title


ஒரு பிறந்தநாள் என்பது…


ஒரு பிறந்தநாள் என்பது…
தெருவடைத்துப் பந்தலிட்டு
ஊரழைத்து விருந்துவைத்து
வம்படியாய் வாங்கப்படும்
வாழ்த்துக்களால்
கடந்துபோகலாம்…

ஒரு பிறந்தநாள் என்பது…
நட்சத்திர ஹோட்டல்களின்
ஆள்தெரியா இருட்டில்
பெயர் தெரியா உணவுகளுடன்
போதையேற்றியோ ஏறியோ
தள்ளாட்டத்துடன்
முடிந்துபோகலாம்…

ஒரு பிறந்தநாள் என்பது…
அழித்து அழித்து மாளாத
குறுஞ்செய்து வாழ்த்துக்கள்
பேசி முடிக்க முடிக்க
அடித்துக்கொண்டே இருக்கும்
செல்போன் மணியோசைகள் – என
எழுத்துக்களாலும் குரல்களாலும்
ஆராதிக்கப்படலாம்…

ஒரு பிறந்தநாள் என்பது…
அதிகாலை தன்பெயரில்
முதல் பூசையுடன் துவங்கி
நள்ளிரவில் “குழறான” வாழ்த்துக்கள்
கூடவே “டாஸ்மாக்” வாந்திகளுடன்
நிறைவு பெறலாம்….

ஒரு பிறந்தநாள் என்பது…
போலியாய் புன்னகைத்து
பெயருக்கு புதுத்துணியுடுத்தி
கடமைக்கு காலில்விழும் வெறும்
சம்பிரதாயங்களால் மட்டுமே
கடக்கப்படலாம்…

ஒரு பிறந்தநாள் என்பது…
தெருமுனைப் பிள்ளையார் துவங்கி
திருப்பதி ஏழுமலையாண்டவர் வரை
எல்லா கடவுளருக்கிணையாக
தன் பெயரையும் சேர்த்து
“அர்ச்சனை” செய்யக்கிடைத்த
வாய்ப்பாகக்கூட
பார்க்கப்படலாம்…

ஒரு பிறந்தநாள் என்பது…
பிதுங்கிவழியும் பேருந்து நெரிசல்களிலோ
வயிற்றைக் கவ்விப்பிடிக்கும் பசியாலோ
சிறைக்கம்பிகளுக்கு பின்னாலோ
கடன்காரங்களுக்கு பயந்துகொண்டோ
சமயங்களில் மரணத்தாலோ
மறக்கப்பட்டு வெறுமனே
மற்றுமொரு நாளாக
முடிந்தும்போகலாம்…

வேற்றுமையில்


எல்லா கிராமங்களின்
தெருக்களும் ஒரேமாதிரி இருப்பதில்லை…
வீடுகளும்… விளைநிலங்களும்…
கோவில்களும்… பள்ளிகளும்…
ஏன் சாராயக் கடைகளும்
பஞ்சாயத்து “டிவி” களும் கூட
வேறுவேறானவையே…

எல்லா கிராமங்களும்
ஒரே மாதிரியானவையல்ல…
சாதியின் பெயரால் சபிக்கப்பட்டவர்களும்
மாதவிலக்கான பெண்களும்
புழக்கடையில் மட்டும்
புழங்கலாம் என்பதைத் தவிர !