title


காலம் கடந்த கலைஞனின் கலகக்குரல்


மதராஸ் ராஜகோபால் ராதாகிருஷ்ணன் – 1970 களில் மலேசியாவில் பேசிய பேச்சு எனக்கு மிகவும் பிடித்த உரைகளுல் ஒன்று. தன்னுடைய வாழ்வின் ஒரு முக்கிய பின்னடைவுக்குப் பின்னர் (சிறை சென்று மீண்ட பின்) திராவிடர் கழகத்தின் அழைப்பினை ஏற்று மலேசியா சென்று நிகழ்த்திய உரை அது. என்றபோதும், சிறிதளவுகூட தன்னம்பிக்கை குறையாமல், தன் மனதிலிருந்து பேசிய அற்புத உரை.

அதுசரி யார் இந்த “மதராஸ் ராஜகோபால் ராதாகிருஷ்ணன்” ? திராவிடர் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக்கொள்ளாதபோதும், தந்தை பெரியாரின் தீவிர சீடர். தமிழகத்தின் மிக முக்கிய நாடகக் கலைஞர். சினிமா ஊடகத்தை பகுத்தறிவு பரப்பப் பயன்படுத்திக்கொண்டவர்களுல் மிக முக்கியமான ஒருவர். தான் இறந்தபின்னரும், இன்றளவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தனக்கென ஒரு தனித்த செல்வாக்கு உடையவர். எனக்கு மிகப்பிடித்த சுயமரியாதையாளர். நடிப்பில் தனக்கென ஒரு தனிபாணியை உருவாகியவர். நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர். அவரது இன்னொரு பெயர் “M.R.ராதா”.

சரி, இனி என்னைக் கவர்ந்த அந்த உரை குறித்து :

எனக்குத் தெரிந்தவரையில், எந்த விதமான முன்னேற்பாடுகளுமில்லாமல், குறிப்புகளில்லாமல் பேசிய ஒரு பேச்சு இது. பேச்சின் துவக்கத்திலேயே ”நான் இங்கு வரக்கூடாதென்று பெட்டிசன் போட்ட என் இனிய நண்பர்களே” என அதிரடியாகத் துவங்குகிறார் திரு.ராதா. தன்னுடைய 30 நிமிட பேச்சில் சுயமரியாதை, கடவுள் மறுப்பு, சினிமாத்துறை, அடக்குமுறை என எல்லாவற்றையும் குறித்த தன்னுடைய கருத்துக்களை எவ்வித அச்சமுமின்றி பதிவு செய்கிறார். அதிலும் சினிமாக்காரர்கள் குறித்த விமர்சனம் (”குழந்தைகள் பார்க்கக்கூடிய சினிமாவா தமிழ் நாட்டில் எடுக்கிறார்கள் ? பெரியவனே பார்த்து கெட்டுப்போய்க் கெடக்கிறான்” என்பது ஒரு சாம்பிள்), மற்றும் அவர்களது வருமானவரி பாக்கி குறித்த வெளிப்படையான பேச்சு, தனக்கும் எம்.ஜி.ஆருக்குமாக சண்டை குறித்த விசயங்கள் என்ன எல்லாவற்றையும் எவ்வித தடங்களுமின்றி பேசிப்போகின்றார். பின்வரும் பகுதியை கவனியுங்கள்

“இப்ப, நான் கூட வருமான வரி பாக்கி 10 லட்சம் கட்டணும் (1970 களில்), அவங்க எங்க கேட்கப்போறாங்க? நான் எங்க கட்டப்போறேன்?.. அதெல்லாம் ஒண்ணுமில்ல”

இப்படி ஒரு பொதுக்கூட்டத்தில் பேச ஒருவருக்கு என்ன ஒரு தைரியம் இருந்திருக்க வேண்டும். அந்த தைரியம்தான், அந்த சுதந்திரம்தான் “M.R.ராதாவை” காலம் கடந்தும் நினைக்கவைக்கிறது. நல்ல பேச்சைக்கேட்பதில் ரசனையுள்ளவர்கள் நிச்சயம் கேட்கவேண்டிய ஒரு கலகக்குரல் “M.R.ராதா”வுடையது.
Youtube link : (வீடியோவுக்கும் பேச்சுக்கும் தொடர்பில்லை)
http://www.youtube.com/watch?v=hnl63Uskv7I

(திரு. M.R.ராதா குறித்த “M.R.ராதாயணம்” புத்தகம் பற்றி முன்பு ஒருமுறை நான் எழுதிய ஒரு பகிர்வு :http://kaleeswarantk.blogspot.in/2010/04/mr.html)

சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்

எவ்வளவுதான் செல்வச்செழிப்புடன் இருந்தாலும், மிகப்பெரிய மன உறுதி கொண்டிருந்தாலும், தேர்ந்த கல்வி ஞானமும் கேள்வி ஞானமும் வாய்க்கப்பெற்றாலும், வாழ்க்கையின் மாயச்சுழலில் கட்டுண்டுதான் தீரவேண்டும். நாம் மண்ணில் பிறந்த கணத்திலேயே நமக்கான சிக்கல்களையும் காலம் சூல் கொண்டுவிடுகிறது. பிறக்கும் காலமும் வாழ்நாளும் மட்டுமே மாறுபடும். மற்றபடி, மண்ணில் பிறந்த எவருக்கும் அவருக்கான கசப்பு, அவருக்கான வலி, அவர் பங்கு துயரம் நிச்சயம் உண்டு. என்றபோதும் அவற்றையும் தாங்கவும், தாண்டவும் ஒரு பரிகாரம் - இல்லை இல்லை வாழ்க்கைமுறை இருக்கிறது. அது வேறொன்றுமில்லை “அன்பு செய்தல்”. சக உயிரின் வலியை, வேதனையை, பசியை உணர்தலும், அதைப்போக்க தன்னாலான துரும்பை நகர்த்தலும் கூட போதுமானது.

என்னைப்பொறுத்தமட்டில் அப்படி அடுத்தவர் வலியை தன்வலியாக உணரவைப்பது கலை. சக உயிரின் துயரன்றி, வேறு சரியான பேசுபொருள் எந்தக்கலைக்கும் கிடையாது. அப்படி அடுத்த மனிதனின் வாழ்வின் அவலத்தை, அவன் அன்றாடம் விழுக்கும் கசப்பின் ஒரு துளியை நமக்கும் படையலிட்டிருக்கிறார் திரு. நாஞ்சில் நாடன் அவர்கள். சூடிய பூ சூடற்க எனும் நாஞ்சில் நாடனின் சிறுகதைத் தொகுப்பை சமீபத்தில்தான் படித்தேன். தொகுப்பின் பெரும்பாலான கதைகள் வாழ்வின் இருளை, அடுத்த வயிற்றின் பசியை பதிவுசெய்பவை. நாஞ்சில் நாடன், தன் தேர்ந்த கதை சொல்லும் உத்தியால், அவரது அற்புத விவரணைகள், மிரட்டாத மொழி வாயிலாக கதைக்களனில் நம்மையும் ஒரு மெளனசாட்சியாக்கி விடுகிறார். இடையிடையே வரும் கும்பமுனியின் கதைகள்தான் நம்மைக்கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகின்றன.

என்னுடைய வீட்டிலிருந்து பணிக்கு செல்ல நான் ஒரு மணி நேரம் பேருந்தில் பயணிக்க வேண்டும் (சென்று வர மொத்தம் இரண்டு மணி நேரங்கள்). நான் இந்த தொகுப்பின் பெரும்பாலான கதைகளை அப்படியான பேருந்துப்பயணங்களில்தான் வாசித்தேன். காலை நேரப்பயணங்களை நான் கும்பமுனியுடன்தான் செலவழித்தேன். கும்பமுனியின் நகைக்கவைக்கும் செய்கைகளால் என்னுடைய முழு நாளுக்குமான புத்துணர்ச்சியை நான் அடைந்தேன். ஆனால் அதுவல்ல சிறப்பு, இத்தொகுப்பின் மற்ற கதைகளை நான் வாசித்தது இரவு வேளைகளில், இருவரோ மூவரோ அமரவேண்டிய இருக்கையில் நான் மட்டும் அமர்ந்துகொண்டு, கோவையிலிருந்து அவினாசி வரும்வரையில். இரவுகளில், அடுத்தவன் பார்ப்பான் எனும் வெட்கமின்றி, துயர், பசி உரைக்கும் கதைகள் அனைத்தையுமே கலங்கிய விழிகளுடன் படித்தேன். இந்தொகுப்பின் கதைகள் நமக்குச்சொல்ல விரும்புவது, நம்மிடமிருந்து யாசிப்பது மனிதத்தை மட்டுமே.

சக மனிதனின் துயரை உணர்ந்துகொள்ளும் பக்குவத்தை இலக்கியம் நமக்கு நிச்சயம் தரும். அடுத்தவன் வலியை, கசப்பை தனதென எண்ணி கலங்குபவன் நிச்சயம் தன்னுடைய வலியை, கசப்பை கடக்கிறான்.

அப்படிக்கடக்க உதவும் மிக முக்கியமான தொகுப்பு திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய “சூடிய பூ சூடற்க” – தமிழினி வெளியீடு.