title


குமாரத்தி

 அதிகாலை. 


மூடப்பட்டிருக்கும் அந்த வீட்டு கதவின் சாவித்துவாரம். கதவின் இருபுறமும் துவாரத்தில் பொருத்தப்பட்டு மறுபுறத்தை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கும் விழிகள். அவற்றில் தழும்பி நிற்கும் கண்ணீர். இருபுறமும் நீர் கோர்த்த கருவிழிகள். வீட்டுக்கு உள் இருக்கும் விழிகள் இளைய மகளுடையது. வெளிப்புறமிருப்பதோ தகப்பனுடையது. இருவருக்குமே மறுபுறம் இருப்பது எவர் என்பது நன்கு தெரியும். நினைவறியா வயதில் அம் மகவை விட்டுப்போன தகப்பனும் சரி, பத்து வருடங்கள் தாண்டிய பின்னர் தன் தகப்பனை பார்த்து, இப்போது அவன் அன்புக்கு ஏங்கும் மகளும் சரி, தாங்கள் யார் என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மீண்டும் ஒரு பெரிய பிரிவுக்கு ஆயத்தமாகின்றனர். 

நான் இதுவரை வாசித்த ஆகப்பெரிய துயர்மிகு காட்சிகளுல் ஒன்று குமாரத்தி நாவலில் வரும் இத்தருணம். இதற்கிணையான பெரும் வலி மிகு தருணங்களை மிக எளிய சொற்களில் உணர்த்துவதே இந்நாவலின் பெரும் சிறப்பு.

ஒரே ஒரு நாள் தாமதத்தால் சவரியான் இழப்பது, அவனது மீதியிருக்கும் வாழ்க்கை முழுவதையுமே. ஒருவகையில், அந்நாளில் அவன் அடைந்தது அவனது முந்தைய தவறுக்கான தண்டனை எனக்கொண்டாலும் கூட, அதே சிலுவையை தேவமலரும், ஞானப்பூவும் சுமக்க நேர்வது வாழ்வின் விளங்க முடியாத புதிர்களில் ஒன்று. 

சாயலில் தேவகுமாரன் தெரிவதாலோ என்னவோ, கெம்புவிடம் இயேசுவைக் காணும் அமலி சிஸ்டர். தன் வருகையை அவளுக்கு அறிவிக்க, மழை பொய்த்துப் போய் வறண்டிருக்கும் கிணறுகளின் அடி ஆழத்தில் நெருப்பினை எரிய வைத்தல், தேவாலயத்தின் மணியை, அதன் நாவை களவு செய்து அதை பின்கட்டில் பத்திரமாக்குதல் என கெம்புராஜின் உலகமே வேறு. அனைவராலும் கைவிடப்பட்ட ஊருக்கு களவாடப் போய், அங்கிருக்கும் ஒரே ஒருவனிடம் மாட்டிக்கொள்கிறான் கெம்பு. அவ்வூரில் படையலும் பூஜையுமற்று தனித்து விடப்பட்ட கருப்பனுக்கு, அவை நிகழ கெம்புவும், அமலியும் உதவுவது என விநோதங்கள் நிறைந்தது அவன் உலகு. 

கெம்புவிடம் இயேசுவைக் கண்ட அமலியைப் போலவே, சமேத் மேரியிடம் பெருங்கருணை கொண்ட அன்னை மேரியை கெம்புவும் கண்டிருக்கக்கூடும். இரு நாய்களின் பசியைப் போக்க சலேத் உதவும் முதல் காட்சியிலேயே அவளின் பெருங்கருணையால் பீடிக்கப்படுகிறான் கெம்பு. தொடரும் நிகழ்வுகள் அனைத்துமே அவனது சலேத் மீதான அவனது பிரியத்தை மென்மேலும் வளர்க்கின்றன. 

மாமா மாமா என ஆசையாய் அழைத்துக்கொண்டிருந்த சிறுவனின் மனதுக்குள் சுற்றம் ஜாதியை விதைத்து அவனை முதலில் கொலைகாரனாக்கி பின்னர் அவனையும் கொன்றது. இது தகப்பனையும் ஆசைத்தம்பியையும் தன் கையால் ஐநூறு வெட்டுகள் வெட்டிக்கொன்ற ஜோதியின் கதை.

விடிந்தால் தூக்கு தண்டனை நிறைவேற இருக்கும் கெம்புவுக்கும், சில வாரங்களில் தூக்கில் தொங்கப்போகும் ஜோதிக்கும் ஒரு இரவு உணவு. ஒரு சிறு பொழுதுதான் பழக்கம் என்றாலும் அச்சிறு பொழுதிலேயே கெம்புவுக்கு அன்னையாகவும், காதலியாகவும் மாறுகிறாள் ஜோதி. ஒருவகையில் அமலி சிஸ்டரின் இயேசுவாகிய கெம்பினுடைய (The Last Supper) இறுதி இரவுணவு ஜோதியுடன் அமைகிறது. 

சிறை மதிலுக்கு உள்ளே, மிக வசீகரமான மின்னலைப் போன்ற சிரிப்பை, கெம்புராஜ்ஜினுடைய இறுதிச்சிரிப்பை சுமந்துகொண்டு திருப்தியடைந்த ஜோதியும், மதிலுக்கு வெளியே இயேசுவின் உடலை சுமந்து செல்லக் காத்திருக்கும் அமலி சிஸ்டர் மற்றும் சலேத் மேரியும் ஒரே மழையில் நனைவதில் நிறைகிறது குமாரத்திகளின் வாழ்க்கை.

***

உறக்கச் சடவிருந்த ஒரு இரவில், சில பக்கங்கள் மட்டும் என ஆரம்பித்து இந்நாவலை படிக்கத் துவங்கி, கடிகாரத்தின் பெண்டுலம் போல உணர்ச்சிகளில் ஊசலாடிக்கொண்டு, எழுத்துகளை மறைக்கும் கண்ணீர்த்துளிகளுடன் இந்நாவலை முடித்தது ஒரு நள்ளிரவில். நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரே அமர்வில் நான் வாசித்தது இந்நாவல். மிகக்கூரிய சரியான இலக்கடைந்த சொற்கள், பெரும் எழுச்சிமிக்க தருணங்களையும் அதன் உணர்வுகளையும் மிகவும் குறைவான சொற்களில் வாசகனுக்கு கடத்தும் எழுத்து, இவற்றுக்கிணையாகவே மிகத் தரமாக நூலாக்கம் மற்றும் எழுத்துருகள் இவையே சலிப்பில்லா வாசிப்புக்கு காரணம்.

நன்றியும் பேரன்பின் தழுவல்களும் Naran நரன் சார் !!

குமாரத்தி (நாவல்) - நரன் - சால்ட் பதிப்பகம்

#வாசிப்பு_2026

#குமாரத்தி

அதெச் செய்யுங்க மொதல்ல...

 

அதெச் செய்யுங்க மொதல்ல...

கடும்கோபத்துடன் தாத்தா எங்களை நோக்கித் திட்டியது, பழனி மலையில் தங்கத்தேர் பவனி வந்துகொண்டிருக்கும் நிலைகளுல் ஒன்றில். எங்களை என்றால் என்னை, அப்பாவை மற்றும் சித்தப்பாவை. இது ஏறத்தாழ 25 வருடங்களுக்கு முந்தைய கதை.

எப்போதும் போல் அவ்வருடமும், ஆடிமாத வளர்பிறை சஷ்டி அன்று மதியமே பழனி வந்து, மடம் ஒன்றில் அறை வாடகைக்கு எடுத்துவிட்டோம். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மலையேறி சாமி தரிசனம் முடித்து தங்கத்தேர் உலாவையும் பார்த்தாயிற்று. இனி அறைக்கு சென்று உறங்குவதும், பின்னர் காலையில் மீண்டும் ஒருமுறை மலையேறி சாமி தரிசனம் செய்த பின்னர் வீடு திரும்புதலும் மட்டுமே பாக்கி. ஆனால், ஒவ்வொரு வருடமும் தவறாமல், எங்களுக்குள் நிகழும் விவாதம் அன்றும் நிகழ்ந்தது. அதுவே தாத்தாவின் கோபத்துக்கு காரணம். விவாதம் வேறென்றுமில்லை வள்ளுவரா சினி வள்ளுவரா என்பது. இரண்டும் பழனியில் இருக்கும் திரையரங்குகள். பேருந்தில் வரும்போது பழனி நெருங்குகையில், தொலைவில் தெரியும் பழனி மலையை பக்தியுடன் கைகள் வணங்கும்போதே, ஜன்னல் வழியே வள்ளுவரில் என்ன படம், சினி வள்ளுவரில் என்ன படம் என்பதையும் குறித்துக்கொள்வது வழக்கம்.

*

அப்பா அம்மா உட்பட அங்கு வரும் உறவினர்கள் பலரும் வருடத்தில் பார்ப்பது ஒரே ஒரு திரைப்படம்தான். அதுவும் பழனியில் மட்டுமே. அதனால்தானோ என்னவோ அங்கு திரைப்படத்துக்கு போவது ஒரு தவிர்க்கமுடியாத சடங்கு போல ஆனது. தங்கத்தேர் பார்த்தபின்னர் மீண்டும் ஒருமுறை சாமி தரிசனம் செய்துவிட்டு மடத்துக்கு வருவோம். தாத்தாவும் அவருடன் துணைக்கு சிலரும் எப்போதும் மடத்தில் தங்கிக்கொள்வர். கட்டிக்கொண்டு வந்த புளிச்சோறை அவசர அவசரமாக சாப்பிட்ட பின்னர் ஓட்டமும் நடையுமாக வள்ளுவருக்கோ சினி வள்ளுவருக்கோ (இரண்டும் அருகருகே இருப்பவைதான்) சென்று படம் பார்ப்போம். பார்க்கும் திரைப்படங்கள் சில முறை மிகவும் சலிப்பாக இருந்து திரையரங்கிலேயே தூங்கிவழிந்ததும் உண்டு. ஆனால், ஒரு வருடம் கூட தவறாமல் மனதை நிறைக்கும் மகிழ்வான தருணம் என்பது படம் முடிந்து மடத்துக்கு திரும்பி வருவதுதான்.

எப்படியும் 2 அல்லது 3 கிலோமீட்டர்களாவது இருக்கும் ஒரு மணி நேரத்துக்கும் குறைவான பயணம்தான். ஆனால், அந்தப்பயணத்தின் நாயகன் அப்பாதான். அன்றைய திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் அல்லது அந்த வருடத்தில் நடந்த நிகழ்ச்சிகள் என ஏதேனும் ஒன்றை முன்வைத்து பெரும் கிண்டலும் கேலியுமாக பேசிக்கொண்டே வருவார். மலையேறிய அசதியோ தூக்கமோ எதுவும் அவ்வேளையில் பெரிதாகத் தோன்றாமல், சிரித்தபடியே கதை கேட்டுக்கொண்டே பல இரவுகள் நடந்திருக்கின்றேன். அப்படி தானும் உற்சாகமாய் இருந்துகொண்டு சுற்றி இருப்பவர்களையும் சிரிக்க வைக்கும் அப்பாவின் சித்திரம் இவ்விரவில் எழுகிறது.

அப்படி, அப்பா மகிழ்ந்திருந்த தருணங்கள் பெரும்பாலும் மனிதர்களுடன் இணைந்திருந்த பொழுதுகள்தான். எதன் பொருட்டே ஆனாலும் மனிதர்களுடன் இணைந்திருக்க கிடைத்த எந்த வாய்ப்பையும் அப்பா தவறவிட்டதேயில்லை.

உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். மாதம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை சென்னை அடையாறில் 2 மணி நேரம் நடக்கும் அடையாறு திருக்குறள் சங்க நிகழ்வில் கலந்துகொள்ள, சனிக்கிழமை இரவு பூண்டியிலிருந்து கிளம்பி, மூன்று நான்கு பேருந்துகள் மாறி, ஞாயிற்றுக்கிழமை காலை, பெருங்குடியில் நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு வருவார். வந்தவுடன், தான் வந்த தகவல் மற்றும் வரும்போது நடந்த நிகழ்வுகள் குறித்து நண்பர்களுடன் போனில் பேச்சு. இடையே குளியல், உணவு. மாலை திருக்குறள் சங்க நிகழ்வு. அங்கிருந்து அப்படியே கோயம்பேடு. திங்கள் காலை தன்னுடைய வழக்கமான கடை வேலை. அந்த இரண்டு மணி நேரங்களில் அவர் வயதொத்த ஒரு சிறு நண்பர் குழாம் அவருக்கு சென்னையில் உண்டாகியிருந்தது. அதன் பொருட்டே நாங்கள் சென்னையில் இருந்தவரை பெரும்பாலும் அப்பா அந்நிகழ்வை தவறவிட்டதேயில்லை.

*

அப்பாவின் சிரிப்பு, மனிதர்களுடன் கூடியிருப்பதில் அவருக்கிருந்த ஆசை, இடது கையின் மீது வலது கையை தட்டி சிரித்துக்கொண்டே அவர் பேசிய தருணங்கள் என பல நினைவுகளை கிளர்த்திக்கொண்டிருக்கிறது அன்னம் சிறுகதை (https://www.jeyamohan.in/132369/).

சக உயிர்களுடன் அன்புகொண்டு மகிழ்ந்திருக்கும் தருணங்களை சமன் செய்யும் எந்தக் கருவியும் இம்மண்ணில் இல்லை.

#தகப்பன்_சாமி