title


சரியாகச் சொல்லப்பட்ட கதைகள்

இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்

என்னுடைய அப்பா, அவரது பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், வேலைக்காக காங்கேயம்பாளையத்தில் இருந்து கோபிக்கு சென்றார். பின்னர் ஈரோடுக்கு. அம்மாவை மணமுடித்த பின்னர் ஒரு மளிகைக்கடை வைத்துக் கொண்டு “செட்டில்” ஆனது அவிநாசிக்கு அருகில் இருக்கும் “திருமுருகன்பூண்டி”யில். நான் பிறந்தது, படித்தது, வளர்ந்தது, இப்போது வாழ்வது பூண்டியில்தான் என்றாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் “காங்கேயம்பாளையம்” செலவது என் பால்யம் முதற்கொண்டே தொடரும் பழக்கம். எனக்கு மனதளவில் நெருக்கமான ஊர்தான் பூண்டி, அன்றாடம் 2 மணி நேரங்களை பயணத்தில் கழித்து நான் பணிக்குச் சென்றுவந்த போதும், பூண்டியிலேயே இருப்பதற்கான காரணம் இவ்வூருடன் எனக்கு அமைந்த பிணைப்பு. என்றபோதிலும், எவரேனும் ”உன் சொந்த ஊர் எது?” என கேட்கும்போது அன்னிச்சை செயலாகவே கூறிவிடுவேன் “காங்கேயம்பாளையம்” என்று. பணி நிமித்தம் சென்னையில் நான் ஏறத்தாழ 5 வருடங்கள் கழித்த தினங்களின் இரவுகள், என்னுள் பூண்டியின் நினைவுகளை கிளர்த்தியவை. இப்படி நாம் வசித்த ஊர் மீதான பிணைப்பும், நம் சொந்த மண்ணுடனான தொடர்ச்சியும் ஒருபோதும் நீங்காதவை.

“எனக்கிந்த ஊரே புடிக்கலடா, பேசாம நம்ம ஊர்ப்பக்கமே போயிடலாம்முண்ணு பாக்குறேன்” என்ற வாக்கியத்தை உச்சரிக்காத வெளியூர்வாசிகள் பாக்கியவான்கள். ஒரே நிலப்பரப்புக்குள், பெரும்பாலும் மிகக்குறைந்த மொழி , கலாச்சார வேறுபாடுகள் மட்டுமே நிலவும்போதே இத்தகைய இடர் என்றால், போரின் காரணமாகவோ அல்லது பணி நிமித்தமாகவோ வேறு நாடுகளில் வாழ நேர்ந்த மனிதர்களும் அவர்கள் குடும்பமும் சந்திக்கும் பிரச்சனைகள் எண்ணிலடங்காதவை.

*

அகதிகளாகவோ அல்லது பணி நிமித்தமோ, பிற நாடுகளுக்கு புலம் பெயர்ந்த பத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து, அதை தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார் எழுத்தாளர். நரேன். தொகுப்பின் பெரும்பாலான கதைகள் புலம்பெயரிகளின் இருத்தல் / கலாச்சாரம் சார்ந்த சிக்கல்கள் மற்றும் உறவுகளுக்கிடையேயான சிக்கல்களைப் பேசுபவை.

*

”கெயிட்டா”வுக்கு ஏற்கனவே திருமணமானது தெரிந்துதான் ”ந்னாம்” அவரை மணம் புரிந்துகொண்டாள். அவனது முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தைகளை பார்த்துக்கொள்ள விரும்பும் ந்னாம், தன் சம்பாத்தியத்தில் கட்டும் வீட்டைக்கூட கெயிட்டாவின் பெயரில் பதிவு செய்யுமளவு அவன் மீது அன்பு கொண்டவள். கெயிட்டா அகால மரணமடைகிறான். அதன்பின் அவனது மறுபக்கம் தெரியவருவதும், கெயிட்டாவுடனான தன்னுடைய வாழ்க்கையை / உறவை ந்னாம் மறுபரிசீலனை செய்வதும் மாறி மாறி சொல்லப்படுகின்றன. அவனது நினைவை கிளர்த்தும் பொருட்கள், வாசனை என ஒவ்வொன்றையும் அகற்றும் ந்னாம்மின் சித்திரம் மிகவும் துல்லியமானது. உகாண்டாவுக்கும் மான்செஸ்டருக்குமான ஒரு ஊஞ்சல் பயணம் போல அமைந்திருக்கிறது “இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்” கதை. வாசிக்கும் போது, கொஞ்சம் கொஞ்சமாக கெயிட்டாவின் நினைவை வீட்டில் இருந்து அழிப்பதைப் போலவே தன் மனதிலிருந்தும் அழிக்கும் ”ந்னாம்” ஐ, அவள் தன் தகப்பனிடம் வீட்டைப் பற்றிக் கேட்கும் தருவாயில் அறியமுடிகிறது.

என்னுடைய வாசிப்பில், இந்தக் கதைக்கு இணை வைக்கக்கூடிய ஒரு கதையாக “மறைந்து கொண்டிருக்கிறாய், நீ” ஐ சொல்வேன். அழிவுக் காலத்தை நெருக்கும் பூமியிலிருந்து ஒவ்வொரு பொருட்களாக மறைந்துகொண்டிருக்கும் சூழலில், தன்னுடைய உறவும் (அல்லது தன்னுடைய இருப்போ) அப்படியே மறைந்து போகக்கூடிய சாத்தியத்தை எண்ணிக்கொள்ளும் கதை அது. இங்கிருந்து மறைபவை எல்லாம் இன்னொரு பக்கத்தில் சென்று சேர்ந்து காத்திருப்பவை எனும் வரி பலவகையில் விரிவடையும் சாத்தியம் கொண்டது.

தன் பெற்றோரை, இளமையை தொலைத்த தாய் தன்னுடைய இழப்பை தன் மகனுடன் கழிக்கும் பொழுதுகளால் சரி செய்கிறாள். மகன் வளர்ந்து பெரியவனாகும் போது, தன் அன்னையின் மொழி, கலை எதுவும் அவனுக்கு போதாமலாகிறது. தான் இப்போதுள்ள நாட்டில் கிடைக்கும் விசயங்களை நோக்கி அவன் ஈர்க்கப்படுகையில் அவன் அன்னை மீண்டும் தனித்து விடப்படுகிறாள். அவனது தாயால் காகிதங்களில் செய்யப்பட்டு (ஒரகாமி) சிறுவயதில் அவனால் பெரிதும் விரும்பப்பட்டு, பின்னர் நவீன விளையாட்டுப் பொருட்களால் மறந்துபோன காகித மிருகங்கள் ஒருவகையில் அவனது தாய்தான், ஏன் நாமும்தான். தாயின் மரணத்துக்குப்பின் அவளது கடிதத்தை மகன் வாசிக்கும் தருணம் என்னை பெரும் தத்தளிப்புக்கு ஆளாக்கியது. ஒரு நள்ளிரவில்தான் நான் “காகித மிருக சாலை” எனும் இந்தக் கதையை வாசித்தேன். அந்தத் தாயின் இடத்தில், என்னால் எந்த உறவையும் பொருத்திப்பார்க்க முடிந்தது. உதாசீனப்படுத்தப்பட்டதன் வலி, துயரம் என்னை தூக்கமிழக்கச் செய்தது.  

ஒரு தந்தையின், இரு மனைவிகளின் குழந்தைகள், அவர்களுக்கு ஒரே பெயர் எனும் விசித்திரத் தகவலுடன் துவங்கும் கதை ”தந்தையர் நிலம்”. முதல் தாயுடன் வாழும் புவாங் (விவியன்), தன் தந்தையின் இரண்டாம் குடும்பத்துடன் கழிக்கும் தினங்கள், அவர்களுக்கென அவள் கொண்டுவந்திருக்கும் பரிசுகள், அவர்களை மகிழ்விக்க பெரும் தொகையை விவியன் செலவிடுதல், தன் பெயருள்ள புவாங்குடனான விவியனின் நேசம், புவாங்க்கிற்கான தனிப்பட்ட பரிசு, விவியனைப் போல தான் மாற எண்ணும் புவாங் என விரியும் கதை, ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தில், அந்தப் பயணம் போலவே மாறிவிடுகிறது. “என் தங்கையை பற்றி கவலைப்பட எனக்கு நேரமிருக்காது” எனும் விவியனின் கண்ணீர், அதன் மறு எல்லையாக, புவாங்கால் எரிக்கப்பட்ட புகைப்படங்களின் சாம்பல் காற்றில் மறையும் சித்திரம், என காட்டப்படும் மனதின் ஆழங்கள் ஒருபோதும் நான் அறிந்துவிட முடியாதவை.    

எந்த ஒரு உறவும் உடனடியாக அமைந்துவிடுவதில்லை. ஒருவருடனான நம் வாழ்க்கைப் பயணம் என்பது ஆயிரம் ஆண்டுகள் பிராத்திப்பதால் வரக்கூடியது. ஆனால், பரஸ்பரம் தேவைப்படும் போது, இல்லாது போகும் உறவுகள் முறிகையில் அந்தப் பிராத்தனைக்கான நியாயம் செய்யப்படுவதில்லை. சிறு குழந்தையாய் இருக்கையின் தன் மகளுக்கான சொற்களை மறந்து போன, தகப்பனின் சொற்களுக்கு மகளின் வாலிபத்தின் எந்தப் பொருளும் இருப்பதில்லை. நாடு விட்டு நாடு வந்த போதும் மொழியே புரியாத போதும், சிறிதுகாலம் மட்டுமே அறிந்தபோதும் தன் தோழியுடன் தன்னால் பகிர்ந்து கொள்ளக் கூடிய விசயங்களை, ஒரே மொழி தெரிந்தும், ஒரே தேசத்தில் இருந்து வந்திருந்தாலும், தன்னுடைய நீட்சிதான் என்றாலும் தன் மகளுடன் பகிர்ந்துகொள்ள முடியாத ஒரு “ராக்கெட் சயிண்டிஸ்ட்” பற்றி நமக்குச் சொல்கிறது “ஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்” கதை.

யுத்தகாலத்தின் நிச்சயமின்மை, ஒவ்வொரு தனி மனிதனிலும் நேரும் அதன் விளைவுகள், ஏதேனும் ஒரு குருட்டு நம்பிக்கையில் துவங்கும் பயணங்கள், எதிர்பாரா இடத்திலிருந்து அருளப்படும் ஒரு பற்றுக்கோல், அனைத்திலும் மேலான மனித மனத்தின் விளங்கிக்கொள்ள முடியாத இருட்டு என பல படிகளாக விரியும் கதை “ஒரு நேர்மையான வெளியேற்றம்”.

*

இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் அருமையான வாசிப்பனுபவம் தருபவை. இத்தொகுப்பில், என்னை மிகவும் பாதித்த, தொந்தரவுக்குள்ளாக்கிய கதைகள் என ”காகித மிருக சாலை”, “இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்”, “ஆயிரமாண்டுப் பிராத்தனைகள்”, “தந்தையர் நிலம்”, “ஃப்ராவோவிலிருந்து ஒரு சவாரி”  கதைகளைச் சொல்வேன்.

*

ஒவ்வொரு கதையின் துவக்கத்திலும் தரப்பட்டுள்ள எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள், அந்தக் கதைகளை நாம் புரிந்துகொள்வதற்கு உதவுகின்றன. இந்தக் கதைகள் நிகழும் பிரதேசங்கள் குறித்த சிறு புரிதல் இருப்பவர்களுக்கு இந்தக் கதைகள் இன்னும் அணுக்கமாக அமையக்கூடும். இந்தப் பத்து எழுத்தாளர்களும் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல் முறை. அவ்வகையில் பத்துகதைகளை மட்டுமல்ல, பத்து எழுத்தாளர்களை தமிழுக்கு, தன் அற்புத மொழிபெயர்ப்பால் அறிமுகப்படுத்தியுள்ளார் எழுத்தாளர். நரேன்.

ஓநாய் குலச்சின்னம்

Jiang Rong அவர்கள் எழுதிய Wolf Totem நாவல் தமிழில் திரு.சி.மோகன் அவர்களால் “ஓநாய் குலச்சின்னம்” என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒரு மொழிபெயர்ப்பு நூல் எனும் எண்ணம் எழாதவண்ணம், சரளமாக வாசிக்கக்கூடிய வகையில் அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார் திரு.சி.மோகன் அவர்கள்.

அந்நாவல் குறித்த எனது வாசிப்பனுபவம்.
------------------------------------------------------------------------------------------------
மனிதர்களின் தேவையை செயற்கையாக வளர்த்து, அதை மையப்படுத்தப்பட்ட பெரிய உற்பத்தி முறைகளால் ஈடு செய்யப் பார்க்கிறோம். இதனால் பேராசையும், பொறாமையும் பகையும் தான் வளர்கின்றன. இதுவே தேசங்கள் இடையேயான பகையாக, போராக வளர்கிறது. நிலையான சமாதானமே காந்திய முயற்சி. இது நமது பொருளாதார சிந்தனையில் மாற்றத்தை வலியுறுத்துகிறது 

 -ஜே.சி.குமரப்பா (’சீனாவில் ஜே.சி.குமரப்பா’ நூலிலிருந்து) 

 **

சில வருடங்களுக்கு முன்பாக, ஈமு கோழி வளர்ப்பில் பணத்தை முதலீடு செய்து “சிரிக்கும்” அளவுக்கு மட்டுமே நட்டத்தை சந்தித்திருந்த நண்பன் சொன்னான் “அது மாப்ள, நம்மாளுகளுக்கு இந்த ஈமூ கறி ருசி புடிபடல. அப்புடி மட்டும் கறி ருசி புடுச்சிருந்தா அம்புட்டையும் தின்னே தீத்திருப்பாங்க” அப்போது அனைவரும் வெடித்துச்சிரித்தோம். பின்னர் யோசித்துப் பார்த்தால் அது உண்மைதான். நம்முடைய நுகர்வு வெறியின் எல்லை கற்பனைக்கு அப்பாற்பட்டது.
*
சீன – மங்கோலிய எல்லையில் அமைந்த மேய்ச்சல் நிலம். அங்கு குதிரைகள் வளர்க்கும் மேய்ச்சல் நில மக்கள். அவர்களின் குதிரைகளை கொன்று தின்னும் எதிரியாகவும், அதேசமயம் அவர்களால் குலச்சின்னமாக போற்றப்படும் ஓநாய்கள். இந்த, மேய்ச்சல் நிலம், அதன் மேய்ப்பர்கள், குதிரைகள் மற்றும் ஓநாய்கள் இவற்றின் வாழ்க்கையில் மீது நவீன மனது தொடுக்கும் போர் மற்றும் அதன் விளைவுகளை அற்புதமாக காட்சிப்படுத்தும் நாவல் ”ஓநாய் குலச்சின்னம்”.

 மனிதனின் நுகர்வு, எல்லை தாண்டும்போது நேரக்கூடிய தீங்கை, அது ஏற்படுத்தக்கூடிய சமநிலைக் குலைவை நாவல் முழுவதும் சொல்லிக்கொண்டே வருகிறது பில்ஜியின் குரல். குறிப்பாக, மேய்ச்சல் நிலத்தில் வேளாண்மையை அறிமுகப்படுத்த எண்ணும் பாவோ, அதற்குக் காரணமாக தன் சொந்த ஊர் மக்களின் தானிய பற்றாக்குறையைக் கூறுகிறார். கூடவே, சின்ன இடத்தில் மட்டுமே கட்டுப்பாடாய் வேளாண்மை செய்யப்போவதாய் சமாதானப்படுத்துகிறார். அதற்கு பதில் சொல்லும் வகையில், ”பின்னால் வரும் தலைமுறைகளிடம் இந்தக்கட்டுப்பாடு இருக்காது” எனக் கவலை கொள்ளும் பில்ஜியின் குரலுக்கு நம் சமகாலமே சாட்சி. ஓநாய்களால் கொல்லப்பட்ட மான்களை சேகரிக்கும் போது, ஆடு மேய்ப்பவனான சஞ்சாய், இன்னும் நிறைய மான்கள் கொல்லப்பட்டிருந்தால் தன்னுடைய திருமணத்துக்கு அது மிகவும் உதவிகரமானதாக இருந்திருக்கும் என சொல்கிறான். இந்தப் பேராசை, அவனுடைய மகன்கள், பேரன்களின் திருமணத்தின் போது மான்கள் இருப்பை ஒளித்துவிடும் எனக் கண்டிக்கிறார் பில்ஜி. இப்படியாக, நாவல் முழுவதிலும் இயற்கையின் சமநிலையைப் பேண வேண்டிய அவசியத்தை பில்ஜி நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
*
மங்கோலியர்களைப் பொறுத்தவரை ஓநாய்தான் அவர்களுக்கு குலச்சின்னம் போன்றது. அதனிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான நற்பண்புகள் இருக்கின்றன. அவர்களது பெருமையின் அடையாளமாக நாவலில் சுட்டிக்காட்டப்படும் “செங்கிஸ்கான்” கூட ஓநாயின் தந்திரங்களை பயன்படுத்தியவர்தான். இவற்றையெல்லாம் விட, மரித்துப்போன மங்கோலியனின் ஆன்மாவை டெஞ்ஞருக்கு (சொர்க்கத்துக்கு / கடவுளுக்கு) அனுப்பும் தூதுவனும் ஓநாய்தான். ஆனால், ஒரு நவீன சீனனுக்கோ ஓநாய்கள் மேய்ச்சல் நிலத்தின் உற்பத்தித்திறனுக்கு, அங்கு வளரும் அற்புதமான குதிரைகளுக்கு எதிரானவை. அவை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டியவை. மங்கோலியனாக இருந்தபோதும், ஒட்டுமொத்த ஓநாய்களையும் கொன்றொழிக்கும் வெறியுடன் இருக்கும் பாவோ, ஒரு ராணுவப் பிரதிநிதியின் பணியை செவ்வனே முழுமனதுடன் நிறைவேற்ற முடிகிறது. மங்கோலியர்களின் அறியாமையைப் போக்க வரும் ஹேன் சீனனான “ஜென் சென்”, அலைக்கழிப்புகளுடன் படிப்படியாக பாதி மங்கோலியனாகிறான். இந்த ஒப்புமையை ஓநாயிலிருந்து நாய் எனப் பரிணாம வளர்ச்சி பெற்ற பாவோ எனவும், நாய்க்குள் (பல போதாமைகளுடன்) இருக்கும் ஓநாய் எச்சங்கள் ஜென் எனவும் சொல்லமுடியும்.
*

தாங்கள் இருக்கும் இடத்தை தங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் வேளாண் மக்கள், நிலப்பரப்புக்கு கூடுமானவரை எந்தச் சேதமும் எழாமல், தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் மேய்ச்சல் நிலமக்கள் என இருவரின் பார்வைகளும் எதிரெதிர் முனைகள். மனித நலன் மட்டுமே பிரதானம் என எண்ணும் நவீன மனம். மனிதனும் இயற்கையின் ஒரு எளிய அங்கமே எனக்கருதும் பழங்குடி மனம். அந்த மனதால் மட்டுமே இயற்கையின் ஆகப்பெரிய உயிர் மனிதனல்ல, பெரும் விலங்குகள் அல்ல, ஒரு புல்தான் என எண்ணமுடியும்.

*

நாவலின் மிக முக்கியமான அம்சம், ஒரு ஓநாய்க்குட்டியை கைப்பற்றி வந்து ஜென் வளர்ப்பது. நாய்களுடன் வளர்க்கப்படும் ஓநாய், அன்னை நாயிடம் பாலருந்தும் தருணங்களிலும், பிற நாய்களுடன் இணைந்து விளையாடும் தருணங்களிலும் ”சமத்தாக” இருந்தபோதும், தான் ஒரு ஓநாய் என்பதை ஒருபோதும் கைவிடவில்லை. உதாரணமாக, தன் குழிக்குள் வைக்கப்பட்ட இறைச்சித் துண்டங்களை “வேட்டையாடும்” தருணம், படிப்படியாக ஒரு ஓநாயைப் போல ஊளையிடும் தருணம் இவற்றைச் சொல்லலாம்.

அடிபட்ட தன் ஒரு காலை துண்டாக்கிவிட்டு தப்பித்து ஓடும் ஓநாயின் செய்கை, அடிமைத்தனம் அல்லது மரணம் என்றால் ஒரு ஓநாய் இரண்டாவதையே தேர்வு செய்யும் ஆன்ம பலம் இவற்றை ஒரே நேர்கோட்டில் வைத்து புரிந்துகொள்ளலாம். அடிமைத்தனத்துக்கு பதிலாக மரணத்தை தேர்வு செய்யும்போது அந்த ஓநாய் மட்டுமே மடிகிறது. அதன்மூலம், அது அடிமைத்தனத்தை தன் சந்ததிகளுக்குக் கடத்தும் பேராபத்தில் இருந்து தன் குலத்தைக் காக்கிறது.

நுகர்வுக்கு ஏற்ப வேட்டை, வயதான / நோய்வாய்ப்பட்ட ஓநாய்களுக்கு என மாமிசங்களை விட்டுப்போதல், முதல் வேட்டையை வயதான ஓநாய்க்குத் தருதல், வேட்டைத் தந்திரங்கள் என பல குணாதிசயங்களை ஓநாய்களின் செய்கைகள் கற்றுத்தருகின்றன.

இயற்கையின் ஆகப்பெரிய உயிர் மனிதன் எனக் கருதும் நவீன வேளாண் மனது, உலகின் மிகப்பெரிய உயிர் புல்தான் என எண்ணும் மேய்ச்சல் மனதை பக்குவப்படுத்துவதில் வெற்றியை அடைகிறது. எல்லா ஓநாய்க்குட்டிகளுக்கும் ஓநாயாகவே மரணிக்கும் வாழ்வு வாய்ப்பதில்லை. 

ஓநாய் குலச்சின்னம் - ஜியாங் ரோங் (ஆசிரியர்)
சி.மோகன் (தமிழில்) - அதிர்வு பதிப்பகம்