாதம் வேறென்றுமில்லை வள்ளுவரா சினி வள்ளுவரா என்பது. இரண்டும் பழனியில் இருக்கும் திரையரங்குகள். பேருந்தில் வரும்போது பழனி நெருங்குகையில், தொலைவில் தெரியும் பழனி மலையை பக்தியுடன் கைகள் வணங்கும்போதே, ஜன்னல் வழியே வள்ளுவரில் என்ன படம், சினி வள்ளுவரில் என்ன படம் என்பதையும் குறித்துக்கொள்வது வழக்கம்.

*

அப்பா அம்மா உட்பட அங்கு வரும் உறவினர்கள் பலரும் வருடத்தில் பார்ப்பது ஒரே ஒரு திரைப்படம்தான். அதுவும் பழனியில் மட்டுமே. அதனால்தானோ என்னவோ அங்கு திரைப்படத்துக்கு போவது ஒரு தவிர்க்கமுடியாத சடங்கு போல ஆனது. தங்கத்தேர் பார்த்தபின்னர் மீண்டும் ஒருமுறை சாமி தரிசனம் செய்துவிட்டு மடத்துக்கு வருவோம். தாத்தாவும் அவருடன் துணைக்கு சிலரும் எப்போதும் மடத்தில் தங்கிக்கொள்வர். கட்டிக்கொண்டு வந்த புளிச்சோறை அவசர அவசரமாக சாப்பிட்ட பின்னர் ஓட்டமும் நடையுமாக வள்ளுவருக்கோ சினி வள்ளுவருக்கோ (இரண்டும் அருகருகே இருப்பவைதான்) சென்று படம் பார்ப்போம். பார்க்கும் திரைப்படங்கள் சில முறை மிகவும் சலிப்பாக இருந்து திரையரங்கிலேயே தூங்கிவழிந்ததும் உண்டு. ஆனால், ஒரு வருடம் கூட தவறாமல் மனதை நிறைக்கும் மகிழ்வான தருணம் என்பது படம் முடிந்து மடத்துக்கு திரும்பி வருவதுதான்.

எப்படியும் 2 அல்லது 3 கிலோமீட்டர்களாவது இருக்கும் ஒரு மணி நேரத்துக்கும் குறைவான பயணம்தான். ஆனால், அந்தப்பயணத்தின் நாயகன் அப்பாதான். அன்றைய திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் அல்லது அந்த வருடத்தில் நடந்த நிகழ்ச்சிகள் என ஏதேனும் ஒன்றை முன்வைத்து பெரும் கிண்டலும் கேலியுமாக பேசிக்கொண்டே வருவார். மலையேறிய அசதியோ தூக்கமோ எதுவும் அவ்வேளையில் பெரிதாகத் தோன்றாமல், சிரித்தபடியே கதை கேட்டுக்கொண்டே பல இரவுகள் நடந்திருக்கின்றேன். அப்படி தானும் உற்சாகமாய் இருந்துகொண்டு சுற்றி இருப்பவர்களையும் சிரிக்க வைக்கும் அப்பாவின் சித்திரம் இவ்விரவில் எழுகிறது.

அப்படி, அப்பா மகிழ்ந்திருந்த தருணங்கள் பெரும்பாலும் மனிதர்களுடன் இணைந்திருந்த பொழுதுகள்தான். எதன் பொருட்டே ஆனாலும் மனிதர்களுடன் இணைந்திருக்க கிடைத்த எந்த வாய்ப்பையும் அப்பா தவறவிட்டதேயில்லை.

உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். மாதம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை சென்னை அடையாறில் 2 மணி நேரம் நடக்கும் அடையாறு திருக்குறள் சங்க நிகழ்வில் கலந்துகொள்ள, சனிக்கிழமை இரவு பூண்டியிலிருந்து கிளம்பி, மூன்று நான்கு பேருந்துகள் மாறி, ஞாயிற்றுக்கிழமை காலை, பெருங்குடியில் நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு வருவார். வந்தவுடன், தான் வந்த தகவல் மற்றும் வரும்போது நடந்த நிகழ்வுகள் குறித்து நண்பர்களுடன் போனில் பேச்சு. இடையே குளியல், உணவு. மாலை திருக்குறள் சங்க நிகழ்வு. அங்கிருந்து அப்படியே கோயம்பேடு. திங்கள் காலை தன்னுடைய வழக்கமான கடை வேலை. அந்த இரண்டு மணி நேரங்களில் அவர் வயதொத்த ஒரு சிறு நண்பர் குழாம் அவருக்கு சென்னையில் உண்டாகியிருந்தது. அதன் பொருட்டே நாங்கள் சென்னையில் இருந்தவரை பெரும்பாலும் அப்பா அந்நிகழ்வை தவறவிட்டதேயில்லை.

*

அப்பாவின் சிரிப்பு, மனிதர்களுடன் கூடியிருப்பதில் அவருக்கிருந்த ஆசை, இடது கையின் மீது வலது கையை தட்டி சிரித்துக்கொண்டே அவர் பேசிய தருணங்கள் என பல நினைவுகளை கிளர்த்திக்கொண்டிருக்கிறது அன்னம் சிறுகதை (https://www.jeyamohan.in/132369/).

சக உயிர்களுடன் அன்புகொண்டு மகிழ்ந்திருக்கும் தருணங்களை சமன் செய்யும் எந்தக் கருவியும் இம்மண்ணில் இல்லை.

#தகப்பன்_சாமி

 

தகப்பன்சாமி

 ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு,

”மச்சீ, தண்ணீர்ப்பந்தல் பஸ்ஸ்டாப்க்கு எதுத்தாப்புல புதுசா ஒரு ஓட்டல் தொறந்திருக்காங்க. ஹை க்ளாசு. புரோட்டா, ரொட்டி, பிரியாணின்னு எல்லாமே நல்லா இருக்கு. ஒருநா போயிப்பாருங்க”

எங்கள் மளிகைக்கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவரின் புண்ணியத்தால், அன்றிரவே அப்பா என்னை அந்தக் கடைக்கு அழைத்துப்போனார். மிகப்பெரிய ஹாலில் குறைவான டேபிள்கள் மட்டுமே ஏராளமான இடைவெளியில் போடப்பட்டிருந்ததும், எதிரில் இருப்பவர் மட்டும் தெரியுமளவுக்கே இருந்த மிகக்குறைவான வெளிச்சமும் அதுவரை நாங்கள் கண்டிராதது. சைக்கிள் கேரியரில் என்னை வைத்துக்கொண்டு ஏறத்தாழ மூன்று கி.மீ.கள் மிதித்துக்கொண்டு வந்த களைப்பைப் போக்க தன்முன் தண்ணீர் நிரம்பி இருந்த கண்ணாடித் தம்ளரை ஒரே மூச்சில் காலி செய்தார் அப்பா. உக்கார்ந்து வந்த களைப்பு போக நானும் ஒரு மிடறு தண்ணீர் குடித்தேன். ஜில்லென்று இருந்த அந்த தண்ணீரே தனிசுவையாகத் தோன்றியது. இதற்கு முன் பார்த்திருந்த, ”மாஸ்டர் ஒரு முட்டைபுரோட்டா” என உரக்க ரசித்துச் சொல்லும் சர்வர்கள் அங்கில்லை, மிக நெருங்கி வந்து ”என்ன சாப்பிடுறீங்க?” என சன்னமான குரலில் கேட்ட சர்வரிடம், அதனினும் மெல்லிய குரலில் ஏதோ சொன்னார் அப்பா. கொஞ்சம் யோசித்தவராக சரி எனும்படி தலையாட்டினார் அவர். பின்னர் என்னிடம் ”என்ன சாப்பிடுற?” எனக்கேட்டார் அப்பா. வீட்டிலிருந்து கிளம்பும் போதே யோசித்து வைத்திருந்த பதிலை உடனடியாக சொன்னேன் “பரோட்டா”.

“ரெண்டு புரோட்டா, கொடுங்க”

“சரீங்க சார். கிரேவி தனியாதான் ஆர்டர் பண்ணனும்” கொஞ்ச நேரம் மெளனம். அப்பாவின் தயக்கத்தை உணர்ந்துகொண்டவராய் சர்வர் தொடர்ந்தார் “எக் கிரேவி கொண்டு வரேன்ங்க சார். செரியா இருக்கும்”.

சம்மதமாய் தலையாட்டினார் அப்பா.

இளஞ்சூடான நீரால் கழுவப்பட்டிருந்த இரண்டு பீங்கான் தட்டுகள் எங்கள் முன் வைக்கப்பட்டன. ஒன்று மட்டும் போதுமெனெ சொல்லி மற்றொன்றை எடுத்துச்செல்லச் சொன்னார் அப்பா. தொடர்ந்து இரண்டு புரோட்டாவும், அலங்கரிக்கப்பட்ட முட்டை கிரேவியும் தனித்தனி கிண்ணங்களில் வந்தன. வெகு கெட்டியாக சமைக்கப்பட்டிருந்த முட்டை கிரேவியின் வாசம் கூடவே நன்கு சூடான பொன்னிற புரோட்டா என பசியில்லாதவரைக்கூட சாப்பிடத்தூண்டும் கூட்டு அது. இரண்டு புரோட்டாவுக்கு துணையாக, ஒட்டு மொத்த கிரேவியும், அதிலிருந்த முட்டைகளும் என்னுள் போன வேகம் தெரியவில்லை. அதிகாலையில் இருந்து மளிகைக்கடையில் வேலை செய்த களைப்பையோ அல்லது அரைமூட்டை அரிசி மாதிரி இருந்த என்னை சைக்கிளில் வைத்து மிதித்து வந்த களைப்பையோ, பசியையோ எதையுமே காட்டி கொள்ளாமல், நான் சாப்பிடுவதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அப்பா. இடைஇடையே இரண்டு மூன்று டம்ளர் தண்ணீரையும் காலி செய்திருந்தார்.

பில் வந்தது. 45 ரூபாய். 5 ரூபாய் டிப்ஸ். மொத்தம் 50 ரூபாய்.

வீட்டுக்கு வந்த பின்னர்தான் அப்பா என்னிடம் சொன்னார் ”கடைக்கு போன ஒடனே சர்வர் கிட்ட சொல்லிட்டேன் அம்பது ரூபாதான் இருக்கு. அத தாண்டுறமாதிரி இருந்தா சொல்லிடுங்கன்னு. நல்லவேள நீ அதுக்குள்ள வர அளவுக்குத்தான் சாப்பிட்ட”

அவருக்கு எப்போதுமே என்னுடைய தேவைகள் புரிந்திருந்தது. எனக்குத்தான் அவரைப் பற்றிய பல விசயங்கள் புரியாமலேயே போனது.

*

அநீதி திரைப்படத்தில், காளி வெங்கட்டின் “தங்கப்புள்ள” எனும் குரல் கேட்கும்போதெல்லாம், என்னுடைய ”தகப்பன்சாமி”யின் நினைவுகள் கண்ணீருடன்....

*

#அப்பா

#தகப்பன்சாமி