title


கண்ணாடி


என் கண்களை 
மறைத்தபடி
பச்சைக் கண்ணாடி…

உன்னிடமிருப்பதோ
சிவப்புக் கண்ணாடி…

காணும் பொருள்யாவும்
பச்சையென்று 
நான் மெய்யுரைக்க…


பச்சையல்ல சிவப்பென்று
நீயும் மெய்யுரைக்க…

பொய்களிரண்டும் சண்டையிட்டன…

சண்டையிடும் பொய்களிடையே
காண்பார் யாருமின்றி மெளனமாய்
இருந்தது உண்மை… வெண்மை !

சிறுதுளி


புறங்கை மீதோ
உச்சந்தலையிலோ
அண்ணாந்து பார்க்கும்போது
முன் நெற்றியிலோ
அன்றி வேறெங்குமோ
பட்டுத் தெறித்துவிழும்
முதல் ஒற்றை மழைத்துளி
உணர்த்துவதேயில்லை…
காத்திருக்கும் கனமழையின்
அடர்த்தியை !

போலவே
ஒற்றைச் சொல்லும்
ஓராயிரம்
வருடச்சண்டைகளும் !