title


புலிநகக் கொன்றை

காலம் தனக்குள் அடக்கிவைத்துள்ள மர்மங்கள் யாராலும் கணிக்கவியலாதவை. ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் (குறிப்பாக படுத்த படுக்கையாய்) வயது முதிர்ந்தவர்களுக்கு, தாங்கள் கடந்துவந்த வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை வாழ்ந்து பார்க்கும் அனுபவம் (கொடுமை??) கிடைக்கும். ஒரு நல்ல நாவலை வாசிப்பதும் கிட்டத்தட்ட அதற்கு நிகரான அனுபவம்தான். என்ன ஒரு சின்ன வித்யாசம், அடுத்தவர்களது வாழ்க்கையை நாம் வாழ்ந்து பார்க்க முடியும். ஏறத்தாழ கூடுவிட்டு கூடு பாய்வதைப்போல. அந்த உன்னதத்துக்காகவே கவிதையைவிட, கட்டுரையைவிட தனிப்பட்ட முறையில் என் தேர்வாக இருப்பவை நாவல்கள் (என்றாலும் வரலாறும், சுயசரிதமும் கொஞ்சம் special).

என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் முற்படுத்தப்பட்ட(பிராமண) சமூகத்தை, அவர்களின் வாழ்க்கைமுறையை பதிவுசெய்த நாவல்கள் கொஞ்சம் குறைவுதான். ஆனால், மிகச்சிறந்த முறையில் அவர்களது வாழ்வியலை திரு பி.ஏ.கிருஷ்ணன் தனது “புலிநகக் கொன்றை” நாவல் மூலமாக காட்சிப்படுத்தியுள்ளார். நாவலின் அடிப்படை என்னமோ, தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் (உண்டியல் கடைக் குடும்பம்) நான்கு தலைமுறை வாழ்க்கையைச் சொல்வதுதான்; என்றாலும் அப்படி போகிறபோக்கில் நாவலை சுருக்கிவிட முடியாது. அதற்கு முக்கியமான காரணம், உண்டியல் கடைக் குடும்பத்தின் வரலாறோடு கூடவே அந்தந்த காலகட்டத்தின் அரசியல் / சமூகப்பார்வையும், முக்கிய நிகழ்வுகளும் ஆவணப்படுத்தப்பட்டிருப்பதுதான். அதிலும் சிறப்பு எந்த நிகழ்வும் துருத்திக்கொண்டிராமல் கதையின் போக்கிலேயே புனையப்பட்டிருப்பது.

உண்டியல் கடைக் குடும்பத்தின் வாரிசு “ராமன்”; வெறும் ராமனல்ல, சாப்பாட்டு ராமன். ராமனுக்கு மட்டும் எண்ஜான் உடம்புக்கு வயிறே (நாக்கே??) பிரதானம். உண்பதன்றி வேறொன்றும் அறியாதவன். எல்லா உதவாக்கரைகளுக்கும் எப்படியோ கிடைத்துவிடும் பொறுப்பான மனைவி பொன்னா. அவர்களின் மூன்று பிள்ளைகள் நம்மாழ்வார், பட்சி, ஆண்டாள். ஆண்டாளின் பிள்ளைப்பிராயத்தில் நடந்த திருமணம் அவளுக்கு பரிசளித்தது கைம்பெண் வாழ்க்கையை. நம்மாழ்வாரின் சந்ததி அவர் மகன் மதுரகவி, மதுரகவியின் மகன் நம்பி, நம்பியின் மகள் இந்து. ஆனால் மதுரகவி பிறந்தபின் விட்டைவிட்டு நம்மாழ்வார் கிளம்பிவிட; நம்பி பிறந்தபின் மதுரகவி ஒரு அரசியல் போராட்டத்தில் மரணமடைய; இந்து பிறந்தபின் ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை ”விசாரித்ததில்” கம்யூனிஸ்ட் ஆதரவாளரான நம்பி இறந்துவிடுகிறார். மொத்ததில் நம்மாழ்வாரின் சந்ததியும் ஆண்டாளின் வாழ்வும் குறைப்பட்டு நிற்க, உண்டியல் குடும்பத்தின் சந்ததியில் ஓரளவு நிறைவான வாழ்க்கை வாய்த்தது பட்சியின் வம்சத்துக்கு மட்டுமே.

வீட்டை விட்டு சென்ற நம்மாழ்வார் திரும்பிவந்து தன் அந்திமக்காலத்தை கொள்ளுப்பேத்தியுடன் கழிக்கிறார். நம்மாழ்வாரின் சந்ததியில் இளையவர்கள் யாவரையும் மரணதேவதை வட்டமிட, சாகும் தருவாயிலிருக்கும் நம்மாழ்வாருக்கோ மரணம் தள்ளிப்போகிறது. ஒரு கட்டத்தில் தன்னுடையே நீண்ட ஆயுளுக்கு காரணம், தன் குடும்பத்தின் இளையோர்களின் ஆயுளும் தனக்கு சேர்ந்துவிட்டதால்தானோ என எண்ணுகிறார் நம்மாழ்வார். ஒருவகையில் பொறுப்புகளை துறந்த நம்மாழ்வாருக்கான மாபெரும் பாரம் இந்த எண்ணம்தான். இன்னொருபக்கம், அருகிருந்து கவனித்துக்கொண்ட பட்சியை விடவும் நம்மாழ்வாரின் மீதே பொன்னா பாட்டியின் பாசம் “மந்தை தவறிய ஆட்டையோ” அல்லது “தாய்க்கு தலைமகனையோ” நினைவூட்டுகிறது.

கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளின் கதை என்றபோதும், கதைசொல்லலில் தென்படும் நேர்த்தியின் காரணமாக, மிக எளிதாக நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது “புலிநகக் கொன்றை”. மிகச் சிறந்த வாசிப்பனுபவம் தரும் இந்நாவல் அவசியம் படிக்கவேண்டியது.

புலிநகக் கொன்றை
பி.ஏ.கிருஷ்ணன்
காலச்சுவடு
ரூபாய் 250


ஏழுமலை ஜமா


பெரும்பாலும் பொழப்புக்காக சொந்த ஊரை விட்டு தூர தேசங்களிலும் வெளியூர்களிலும் சென்று அவஸ்த்தைப்படுபவர்கள் பெருகிவிட்ட காலகட்டம் இது. அவர்கள் எல்லாருடைய மனதிலும் சொந்த ஊர் குறித்த ஒருவித பெருமை, ஏக்கம் நிறைந்திருக்கும். இன்னும் சொல்லப்போனால் கணிணித்துறையில் கைநிறைய(?) சம்பாதித்தாலும் “ஒனக்கென்ன மாப்ள ஊரோட செட்டிலாயிட்ட” என மளிகைக்கடை நண்பனிடம் பொறாமை பேசுபவர்கள் நாம். நல்ல சம்பாதித்யத்துடன் வசதியான வாழ்க்கை வாழும் மக்களுக்கே சொந்தஊர் மீதான மோகம் மிகுந்திருந்தால், கிராமங்களில் கெளரவமாக வாழ்ந்துவிட்டு, நகரத்தின் நெரிசலில் மானம் மரியாதையை நசுங்கவிட்டவர்கள் மனம் எவ்வளவுதூரம் புழுங்கும்? கையளவு நிலமாக இருந்தாலும் சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்துவிட்டு, வளமும் வானமும் பொய்த்துப்போய், மேஸ்த்திரியின் வசவுக்கு மத்தியில் செங்கல் சுமக்கும் முன்னாள் முதலாளியின் கண்ணீர் மட்டும்தான் அதை அறியும். இதையெல்லாவற்றையும் விட மோசமானது, சொந்த ஊர் மட்டுமின்றி, சுற்றியுள்ள பல ஊரிலும் ஒரு நாயகனாக வாழ்ந்துவிட்டு, பிழைப்புக்காக அவமரியாதையை சகித்துக்கொண்டு வாழ்வது.

அந்த மனவலியை பதிவு செய்திருக்கும் அற்புதமான ஒரு கதை “ஏழுமலை ஜமா”. திரு. பவா செல்லத்துரை அவர்களின் “நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை” எனும் தொகுப்பில் (வம்சி பதிப்பக வெளியீடு) இடம் பெற்றுள்ள கதை இது.

 

தமிழகத்தின் திருவிழா இரவுகளை கூத்துக்கலை அலங்கரித்த காலகட்டத்தில், சுத்துப்பட்டு ஊர்களில் கொடிகட்டிப் பறந்த கூத்து வாத்தியார் ஏழுமலை. சென்ற ஊர்களிலெல்லாம் விடிய விடிய கூத்து நடத்தி மக்கள் மனதில் ஒரு நாயகன் அந்தஸ்த்தில் வாழ்ந்த ஏழுமலை, கால மாற்றத்தால் கூத்தின் மவுசு குறைந்துபோனதால், பெங்களூரில் மூட்டை சுமப்பவனாக இருந்துவிட்டு, அவமானம் சகிக்காமல் மீண்டும் சொந்த ஊர் திரும்பும் இடத்தில் துவங்குகிறது கதை. மொத்தமே ஏழு பக்கங்களுக்குள் அடங்கிவிடும் கதையில் ஏழுமலையின் மார்க்கெட் வாழ்க்கை குறித்தோ அங்கு அவன் சந்தித்த அவமானம் குறித்தோ பெரும் விவரணைகள் ஏதுமில்லை. தன் மகன் வயதொத்த ஒருவனால் ஒருமையில் ஏழுமலை அழைக்கப்பட்ட ஒரு நிகழ்வும் தொடர்ந்து சில குறிப்புகளும் மட்டுமே உண்டு. ஆனால், ஏழுமலையின் மனவலி உணர்த்த அவையே போதுமானதாக உள்ளது. அதேபோலவே ”கூத்து” நடத்திக்கொண்டிருந்த ஏழுமலையின் சுகவாழ்க்கையும் சில பத்திகளில் விளக்கிவிடுகிறார் திரு.பவா செல்லத்துரை.

சொந்த ஊருக்குத் திரும்பி வந்து தன் பழைய சகாக்களை சந்திக்கிறார் ஏழுமலை. கதாபாத்திரங்கள் எல்லாரும் கூலிகளாகவும், தரகர்களாகவும் மாறிவிட்டதால், மனம் நொந்துபோய் குடித்துவிட்டு திருப்பிவரும் வழியில் ஏழுமலைக்கு தொலைவில் நடக்கும் கூத்துப்பயிற்சியின் சத்தம் கேட்கிறது. உடம்பெல்லாம் காதுகளாகி, காதே உடம்பாகி சைக்கிளுடன் பயிற்சி நடக்கும் இடத்தை அடைகிறார் ஏழுமலை. அங்கு தப்பும் தவறுமாக நடக்கும் பயிற்சி கண்டு கொதித்து, ஆடி களைத்துவிழும் ஏழுமலையை அவர்கள் அணைத்துக்கொள்வதாக முடிகிறது கதை. திரு. பவா செல்லத்துரையின் வார்த்தைகளில் நீங்கள் ஏழுமலையின் கதையை வாசித்து…. அல்ல அல்ல வாழ்ந்து பாருங்கள்.

“மாப்ள எங்கூர்ல என்னப்பத்தி கேட்டுப்பாத்தா தெரியும், ராசா மாதிரி இருந்தேன், என் போறாத காலம் இவங்கிட்டெல்லாம் ஏச்சுப்பேச்சு வாங்க வேண்டியிருக்கு” எனச்சொல்லும் எல்லாருக்குள்ளும் ஒரு ஏழுமலை இருக்கக்கூடும்.