title


ஆறாவது வார்டு

 
மனநோயாளிகள் மற்றும் நரம்பு நோயாளிகளின் மனம் மிக மிக ஆற்றல் கொண்டது. ஏனென்றால் அதற்கு பரவலும் சிதறலும் இல்லை. மிகவும் குவிதல் கொண்டது அது. மாபெரும் யோகிகளுக்குரிய குவிதல். ஒன்றிலேயே ஒற்றைப் புள்ளியிலேயே அது பல மாதங்கள், ஏன் பற்பல ஆண்டுகள் நிலைகொள்ளும். அலைபாயும் தன்மைகொண்ட சாதாரண மனங்கள் அந்த ஆற்றலை எதிர்கொள்ளவே முடியாது. அவை மனநோயாளியின் மனங்களுக்கு முன் அடிபணிந்துவிடுவதே வழக்கம்

.திரு.ஜெயமோகன். (ஓநாயின் மூக்கு
சிறுகதையில்)
*

பத்தென்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிகளில், ரஷ்யாவில் கடும் கொள்ளை நோயாகப் பரவிய காலராவைக் கட்டுப்படுத்த பல மருத்துவர்கள் பெருமுயற்சி எடுத்தனர். அரசாங்கத்திடமிருந்து, போதுமான உபகரணங்களோ அல்லது பண உதவியோ கிடைக்கப் பெறாத போதும், தன்னுடைய சொந்தப் பணத்தை, சொத்துக்களைக் கொண்டு கடமையாற்றிய பல மருத்துவர்களுல் ஒருவர் அந்தோன் செகாவ். மற்ற மருத்துவர்களின் பெயரை நாம் அறியாதபோதும் செகாவின் பெயர் நமக்குத் தெரியக் காரணம் அவர் ”காக்கும்” மருத்துவர் மட்டுமல்ல, “படைக்கும்” கலைஞனும் கூட என்பதே. செகாவ்வைப் போல தன்னால் சிறுகதை எழுதமுடியவில்லையே என தல்ஸ்தோய் வருந்துமளவுக்கு மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர் செகாவ். அவரது முக்கியமான கதைகளுல் ஒன்று என “ஆறாவது வார்டு” எனும் குறுநாவலைச் சொல்லலாம்.
*

ருஷ்ய ஆட்சி மன்றமானசேம்ஸ்த்வோவினால் நடத்தப்படுகிறது ஒரு மருத்துவமனை. அரசு / ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்படும் அமைப்புகளுக்கே உண்டான அலட்சியங்களிலும் அரைகுறை வசதிகளாலும் நிரம்பிய மருத்துவமனைக்கு மருத்துவராக வருகிறார் டாக்டர் ஆந்திரேய் எமீபிச். அம்மருத்துவமனையின் ஆறாவது வார்டில், இருக்கும் மனநோயாளிகளுடனான அவரது உறவும், அது அவரது வாழ்வில் நிகழ்த்தும் சிக்கல்களுமே இக்கதை.

ஆறாவது வார்டில் இருக்கும் ஐந்து நோயாளிகளுல் இவான் மிகவும் தனித்துவமானவர். நல்ல வாசிப்பும், கூடவே பொறுப்புடன் தன் கடமையை ஆற்றிவரும் வாழ்க்கையும் அமைந்த இவானுக்கு, “தன்னை காவலர்கள் கைது செய்யப்போகிறார்கள்” என விபரீத எண்ணம் தோன்றுகிறது. தொடரும் அவ்வெண்ணத்தின் சிக்கல்களால் மனநலக் காப்பகத்தில் அடைக்கப்படுகிறான் இவான். ஆனால், காப்பகத்தில் இருப்பவர்களிலேயே வெகு தெளிவுடன் சிந்திப்பவனாகவும் அவனே இருக்கிறான். மறுபுறம் மருத்துவமனை செயல்படும் விதத்தில் கடும் அதிருப்தி இருந்தபோதும் தன் எல்லைக்குட்பட்டு, தன்னால் இயன்ற மருத்துவத்தை செய்ய முற்படுகிறார் டாக்டர் ஆந்திரேய் எபீமிச். தற்செயலாக இவானுடனான துவங்கும் ஒரு உரையாடல், எபீமிச்சுக்குள் பலவித கேள்விகளை எழுப்புகிறது. இவானுடனான தொடர் உரையாடல்களும், மருத்துவமனையின் அமைப்புக்குள் பொருந்திப்போகாத எபீமிச்சின் இயல்பும், அலைக்கழிக்கும் கேள்விகளால் தடுமாற்றத்துக்கு உள்ளாகும் அவருடைய நடவடிக்கைகளும் என எல்லாமும் சேர்ந்து கொள்ள, ஒரு கட்டத்தில் மருத்துவர் எபீமிச், மன நோயாளி எனகருதப்பட்டு அடைக்கப்படுகிறார். மீள முடியாத ஒரு கூண்டாக அம்மருத்துவமனை அவருக்கு அமைந்து விட, எபீமிச்சின் மரணத்தில் முடிகிறது “ஆறாவது வார்டு”.
*

எந்த வாழ்க்கையிலும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செல்வதற்கு வாய்ப்புள்ள ஒரு இடமாகவே ஆறாவது வார்டைக் கருத முடிகிறது.  மிக மெல்லிய கோட்டுக்கு இந்தப் பக்கம் நாம் வாழ விதிக்கப்பட்டிருப்பதும், திரும்பத் திரும்ப நம்மை அலைக்கழிக்கும் கேள்விகள் நம்முன் எழாதிருப்பதும், அல்லது நாம் அதைக் காண மறுப்பதும், குற்றவுணர்வின் சாயல் கொஞ்சமும் இன்றி நம்மால் ஒவ்வொரு நாளையும் வெற்றிகரமான கழிக்க முடிவதும், முற்றிலும் தற்செயலான ஒன்றாகவே அமைந்திருக்க வாய்ப்புள்ளதுதானே. அப்படிப்பட்ட ஒரு நல்வாய்ப்பைத் தவற விட்டவன் என்றுதான் இவானைக் கருதத் தோன்றுகிறது. இயல்பானது என நாம் வரையறுத்து வைத்திருக்கும் உலகில் இவானுக்கு வாய்க்காத தெளிவு, ஆறாவது வார்டில் கிடைத்திருக்கிறது. ஆனால், அங்குமே அது ஊரோடு ஒத்து வாழாத குணமாகவே கருதப்படுகிறது. மருத்துவர் எபீமிச்சுடனாக ஆரம்ப உரையாடல்களில், வெளிப்படும் இவானின் அகம் அவனை ஒரு லட்சிய மனிதன் என்று எண்ணவைக்கிறது. அவனது லட்சிய நோக்குக்கு பதிலாக எபீமிச்சினால் கூற முடிந்ததெல்லாம் நடைமுறை வாழ்க்கை சார்ந்த நெறிகளும், உலகியல் தத்துவங்களும் மட்டுமே. தன்னுடைய சக நோயாளியாக எபீமிச் ஆனதும், தனக்கு அருளப்பட்ட தத்துவங்களை இவான் நினைவூட்டும் விதம் அருமை.

அருமை நண்பரே, உள்ளம் குலைந்துவிட்டேன் - எபீமிச்

தத்துவ ஞானம் பேசிப்பார்ப்பதுதானே – இவான்
*

இவானிடம் எபீமிச் பேசும் நடைமுறை வாதங்கள் அனைத்துமே தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ளத்தான். முற்றிலும் லட்சிய வேட்கையில் மூழ்க முடியாமல், அதே சமயம் பிழைப்புவாதியாகவும் வாழ முடியாமல் எபீமிச் தடுமாறுவது, சீரழிந்த நிலையிலிருக்கும் மருத்துவமனைக்கு அவர் வரும் துவக்க அத்தியாயங்களிலேயே காட்டப்படுகிறது. ”உலகிலுள்ள நல்லவை யாவும் ஆதியில் தீமையிலிருந்து உதித்தவையே” எனும் சமாதானம் சகித்துக்கொள்ள முடியாத நிலையிலிருக்கும் மருத்துவமனைக்கு மட்டுமானதல்ல. ஆயிரம் சமாதானம் சொன்னபோதும் எபீமிச்சுக்கு நிதர்சனம் புரிந்துதான் இருக்கிறது. இவானுடனான ஒரு உரையாடலில் “நீங்கள் உளநோயாளியாகவும் நான் டாக்டராகவும் இருப்பதில் ஒழுக்க நெறிக்கோ தர்க்க நியாயத்துக்கோ இடமில்லை, முற்றிலும் சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்தது இது” எனவும் எபீமிச் கூறுகிறார். அடிக்கடி ஆறாவது வார்டுக்கு வருவதும், வந்தாலும் சரிவர நோயாளிகளைக் கவனிக்காமல் போவதும், இவானுடனான தொடர் உரையாடல்களும், ஏற்கனவே எபீமிச் மீது காழ்ப்பில் இருப்பவர்களுக்கு, அவரது மனநிலை குறித்து சந்தேகிப்பதற்கு வசதியான காரணங்களாக அமைந்துவிடுகின்றன.

ஒரு வகையில் ஆறாவது வார்டில் தனக்கான இடத்தை எபீமிச் அவைகளே தேர்வு செய்துகொண்டதாகக் கருதவும் இடமுள்ளது. மருத்துவமனையிலோ அல்லது வெளி இடங்களிலோ யாரிடமும் எவ்வித நல்லுறவும் வாய்க்கப் பெறாதவராக காட்டப்படும் ”எபீமிச்”சின் ஒரேயொரு நண்பராக இருக்கிறார் அஞ்சலகத் தலைவரான “மிகயில் அவெரியானிச்”. எபீமிச்சின் மனநிலை மாற்றம் பற்றிய மருத்துவர்களின் அவதானிப்பை அவரிடமே கூறுபவராகவும், அம்மனநிலை மேலும் சீரழிந்து போகாமலிருக்க ஒரு ஓய்வைப் பரிந்துரைப்பவராகவும் “மிகயில் அவெரியானிச்” அமைவது எபீமிச்சுக்கும் அவருக்குமான நட்புபின் சான்று. ஆனால், மாலை நேரங்களில் செறிவான உரையாடல்கள், சேர்ந்து அருந்தும் பியர்கள் என வளர்ந்து வந்த அந்த நட்பும் கூட இவானுடனான சகவாசத்தால் தடைபட்டுவிடுவது எபீமிச் மிக விரைவாக ஆறாவது வார்டை அடைய ஒரு காரணமாக அமைகிறது. மருத்துவமனைச் சுழலில் ஒட்டாமலிருக்கும் எபீமீச் ஒரு பக்கம் என்றால் அதற்கிணையான இன்னொரு பக்கம் நோயாளிகளின் வார்டில் கூட தனித்தே தெரியும் இவான்னுடையது. உண்மையில் இந்நாவலில் எபீமிச் மனதார உரையாடுவது இவான் ஒருவனிடம் மட்டுமே, அவ்வகையில் “மிகயில் அவெரியானிச்”சுடனான அவரது பெரும்பான்மையான உரையாடல்கள் எபீமிச் பேச அதை “மிகயில் அவெரியானிச்” ஆமோதிப்பது என்றவகையிலேயே நின்றுவிடுகின்றன. ஒரு இணைநட்புக்கான அல்லது ஒரு சீண்டலுக்கான காலியிடம் எபீமிச்சிடம் இருந்திருக்கவும் அது இவானால் நிரப்பப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.
*

இந்நாவல் வெறுமனே மன நோயாளிகளைப் பற்றியோ, மருத்துவர் எபீமிச்சைப் பற்றியோ அல்லது மனநிலை பிறழ்வுகளைப் பற்றியோ பேசுகிறது எனச் சுருக்க முடியாது. நம்முடைய சமூகம் அதன் கூட்டியல்புக்கு பொருந்திவராத மனிதர்களை பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. அந்த மனஅழுத்தம் எவ்வகையிலும் எபீமிச்சின் மன அழுத்தத்துக்குக் குறைந்ததல்ல. தன்னுடைய தரப்பு நியாயத்தை கேட்பதற்கு சுற்றம் அமைந்திராத, தன் மனது ஏற்றுக்கொள்ளும் சொற்களைக் கூறிடுவதற்கும் யாரும் இல்லாத வாழ்க்கை விதிக்கப்பட்ட எவரும் எத்தருணத்திலும் சென்று சேரக்கூடும் இடமாக இன்னுமொரு ”ஆறாவது வார்டு”தான் இருக்கமுடியும்.
*

ஆறாவது வார்டு – குறுநாவல் – அந்தோன் செகாவ் (தமிழில்:ரா. கிருஷ்ணையா) – பாரதி புத்தகாலயம்.

ஆதிமங்கலத்து விசேஷங்கள்

இரவு மணி 8, அலுவலகத்திலிருந்து வந்த சித்தப்பா அதிசயமாய் என்னிடம் பேசவேயில்லை. பள்ளி விடுமுறைகளில் காங்கயம்பாளையம் செல்லும்போதெல்லாம், இரவு எந்நேரமானலும் சித்தப்பா வந்த பின்னர்தான் இரவு உணவு உண்ணுவோம். பெரும்பாலும் வேடிக்கையும் சிரிப்புமாகக் கழியும் தருணம் அது. ஆனால், அன்றைய இரவு உணவின் போதும் சித்தப்பா முகம் கொடுத்து பேசவேயில்லை. சித்தப்பாவின் கோவத்துக்குக் காரணம் மறுநாள் காலையில் அவர் ஆபீஸ் கிளம்பும் போதுதான் தெரியவந்தது. பைக்கை ஸ்டார்ட் பண்ணும் முன்னர் “TK” என அழைத்து, “ஒரு விஷயம் சொல்லிக் கொடுத்தா அத தேவைப்பட்டா மட்டும் செய்யணும். தேவையில்லாம எதையும் செய்யக்கூடாது” எனச்சொல்லிச் சென்றார். எனக்குப் புரிந்தது. இத்தகைய ஒரு நல்லுபதேசத்தை எனக்கு ஈட்டித்தந்தது ஒரு கருவி. அக்காலகட்டத்தில் பெரும் புரட்சியாய்க் கருதப்பட்ட அதன் பெயர் பேஜர். முந்தின நாள் காலையில்தான் தன் அலுவல்களுக்காக தரப்பட்டிருந்த பேஜரை என்னிடம் காட்டி, அதை உபயோகிக்கும் முறை, செய்தி அனுப்ப செய்ய வேண்டியவை என சொல்லிக் கொடுத்திருந்தார் சித்தப்பா. அன்று மட்டும் அவருக்கு நான் அனுப்பிய தகவல்கள் பத்துக்கும் மேல். அனைத்தும் ஒரே செய்திதான் “CALL ME “ எனத்துவங்கி ஊரில் இருக்கும் எங்கள் வீட்டு தொலைப்பேசி எண்ணில் முடியும் செய்திகள் அத்தனையும். அலுவலகத்தில் மேலாளருடன் முக்கியமாக விவாதித்துக்கொண்டிருக்கும் போதே ”கீ கீ” என தான் சத்தமிட்டு எனக்கு சங்கூதியது அக்கருவி. மேலாளர் தன்னைப் பார்த்த பார்வையை மறுநாளிரவு சிரித்துக்கொண்டே சொன்னார் சமாதானமடைந்திருந்த சித்தப்பா.

*

கண்டுபிடிப்புகள் நமக்குத் தரும் கிளர்ச்சிகள் சொல்லில் அடங்காதவை. எந்த ஒரு புது விசயத்தை அறிய நேரிடும் போதும், இதெல்லாம் நான் பாக்காததா எனும் பெரிய மனுசன் பாவனை பூண்டாலும் கூட, உள்ளூறும் நம் பால்யத்தின் குறுகுறுப்பை எவ்வயதிலும் மீட்டுத்தர வல்லவை கண்டுபிடிப்புகள். கண்டுபிடிப்புகளிலும் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கண்டுபிடிப்புகள் சமூகத்தில் உண்டாக்கும் விளைவுகள் சுவாரசியம் மிக்கவை. அத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புகள், ஒரு கிராமத்தில் முதன் முதலில் நுழைவதை அம்மக்கள் எதிர்கொள்ளும் விதம் பற்றிய கட்டுரைகள் என்றுதான் “ஆதிமங்கலத்து விசேஷங்கள்” தொகுப்பைச் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் அவ்வளவு சுருக்கிச் சொல்லுவதைத் தடுப்பது கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கும் விதம். எழுத்தில் துருத்திக்கொண்டிராமல் அதன் போக்கிலேயே தொடர்ந்து வரும் பகடி. இவ்வகை கட்டுரைகளில் எதிர்பார்க்கக்கூடிய பகடித்தன்மையை இன்னும் சிறப்பாக்கியிருப்பது திரு.”க.சீ.சிவகுமார்” அவர்களின் மொழி.

*

அஞ்சலகப் பணியாளர் “Particulat Person” என்பதைச் சுட்ட “இதோ நீங்க தேடின பீப்பீ பக்கத்துலதான் இருக்கார்” எனச்சொல்லி ரிஸீவரை நீட்ட, தனக்கு போன் வந்த அதிர்ச்சியைக் காட்டிலும், படித்த அதிகாரியே தன்னை ”பீப்பீ” என கிண்டல் செய்வதாக எண்ணிக் கலங்கிய நாதஸ்வர வித்வானின் கதை “டெலிபோன்” பிறந்த காலத்தில் வருவது.


புதிதாய் வாங்கிய டார்ச்லைட்டின் பேட்டரி, ஊர் முழுக்க பந்தாக்காட்டியே தீர்ந்து போக, பேட்டரியை வெய்யிலில் காயவைத்து சார்ஜ் ஏற்ற முற்பட்டதைக் கூட சகித்துக்கொள்ளலாம். அடுத்தகட்ட வளர்ச்சியாக, பல்ப் ஹோல்டரில் பேட்டரியை நுழைத்து சார்ஜ் ஏற்றச் செய்த முயற்சி நமக்கே ஷாக் அடிப்பது.


படாத பாடு பட்டு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் லோன் வாங்குகிறார் சிவலிங்கம். லோன் தொகையைத் தந்த அதிகாரி “மாச மாசம் கரெக்ட்டா கட்டீருங்க சார்” என்க, காசு கைக்கு வந்தபின் சிவலிங்கம் சொன்ன குசும்பான பதில் “மாச மாசம் கரெக்டா கட்டுறதுன்னா நான் ஃபைனான்ஸ்லயே வாங்கியிருப்பேனே, உங்ககிட்ட எதுக்கு வர்றேன் ?”.


”சிரிச்சா கொஞ்சம் வயசு கூடுதலா தெரியுது” என பெண் பார்த்து வந்த அண்ணன் திருமணத்துக்குத் தயங்க, ”சல்வார் போட்டா வயசு கொறஞ்சிடும் என்றும், நம்மூட்டுக்கு வந்தா, சிரிக்கவா போகுது” என்றும் துணிந்து கல்யாணம் கட்ட வைத்த தனசேகர்கள் கிராமத்து கிராமம் உண்டுதானே. என்றாலும் தன் பெயரை மைக்செட் குழாயில் கேட்க விரும்பி, திரும்பத் திரும்ப காணாமல் போனவர்கள் அறிவிப்பில் தன் பெயரை தானே சொன்ன “குளிப்பட்டி சுப்பிரமணி” கொஞ்சம் வித்தியாசமான ஆள்தான்.

*

இவையெல்லாம் ஆதிமங்கலத்து விசேஷங்களின் துளிக்கூண்டு சாம்பிள்கள்தான். முழுக்கதையும் அதன் சுவாரசியங்களும் , இவற்றுக்கு எவ்விதத்திலும் சளைத்ததில்லை.

*

கட்டுரை சுட்டும் மனிதர்களும் ஆதிமங்கலம் கிராமமும் (புனைவுதான் என்றபோதும்), நம் கிராமங்களையும் அதன் மனிதர்களையும் நினைவுபடுத்துகின்றது. இதனால் இப்புத்தகத்துடன் நம்மால் வெகு சுலபமாக ஒன்றிப்போக முடிகிறது. நிரந்தரமான மெல்லிய புன்னகைகளும், எதிர்பாரா வெடிச் சிரிப்புகளுமாக புத்தகத்தை படித்து முடித்ததும், ஒரு மென்சோகம் மனதில் படர்ந்தது. மறைந்த க.சீ.சிவகுமார் குறித்த பதிவுகள் நினைவுக்கு வந்ததே அதற்குக் காரணம். குறிப்பாக செவேந்திரன் அண்ணனின் உறைப்புளி (http://kaleeswarantk.blogspot.com/2020/05/blog-post.html) நூலில் எழுதப்பட்ட கட்டுரை. சோகத்துடன் புத்தகத்தின் பின்னட்டையில் இருக்கும் க.சீ.சிவக்குமாரின் புகைப்படத்தைப் பார்த்தேன், அதனருகில் புத்தகத்திலிருந்து சில பத்திகள் அச்சிடப்பட்டிருந்தன. புன்னகை எழுந்தது. கலைஞனுக்கு மரணம் விதிக்கப்படவில்லை.

*

ஆதிமங்கலத்து விசேசங்கள் – க.சீ.சிவகுமார் – டிஸ்கவரி புக் பேலஸ்