title


சூது கவ்வும்

அகலவோ ஆழவோ குறைந்தபட்சம் உழுவதாவது போதும் எனும் கட்சியைச் சேர்ந்தவன் நான். புத்தகங்கள் வாசிப்பதில் என்னுடைய தேர்வென்பது பெரும்பாலும் நண்பர்கள், பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பரிந்துரை சார்ந்தது. அது தவிர தனிப்பட்ட முறையில் விருப்பமான எழுத்தாளர்களின் படைப்புகளும் என்னுடைய பட்டியலில் உண்டு.

நேற்று, திருப்பூரில் நடந்துவரும் 13ஆவது புத்தகத் திருவிழாவுக்கு நானும் கார்த்திக்கும் சென்றிருந்தேன். வழக்கம்போல நான் வாங்கவேண்டிய படைப்புகள் குறித்து ஒரு பட்டியல் வைத்திருந்தேன். கார்த்திக்கு வாங்கவேண்டிய புத்தகங்கள் மற்றும் Activity Books வாங்கி முடித்தபின்னர், ஒவ்வொரு பதிப்பகமாக சென்று வேண்டிய புத்தகங்கள் வாங்கிக்கொண்டிருந்தேன். அவ்வகையில் அப்போது நான் இருந்தது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மிகச்சிறந்த பதிப்பகங்களுல் ஒன்றாக நான் கருதக்கூடிய பதிப்பகம். அங்கிருந்த புத்தகங்கள் சிலவற்றை வாங்கிய பின்னர், பில் போடுமிடத்தில் இருந்தவரிடம் நான் கேட்டேன்

“ஏங்க, ********* அவரோட கதைகள் தொகுப்பு இருக்குங்களா ?”

அவர் மெல்ல யோசித்தார்; மீண்டுமொருமுறை அவரது பெயரைக் கேட்டார். காரணம் நான் உச்சரித்த பெயர் தமிழ்நாடே கொண்டா(டிய)டும் எழுத்தாளரின் பெயர் போலவே இருந்தது. மீண்டும் எனக்குத்தேவையான எழுத்தாளரின் பெயரை சொல்லிவிட்டு தொடந்தேன்

“இல்லீங்க, நீங்க நெனக்கிறவர் இல்ல; நான் சொல்லுறவர் இப்ப எழுதுவதில்லை. கொஞ்ச காலம் முன்னாடி எழுதினவர். இப்ப இறந்துட்டார்.”

[ஒருவேளை நான் கேட்ட எழுத்தாளர் பற்றி அவரோ அந்த பதிப்பகமோ அறியாமலிருக்கலாம். அல்லது நான் தேடி வந்த எழுத்தாளர் அப்படியொன்றும் உலகை புரட்டிப்போடும் கதைகள் எழுதாமலிருக்கலாம். அதுவல்ல பிரச்சினை. அந்த பதிப்பகத்தில் அவர் புத்தகங்கள் இல்லை என்பதை மிக எளிதாக மனம் புண்படாமல் சொல்லியிருக்கலாம். ஆனால் அங்கு நடந்தது வேறு]

இப்போது பில் போடுமிடத்தில் இருந்தவர் என்னைப் பார்த்து கொஞ்சம் கர்வம் கலந்த தொனியில் சொன்னார்

“நாங்க “Only High Class” எழுத்தாளர்கள் புத்தகங்கள் மட்டும்தான் போடுவோம். நீங்க வேற எங்கயாவது கேட்டுப்பாருங்க”

ஒரு உட்சகட்ட அவமானத்தை அடைந்தவனாக பேச்சற்றவனாக திரும்பினேன். இப்போது எண்ணிப்பார்க்கையில் குறைந்தபட்ச எதிர்ப்பையாவது அவரிடம் பதிவு செய்திருக்கவேண்டும் என தோன்றுகிறது. அங்கு தவறவிட்டதை குறைந்தபட்சம் இங்காவது பதிவு செய்ய விரும்பினேன். அவ்வளவே…

“எந்த எழுத்தாளரும் HIGH CLASS, LOW CLASS இல்லை. இன்னும் சொல்லப்போனால் படைப்பாளரிடம் இல்லை அவர் சொன்ன “CLASS” அது இருப்பது படைப்பிடம்தான். அதையும் முடிவு செய்பவர்கள் வாசகர்கள்தான். வாழ்நாள் முழுவதிலும் ஒரே ஒரு படம் எடுத்த ருத்ரய்யா சாகும்போது தமிழின் சிறந்த டைரக்டர்களுல் ஒருவராகத்தான் செத்தார். அச்சில் இல்லாதபோதும், அல்லது CLASS இல்லை என பதிப்பாளர்கள் நிராகரித்தபோதும் வாசகனால் தேடப்பட்டுவரும் படைப்புகள் தமிழில் இன்னமும் உண்டு. ஒரு நாள் அது அவருக்கு புரியும்; புரியாவிட்டாலும் அந்த உண்மை நிற்கும்”

(மீண்டும் பதிவு செய்கிறேன் நான் கேட்ட எழுத்தாளர் / படைப்பு உண்மையில் ஒரு மிகச்சாதாரணமான படைப்பாகக் கூட இருக்கலாம். அதுவல்ல பிரச்சினை; அதை அவர் அணுகியமுறைதான் பிரச்சினை.)

காலகண்டம் - உருகியோடும் பொன்னுலகம்

அருணாவின் தாலிக்கொடிக்குள் இருக்கும் வெள்ளிசரடு நெகிழ்ந்து விட்டது. அதை சரிசெய்வதற்காக, சென்ற வாரம் நானும் அப்பாவும் அவினாசி சென்றிருந்தோம். அவினாசி “தம்பியண்ணன் சில்வர்ஸ்” கடைக்கு முன் அமர்ந்திருந்த ஆசாரியண்ணன் தாலிக்கொடியை கொஞ்ச நேரம் ஆராய்ந்தார்.

“வெள்ளிசரட பத்த வெச்சா மறுபடியும் இதே பிரச்சன வரும்; பேசாம உருக்கி கம்பி மாதிரி செஞ்சுரலாமா? ஒரு முந்நூறுபா ஆகும்” என்றார்.

“எது நல்லாருக்குமோ அதுமாதிரியே செஞ்சிருங்க” 

பதிலைக் கேட்டதும், வேலையை துவங்கினார். முதலில் தாலிக்கொடிக்குளிருந்து வெள்ளிச்சரடை உருவியெடுத்தார். தன்னிடமிருந்த மரக்கட்டையின் குழிவான ஒரு பகுதியில் வெள்ளிச்சரடை வைத்து மற்றொரு பகுதியை பிடித்துக்கொண்டார். கிட்டத்தட்ட கேஸ் லைட் மாதிரி இருக்கும் விளக்கை பற்றவைத்தார். முனை வளைந்த மெல்லிய ஊதாங்குழலை எடுத்து மரக்குழிக்குள் இருக்கும் வெள்ளிச்சரடின் மீது நெருப்பு படுமாறு “ப்பூ, ப்பூ” என ஊதலானார். இரண்டு நிமிடங்களில் மரக்குழி முழுதும் தீக்கங்குகளாய் மாறியது, தொடர்ந்து பாய்ந்து கொண்டேயிருந்த நெருப்பு மழையால் மெல்ல மெல்ல உருகத்துவங்கியது வெள்ளிச்சரடு.

நம்பி, கிருட்டிணன் ஆசாரி, சன்னாசி, முத்துராஜ், சோலையப்பன், சென்றாயல் என பல பெயர்கள் என்னுள் ஓடத்துவங்கின. இந்த பெயர்கள் எதுவும் நிகழ்காலத்தை சேர்ந்தவை அல்ல. ஆனால் இந்த பெயர்களுக்கும் 2015 செப்டம்பர் மாதம் அவினாசியில் வெள்ளிச்சரடை உருக்கிக்கொண்டிருந்த ஆசாரியண்ணனுக்கும் ஒரு இணைப்பிருக்கிறது. என்னுள் ஓடிய பெயர்களின் சொந்தக்காரர்கள் அனைவரும் வேறு வேறு காலகட்டத்தில் வாழ்ந்திருந்த ஆசாரிமார்கள். என்ன சொன்னேன் (எழுதினேன்?) காலகட்டம் என்றா, இல்லை இல்லை இவர்கள் “காலகண்டத்தில்” வாழ்ந்திருந்த நகை ஆசாரிகள்.

“காலகண்டம்” திரு.எஸ்.செந்தில்குமார் எழுதி உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நாவல் (விலை : ரூ400/-).



ஆபரணத்தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு சமூகத்தின், 500 ஆண்டு காலவரலாறிலிருந்து, ஒரு 150 ஆண்டு காலத்தை சித்தரிப்பதன் வாயிலாக ஏறத்தாழ ஐந்து தலைமுறைகளின் வாழ்வை, அதனூடாக தங்க வேலை செய்யும் பொன் ஆசாரிமார்களின் ஏற்றத்தாழ்வை சிறப்பாக பதிவு செய்திருக்கும் நாவல் “காலகண்டம்”. பொன் வேலை செய்யும் போனூர் கிருட்டிண ஆசாரியில் துவங்கி, கிருட்டிண ஆசாரியின் குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறையான நம்பி ஆசாரியின் மரணத்தில் முடிகிறது நாவல். கதை என்றெல்லாம் எதையும் குறிப்பிட்டு சொல்லமுடியாது, மாறாக இந்த நாவல் வாழ்க்கையை, அதன் அசலான இன்ப துன்பங்களை, வலியுடனும் வருத்தங்களுடனும் பதிவு செய்கிறது.

காசாய் இருக்கும் தங்கம் ஆபரணமாக மாறுவது ஏற்றம், நகையை உருக்கி மீண்டும் காசாக்குவது ஏதேனும் ஒரு வகையில் இறக்கம் என வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் நகை வேலையுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. பட்டறைகளில் ஆபரணங்கள் செய்ய ஆர்வம் காட்டுவதும், நகையை உருக்கி காசாக்கும் வேலையை கொஞ்சம் மட்டாக கருதுவதும் பதிவு செய்யப்பட்டிருப்பது அதன் நீட்சி என எண்ணுகிறேன். நேரடியாக மக்களிடமிருந்து ஆர்டர் எடுத்து நகை செய்து பட்டறை முதலாளியாக வாழ்ந்த காலம் போய் முதலாளிகளிடமிருந்து ஆர்டர் எடுத்து வேலை பார்த்துத்தரும் காலம் வருகிறது. அன்றாடம் தர வேண்டிய வேலைக்காக முதலாளி சமூகத்துக்கு கூழைக்கும்பிடு போடவேண்டிய காலம் அது. இடையில், செல்வாக்கு கொஞ்சம் சரிந்து, அடுத்தவர் பட்டறைக்கு வேலைக்கு செல்லும் அவலமும், பொன் நகை செய்யும் வேலை இல்லாமல் பட்டறையில் ஒட்டு வேலை செய்ய நேரும் காலமும் என வேறு வேறு பாத்திரங்களின் வாயிலாக ஆபரணத்தொழிலின் பரிமாணங்கள் சிறப்பாக வெளிப்படுகின்றன. இடையிடையே மனித மனத்தின் இருளடைந்த பகுதிகளும், காலத்தின் கைகளில் மனிதன் வெறும் பகடைதான் என்பதும் நிறுவப்பட்டுள்ளது.

ஒரு சமூகத்தை அதன் வாழ்க்கையை, குறிப்பாக அதன் வலிகளை பதிவு செய்திருக்கிறது “காலகண்டம்”. ”புலிநகக் கொன்றை”போலவே இந்த நாவலும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்த அனுபவத்தைத் தந்தது.