title


ஆதிரா என்றொரு தேவதை

ஆரஞ்சுடன் சேர்த்து
விதையையும் உண்ட ஆதிரா
பயத்திலேயே தூங்கிப் போனாள்

வயிற்றில் முளைத்த
விதை விருட்சமாகி
தலை வழியே வெளிவந்தது

மரமெல்லாம் ஆரஞ்சு பழங்களுடன்
ஒரு தேவதையாக வலம்
வந்த ஆதிரா…
விடிந்த பின் விழித்தெழுந்து
மரம் தேடி அழுதாள்..

ஆதிராவுக்காய் காத்திருந்தன
ஆரஞ்சு தோட்டங்கள்
கனவுலகில்….

**

தன் கனவில் வரும் பூக்கள் மீது
கொள்ளை ப்ரியம்
ஆதிராவுக்கு….

பெருங்கொண்ட சுகந்தம்
வீசும் மென்மலர்கள்…

அவளுக்கு மிகப்பிடித்த நிறங்களில்…
எப்போதும் புதிதாக வாடாமல்…
செல்ல மலர்களுக்கு
என்ன பெயர் வைப்பதென்று

குழம்பித் தவித்தாள் ஆதிரா….

”தேவதை” என பெயரிட்டிருந்தன
மலர்கள் ஆதிராவுக்கு

விண்ணப்பம்

என்னுடைய கனவுகளை
மட்டுமாவது
விட்டுவையுங்கள்
பேரழகூட்டுபவை என்றாலும்
உங்கள் ஒப்பனைகள்
அதற்குத் தேவையில்லை..

என் கனவுகளுக்கு
நிர்வாணம் போதுமானது
அது உங்கள் பளபளக்கும்
ஆடைகளை யாசிக்கவில்லை…

என் கனவுகள் கொஞ்சம்
சவலையானவையாகவே இருந்தாலும்
உங்கள் ஊக்கமருந்துகள்
உங்களிடமே இருக்கட்டும்

என்னுடைய கனவுகளின்
அடிப்படையே கூட
தவறானதாயிருக்கலாம்
தத்துவங்களின் விசாரணைகளிலிருந்து
அதற்கு மட்டும் கொஞ்சம்
விலக்களியுங்கள்

அய்யன்மீர்….

தயைகூர்ந்து புரிந்துகொள்ளுங்கள்…
என்னிடமிருப்பது ஒரேயொரு வாழ்க்கை
என் கனவுகளை மட்டுமாவது
என்னிடம் தாருங்கள்


ஆம்…
கனவுகளை மட்டுமாவது