title


ஒரு குடும்பம் சிதைகிறது

 எங்கே யார் இருமினாலும் அல்லது காய்ச்சல், சளி எனும் வார்த்தைகளைக் கேட்டாலுமே கூட மனம் பதட்டமடைந்த ஒரு காலகட்டத்தை இப்போதுதான் கொஞ்சம் கடந்து வந்திருக்கிறேன். அதுவும் இரண்டாவது கொரானா அலைக்குப் பின் கழித்த பல நாட்கள், வாழ்வின் மீது ஒருவித நிச்சயமற்ற தன்மையைக் கொண்டிருந்தன. அதற்கிணையான பதட்டத்தை ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ள பிளேக் காலகட்ட விவரணைகள் உருவாக்கின.

*

ராமச்சந்திர கிராமத்தின் கணக்குப்பிள்ளை ராமண்ணாவின் மறைவுக்குப் பின்னரான, அக்குடும்பத்தின் வாழ்க்கையினை மையமாகக் கொண்டு, அந்தக் காலகட்டத்தின், அக்கிராமத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையினை சித்தரிக்கிறதுஒரு குடும்பம் சிதைகிறதுநாவல்.

ராமண்ணாவின் மனைவி கங்கம்மா, அவளது இரு மகன்கள் சென்னிகராயன், அப்பண்ணய்யா. நாகலாபுரத்து கண்டி ஜோதிடரின் மகளான நஞ்சம்மா சென்னிகராயருக்கு மனைவியாகிறாள். தகப்பனின் கணக்குப்பிள்ளை வேலை முறைப்படி சென்னிகராயருக்கு கிடைப்பதில் உள்ள சிக்கலை கண்டி ஜோதிடர் தீர்த்துவைக்கிறார். ஆனால், சென்னிகராயருக்கு கணக்கு வழக்குகள் புரிவதேயில்லை, கணக்கு வழக்குகள் மட்டுமல்ல, உணவு ஒன்றைத்தவிரே வேறெதும் சென்னிகராயருக்கு புரிந்ததேயில்லை. கணவருக்காக கணக்கு வழக்குகள் பார்க்கத் துவங்கி அதன் நீட்சியாக குடும்பம் நடத்தும் முழுப்பொறுப்பையுமே நஞ்சம்மா ஏற்கிறாள். மாமியார் கங்கம்மாவின் துர்பேச்சுக்கள், அக்காலகட்டத்தில் பெண்களுக்கு இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள், கணக்குப்பிள்ளை வேலை பார்ப்பதால் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்கள் என அனைத்தையும் தன் பொறுமையினால் எதிர்கொள்கிறாள் நஞ்சம்மாள். ஆனால், அப்பண்ணய்யாவின் மனைவியான சாதம்மாவுக்கோ அத்தனை பொறுமை இருப்பதில்லை, மட்டுமல்ல கெட்ட வார்த்தை பேசும் சென்னிகராயனை நஞ்சம்மாள் கண்டுகொள்ளாமல் இருந்ததால்தான் அதே தைரியம் தன் கணவனுக்கும் வந்துவிட்டது எனும் மனக்குறையும் உண்டு. ஆனால், கண்மூடித்தனமாக கோபம் கொள்ளும் தகப்பனார், தன் கணவனை என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடும் என்ற நஞ்சம்மாளின் பயம் நியாயமானதே.

கருணையும் அன்பும் அறவுணர்வும் கொண்ட மனிதர்கள் ஒரு புறமும் வஞ்சம் சூது பொறாமை கொண்ட மனிதர்கள் மறுபுறமுமாக நஞ்சம்மாளின் வாழ்க்கை ஊஞ்சலாடுகிறது. மனிதர்கள் செய்யும் சூழ்ச்சியினை சக மனிதர்களின் ஆதரவால் சமாளிக்க முடிந்த நஞ்சம்மாள் இயற்கையின் சூழ்ச்சிக்கு முன் தோற்றுப்போகிறாள். பிளேக் எனும் கொள்ளை நோய்க்கு தன் மகளையும் மூத்த மகனையும் பலி கொடுத்த பின்னரும் தன் இளைய மகன் விசுவன் ஒருவனுக்காகவே வாழும் நஞ்சம்மாளையும் பிளேக் பலிகொள்கிறது.

இந்நாவலின் மற்றொரு வலுவான கதாப்பாத்திரம் மாதேவய்யா. எங்கிருந்தோ வந்து பல ஆண்டுகளாக ராமச்சந்திர கிராமத்திலேயே வாழ்ந்து வரும் சன்னியாசியான அவரது அறவுணர்வும், போதனைகளுமே, பெரும்பாலான இக்கட்டுகளில் இருந்து நஞ்சம்மாளை காக்கின்றன. உதாரணமாக உள்ளூர் ஜோதிடர்கள் (அண்ணா ஜோசியர், அய்யா ஜோசியர்) தங்களுடைய வசதிக்குத் தக்க பரிகாரங்கள், பூஜைகள் மற்றும் பஞ்சாயத்து பேசும்போதெல்லாம் அதிலிருந்து நஞ்சம்மாளை காப்பது மாதேவய்யாவின் சொற்களே. அந்த ஊருடன் எவ்வித தொடர்பும் இல்லாதவர் அவர். ஆனால், காசி வரை சென்றாலும் அங்கிருந்து திரும்ப வேண்டும் எனும் எண்ணம் வந்ததும் அவர் திரும்புவது ராமச்சந்திர கிராமத்துக்கே. அப்படி அவ்வூருடனான தன் பந்தத்தை இறுதியில் விசுவனின் வாழ்வின் பொருட்டு அவர் அக்கிராமத்தை விட்டு நீங்குவதன் மூலம் துறக்கிறார்.

நஞ்சம்மாளின் கணவர், சென்னிகராயருக்கோ சோறு கண்ட இடமே சொர்க்கம். தன்னுடைய ஒரு மகனும், மகளும், மனைவியும் இறந்த பிறகு எஞ்சியிருக்கும் ஒரே மகன் தன் கண்ணெதிரே ஊரை விட்டு ஒரேயடியாக நீங்குவதைப் பார்த்தும், புகையிலைச்சாறு வீணாகிவிடும் என அமைதி காக்கும் இறுதிக்காட்சி ஒன்று போதும் அவரது சுபாவத்தைப் புரிந்துகொள்ள.

ஆனால், அவரது தம்பி அப்பண்ணய்யாவுக்கு ஒரு காலகட்டம் வரை அன்னை கங்கம்மாவின் சொற்களே வேதவாக்கு. அன்னையுடன் சேர்ந்து அக்கம்பக்கத்து ஊர்களுக்கு செல்வதும், அங்கு தன் அன்னையின் பேச்சுத்திறனால் தானமாகப் பெறப்படும் தானியங்களை சுமந்து தன் கிராமத்துக்கு கொண்டு வருவதும், பின்னர் அத்தானியங்களைக் கொண்டு பசியாறுவது மட்டுமே அவனது வாழ்வாக இருந்தது. தன் மனைவியின் பொருட்டோ பிள்ளைகளின் பொருட்டோ எவ்வித பந்தபாசத்துக்கும் ஆட்படாதவன். அவனே கூட, தன் அண்ணன் மகளின் திருமணத்தில் துவங்கி, பின்னர் அண்ணனின் பிள்ளைகளின் மறைவில், அண்ணி மற்றும் விசுவனுக்கு துணையாக சிருங்கேரி செல்வதில் என கொஞ்சம் கொஞ்சமாக அண்ணன் குடும்பத்துக்கு தன்னாலான உதவிகளைச் செய்து ஆறுதலாக இருக்கிறான்.

ஊர் ஊராக சுற்றித் திரிவதும், தான் எண்ணியது மட்டுமே சரி எனும் இயல்பும் கொண்ட கண்டி ஜோதிடர் அதற்கென எவ்வித எல்லைக்கும் செல்லும் துணிவு கொண்டவர். நள்ளிரவில் மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்யப்பட்டிருக்கும் சிலையை உதைத்து அதிலிருக்கும் பணத்தை எடுத்து வருமிடம் அவரது துணிச்சலுக்கான ஒரு உதாரணம். உண்மையில் அவர் தலைமறைவு வாழ்க்கை வாழாமல் இருந்திருந்தால் அவரது மகள் நஞ்சம்மாளின் பெரும்பாலான கவலைகள் துவக்க நிலையிலேயே மறைந்திருக்கலாம். அப்பாவைப் போன்ற சுபாவம் கொண்டிருந்தாலும் கல்லேசனின் திருமண வாழ்வின் சிக்கல்கள், தன் அண்ணனின் உதவியினை நாடுவதிலிருந்தும் நஞ்சம்மாவைத் தடுக்கின்றன.

இக்கதையில் வரும் ஜோதிடர்கள் கூறும் ஆலோசனை மற்றும் பரிகாரங்கள் அனைத்துமே அவர்களது வயிற்றுப்பாட்டை நிவர்த்தி செய்வனவாகவே அமைந்திருக்கின்றன. தான் உண்ண விரும்பியதற்காக, திதியில் படைக்கப்படும் பலகாரங்கள் அனைத்தும் நெய்யில் இருக்க செய்திருக்கவேண்டும் எனக்கூறுவதும், பரிகாரத்துக்கு தேவைப்படும் பல வகைப்பட்ட பிராமணர்களாக (திருமணமான ஒருவர், பிரம்மச்சாரி ஒருவர், ஒரு விதவை, தாரம் இழந்த ஒரு பிராமணர்) தன்னுடைய சொந்தக்காரர்களை அழைப்பதும் என பல சந்தர்ப்பங்களை உதாரணமாக சொல்லலாம்.  

தன் கணவன், மாமியார், சமூகம், காலகட்டம், நோய் என பலவித சிக்கல்களையும் எதிர்கொண்டு போராடும் நஞ்சம்மாவை மையப்படுத்தி  இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. போலவே, இக்கதையில் வரும் கங்கம்மா, கல்லேசனின் மனைவி, அப்பண்ணய்யாவின் மனைவி, கிராமத்தில் இருக்கும் நரசி என இன்னும் பல பெண்களின் தரப்பு நியாயத்தை எண்ணினால், அவையும் தன்னகத்தே பெருங்கதைகள் கொண்டிருப்பனவாகவே அமையும்.

 

ஒரு குடும்பம் சிதைகிறது

எஸ்.எல்.பைரப்பா (தமிழில்: எச்.வி.சுப்ரமணியம்)

நேஷனல் புக் டிரஸ்ட்

#வாசிப்பு_2026

No comments: