title


கவிதைகள் - பிப்ரவரி 2014

மரண தண்டனை

மிகப்பெரிய சதிவலையில்
எதிர்பாராது சிக்குபவனை
நாம் சட்டத்தின் பெயரால்
தூக்கிலிடலாம்….

எவ்வித திட்டமிடலுமின்றி
அறியாமல் தவறிழைத்தவனையும்
நாம் சமன்பாடு கருதி
சாகடிக்கலாம்…

வெஞ்சினத்தால் முடிவெடுத்து
கொடும் கொலை புரிந்தவனையும்
நாம் மனிதத்தின் பெயரால்
மன்னித்து அருளலாம்…


செய்தவன்
மனிதனா, இல்லையா
என்பதல்ல பிரச்சனை

நாம் யார் என்பதுதான்….

யாசகம்

குளிரேறிய அறையிலும்
உறங்கவிடாமல் தகிக்கும்
வெம்மையை மாற்றவும்

வெகு சொகுசான பஞ்சணையில்
விரவி நிற்கும்
நினைவு முட்களைக் களையவும்

ஆகக் கசப்பேறிய
துரோகத்தின் இரவை
குறைந்தபட்ச வலியுடன் கடக்கவும்

தானமிடுங்கள் எவரேனும்….

அன்னையின் அருகாமையை
தூய காதலின் அரவணைப்பை
ஒரு பறவையின் சிறகசைப்பை
ஒரு குழந்தையின் முத்தத்தை
குறைந்த பட்சம்
கபடமற்ற புன்னகையை


தானமிடுங்கள் எவரேனும்….

ஒப்பாரி

அந்தப்புர மஞ்சத்தில்
முதல் அபலையின்
கண்ணீர் விழுந்த நாளில்
பிறந்தது

பல்லாயிர வருட
பெருமை பேசும்
ராஜ்ஜியங்களின் அஸ்தமனம்

அந்நாளில்தான்
ஆதி சூதனின் மனம்
கருவுற்றது
முதல் சொல்லை...

நான்கு கவிதைகள்

பெருவலி


வலக்கையிலிருந்து இடக்கைக்கு
இடமிருந்து வலமாக
தென்றலில் பூப்போல
புயல் கண்ட மரமாக
பெரும் யோசனைக்குப்பின்
மாற்றி மாற்றி உருட்டினாலும்
பகடைக்குத் தக்கவாறு
தன்னை மாற்றி வழிமறிக்கும்
சர்ப்பங்கள்
நெருப்புடன் வாழ்வதே விதி
குதித்தாலும் ஆவியாகும்
பெருநதியும்


அரிதாரம்

1
மனதின் ஆழ்வெளியில்
நிரம்பவும்
கள்ளத்தனம் -
நாசூக்கால் மூடப்பட்டு
மூடியை எளிதாகக்
கழற்றுகிறது
தனிமை….

2
எப்போதும் யாராவது
உடனிருக்க
வேஷமிட்டு வேஷமிட்டே
வெறுத்தான் கோட்ஷே

இருப்பது சுலபம்
நடிப்பது கடினம்
காந்தியாக !

ICU தளம்

மிக நீண்ட வாராந்தாவில்
சோகத்தை
திப்பி திப்பியாய்
குமித்து வைத்தான்
கண்ணீர்க்கடலில்
கண்களையல்ல…..
முகத்தையே மூழ்கடித்தான்
கடந்து வந்த தவறுகள்
கணிக்க மறந்த நிகழ்வுகள்
வருந்தி அழ
வாய்ப்பளித்தான்
பல வருட சண்டைகள்
பார்க்க விடாத கோபங்கள்
கண்ணீரில் கரைய வைத்தான்
பழமொழிகள் தத்துவங்கள்
பகிர்ந்து உணரப்
பார்த்திருந்தான்
ஆனந்தமோ….
ஆசுவாசமோ….
அறிவிப்புகள் ஒலிக்கவைத்தான்

அனைத்தையும் மறக்கடிக்க
சிறு குழந்தையாய்
தானே வந்தான் !